பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2016

பிரசெல்ஸ் குண்டு வெடிப்பு: தமிழரை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்!

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பில் காணாமல் போனதாக கருதப்படும் தமிழரை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர்
ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ்சில், சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 35க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பின்போது, இன்ஃபோசிஸ் ஊழியரும், தமிழருமான ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். அவரைத் தேடும் பணிகளை, இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பெல்ஜியம் அரசு ஆகியவை இணைந்து மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், காணாமல் போனதாக கருதப்படும் ராகவேந்திரன் கணேசனை மீட்கும்படி, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ''தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன், தன்னுடைய பெற்றோருக்கு மூத்த மகன். அவரது இளம் மனைவி குழந்தை பிறந்ததை அடுத்து தற்போது சென்னையில் இருக்கிறார்.

அவரது மொத்த குடும்பமும் ஆழ்ந்த துயரில் உள்ளது. தன்னுடைய மகனை கண்டுபிடிக்கக் கோரி என்னிடம் உதவி கோரியுள்ளனர். கணேசனை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை மூலமாகவும், பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும், கவலையில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்திற்கு இது பெரும் உதவியாக இருக்கும்" என்று கூறி உள்ளார்.