பக்கங்கள்

பக்கங்கள்

11 பிப்., 2016

திருத்தணி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் 25 பவுன் நகை பறித்த திருநங்கைகள்

 

 ஆந்திர மாநிலம் ஏகாம்பர குப்பத்தை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ராணி.  இன்று காலை இருவரும் திருநின்றவூரில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டனர். அவர்கள் திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலில் பயணம் செய்தனர்.

திருத்தணி ரயில் நிலையத்தில் ரயில் மெதுவாக புறப்பட்ட போது ராணி அருகே 2 திருநங்கைகள் வந்தனர். அவர்கள் ராணியிடம் பேச்சு கொடுத்தபடியே அவர் வைத்திருந்த கைப்பையை பறித்தனர்.

பின்னர் ஓடும் ரயிலில் இருந்து பிளாட்பாரத்தில் குதித்து தப்பி ஓடிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வராஜும் ராணியும் கூச்சலிட்டனர். இதற்குள் மின்சார ரயில் பிளாட்பாரத்தை தாண்டி வேகமாக புறப்பட்டு சென்றது. இதனால் பையை பறித்த திருநங்கைகளை பயணிகளால் விரட்டி பிடிக்க முடியவில்லை. அநத் பையில் 25 பவுன் நகை, 10 ஆயிரம் ரொக்கம் இருந்தது. இது குறித்து ராணி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருத்தணி ரயில் நிலையத்தில் திருநங்கைகள் பயணிகளிடம் பணம் பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.