பக்கங்கள்

பக்கங்கள்

3 மார்., 2016

7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் 
உச்சநீதிமன்ற உத்தரவு 
பின்பற்றப்படும் : ராஜ்நாத் சிங் 

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துப் பேசினார்.  அவர், தமிழக அரசின் கடிதம் குறித்து மத்திய அரசு ஆலோசிக்கும்.   7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்’’ என்று தெரிவித்தார்.  

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெக்ரிஷிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.  அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-  ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வி.ஸ்ரீதரன் என்ற முருகன், டி.சுதேந்திரராஜா என்ற சாந்தன், ஏ.ஜி.பேரறிவாளன் என்ற அறிவு ஆகிய 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதைத் தொடர்ந்து அவர்களையும், இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரையும் ஆயுள் தண்டனையில் இருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசு முன்வந்தது.

டெல்லி போலீஸ் சட்டப்பிரிவின்படி, புலன் விசாரணைக்காக இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு இருந்ததால், குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 432-ம் பிரிவை (தண்டனை குறைப்பை மாநில அரசு மேற்கொள்ள வகை செய்யும் சட்டப்பிரிவு) அமல்படுத்த மாநில அரசு முன்வரும்போது, அதன் 435-ம் பிரிவின்படி, மத்திய அரசை அந்த மாநில அரசு கலந்து பேச வேண்டும்.

அதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுவிப்பதற்கு மாநில அரசு முன்வந்து, அதுதொடர்பான கருத்தை மத்திய அரசு 3 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று 19.2.2014 அன்று தமிழக அரசு உங்களுக்கு கடிதம் எழுதியது.

தண்டனை குறைப்பு தொடர்பான கருத்தை தெரிவிப்பதற்கு பதிலாக, அப்போது இருந்த மத்திய அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவசர அவசரமாக வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

ஆனால் அந்த வழக்கில் உள்ள சட்ட அடிப்படையிலான கேள்விகளில் இருந்த முக்கியத்துவத்தை கருதி, கூடுதல் நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வுக்கு அந்த 3 நீதிபதிகளும் அனுப்பிவைத்தனர்.

அந்த வழக்கில் எழுப்பப்பட்ட சட்ட ரீதியான கேள்விகளுக்கு பதில் அளித்து விட்டு, மீண்டும் வழக்கை 3 நீதிபதிகளின் அமர்வுக்கு விசாரணைக்காக அனுப்பிவைத்து கடந்த 2.12.15 அன்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. ஆனால் அந்த வழக்கு இன்னும் விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில் அவர்கள் 7 பேரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்துவிட்டதாக கூறி, அதனால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு கொடுத்து உள்ளனர். இதில் நளினி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து, தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உள்ளார்.

இந்த 7 பேரின் மனுக்களை பரிசீலித்து, அவர்கள் அனைவருமே 24 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயிலில் இருந்துவிட்டதால், தண்டனையை குறைத்துவிட்டு அவர்களை விடுவிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்து உள்ளது.  இவர்களில் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த சூழ்நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 435-ம் பிரிவின்படி, தமிழக அரசின் முடிவு தொடர்பான விஷயத்தில் மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு எழுகிறது.

2.12.2015 அன்று சுப்ரீம் கோர்ட்டு தனது உத்தரவில், ‘‘435-ம் பிரிவில் கூறப்பட்டுள்ள ஆலோசனை என்ற வார்த்தை, தெரியப்படுத்துதல் என்பதோடு மட்டுமல்லாமல், மத்திய அரசின் அனுமதியைப் பெறுதல் என்ற அர்த்தத்தில் உள்ளது” என்று கூறப்பட்டு உள்ளது. இதை மறு சீராய்வு செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டை நாடுவதற்கான மாநில அரசின் உரிமையை விட்டுத்தரவில்லை என்பதை இதன் மூலம் கூறிக்கொள்கிறோம்’’என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார்.