பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

புத்தாண்டில் தமிழர்களின் கனவு மெயப்பட வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா

பிறந்திருக்கும் சித்திரைப் புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வும் புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், அதற்காக கனிந்திருக்கும்
சூழலை சரியான திசை வழி நோக்கி நகர்த்தி செல்ல எமது மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமது கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்ற எதிர்கால நம்பிக்கையுடனேயே எமது மக்கள் பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டையும் வரவேற்று கொண்டாடி மகிழ்கிறார்கள். அரசியல் உரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது மக்கள் தமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் முகமுயர்த்தி நிற்க வேண்டும்!
அழிவுகளில் இருந்தும் சிதைவுகளில் இருந்தும் எமது தேசம் மேலும் நிமிர்ந்தெழுந்தெழ வேண்டும்!
எமது தேசத்தில் எமது மக்கள் சகல வாழ்வுரிமைகளும் பெற்று மகிழ வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் மேலும் வளப்படுத்தப்பட வேண்டும். எமது நிலம் எமக்கே சொந்தம் என்ற உரிமையுடன் எஞ்சிய எமது மக்களும் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேற வேண்டும்! மீள்குடியேறிய மக்கள் யாவரும் இன்னமும் பெறவேண்டிய வாழ்வாதார வசதிகளை பெற்று நிமிர வேண்டும்!
காணாமல் போனவர்கள் குறித்து உடன் விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் அதற்கு பரிகாரங்கள் காணப்பட வேண்டும்.
அரசியல் கைதிகள் சிறை மீட்கப்பட்டு பொது வாழ்வில் இணைக்கப்பட வேண்டும். மேலும் அச்சமற்ற சூழல், அடிமையற்ற வாழ்வு, வறுமையற்ற வாழ்வியல் எழுச்சி இவைகளே எமது மக்களின் ஆழ்மனங்களில் குடிகொண்டிருக்கும் கனவுகளாகும்!
இவைகளை அடைவதற்கு மதிநுட்ப சிந்தனையும். சாணக்கிய தந்திர நடைமுறை யதார்த்த வழிமுறையும் எமது மக்களை வழிநடத்தி செல்ல வேண்டும். அதை ஏற்று எமது மக்கள் இன்னமும் முழுமையாக அணிதிரளும் போது இனி பிறந்து வரும் ஒவ்வொரு புத்தாண்டும் எமது மக்களின் வாழ்வில் படிப்படியான முன்னேற்றங்களையே தந்துகொண்டிருக்கும். இவைகளே பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்களுக்கு நாம் காட்டும் எமது நம்பிக்கை ஒளியாகும்.
எமது மதிநுட்ப சிந்தனை வழி நின்று எமது மக்களின் கனவுகளை எட்டிவிடும் சூழலை இனிவரும் காலங்கள் நம் கையில் தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.