பக்கங்கள்

பக்கங்கள்

6 பிப்., 2016

நடிகையை கொன்றது ஏன்? வில்லன் நடிகர் திடுக்கிடும் வாக்குமூலம்

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தின் கதாநாயகியான சசிரேகாவை தலை துண்டித்து கொலை செய்தது ஏன்
என்பது குறித்து வில்லன் நடிகர் ரமேஷ் சங்கர் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை போரூர் ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 5ம் தேதி இளம்பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக ராயலாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 30 நாட்களுக்குப்பிறகு கொலை செய்யப்பட்ட பெண் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை சசிரேகா (39) என்பது தெரியவந்தது.

           நடிகை சசிரேகா 

இதனையடுத்து அவரது கணவர் சினிமா வில்லன் நடிகர் ரமேஷ் சங்கர் (40), கேரளாவை சேர்ந்த லக்கியா (25) இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது ஏன் என்று ரமேஷ்சங்கர் காவல்துறையினர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது. சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன். ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தித்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன். இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். சசிரேகா ஏற்கனவே திருமணம் ஆனவர். 8 வயதில் ஒரு மகன் உள்ளான். அவரது கணவர் சாலமன் பிரபு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நான், சசிரேகா, அவரது மகன் மூவரும் மடிப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம்.
 
                                             வில்லன் நடிகர் ரமேஷ்சங்கர் - துணை நடிகை லக்கியா 

இந்நிலையில் எனக்கு வளசரவாக்கத்தை சேர்ந்த லக்கியா (22) என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் சசிரேகாவுக்கு தெரியவந்ததும் என்னிடம் தகராறு செய்தார். இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் அவரது மகனை நான் கடத்தி சென்று விட்டதாக செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். காவல்துறையினர் எங்கள் இருவரையும் அழைத்து சமாதானமாக பேசி சேர்த்து வைத்தனர். இதனையடுத்து நான் மனைவி சசிரேகா உடன் குன்றத்தூர் அருகே உள்ள மதனந்தபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கினேன். லக்கியாவின் தொடர்பை விடமுடியாததால் மனைவி இல்லாத சமையத்தில அவரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவேன். கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி லக்கியாவுடன் சேர்ந்து இருந்த போது சசிரேகா பார்த்துவிட்டார். என்னிடம் தகராறு செய்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். லக்கியாவை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு நான் சசிரேகாவை சமாதானப்படுத்தி மதநந்தபுரத்திலே தங்க வைத்தேன்.

அன்றைய தினம் இரவு லக்கியா உடன் சேர்ந்து எனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவரது தலையை வெட்டி கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரம் அருகிலுள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன்" என்று ரமேஷ்சங்கர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதாள சாக்கடைக்குள் கிடந்த சசிரேகாவின் தலை

இந்த கொலை வழக்கில் சசிரேகாவின் தலையை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் அதனை தேடும் பணியில் தீவிரமாக களம் இறங்கினர். தலையை வெட்டி வீசியதாக கொலையாளி ரமேஷ் சங்கர் சொன்னதன் பேரில் கெருகம்பாக்கம் ஏரியில் சென்று காவல்துறையினர் தலையை தேடினர். ஆனால் தலை கிடைக்கவில்லை. தலையை தேடும் பணியில் மோப்பநாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் கொளப்பாக்கம் ராமமூர்த்தி அவென்யூவில் உள்ள ஒரு பாதாள சாக்ககடைக்குள் மனித தலை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் அந்த இடத்திற்கு சென்று தலையை கைப்பற்றி விசாரணை நடத்திய போது அது சசிரேகாவின் தலை என்பது தெரியவந்தது. 

'நான் குடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்ற படத்தில் சசிரேகா கதாநாயகியாக நடத்துள்ளார். அதே படத்தில் ரமேஷ் சங்கர் வில்லனாக நடித்துள்ளார். கேரளாவை சேர்ந்த லக்கியா துணை நடிகை ஆவார். நடிகையை கொன்றது ஏன்? வில்லன் நடிகர் திடுக்கிடும் வாக்குமூலம்