பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2016

முதல் வெற்றியை பதிவு செய்தது பெங்களூர்

IPL-2015-RCB-Team-Squad
9வது ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணியின் இளம் வீரர் சர்பிராஸ் கான் காட்டிய அதிரடி
ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு தொடக்க வீரர்களாக கோஹ்லி, கெய்ல் களமிங்கினர். கெய்ல் வான வேடிக்கை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் கோலி, டிவில்லியர்ஸ் அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இதனால் அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது. கோலி 51 பந்தில் 75 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 3 சிக்சர்), டிவில்லியர்ஸ் 42 பந்தில் 82 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பின்னர் வந்த வாட்சன் ’ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து 8 பந்தில்19 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய 18 வயதேயான சர்பிராஸ் கான் அதிரடி காட்டினார். அவர் 19வது ஓவரில் 5 பவுண்டரி, 1 சிக்சர் என பறக்கவிட்டார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 28 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்பிராஸ் கான் 10 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 35 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 227 என இமாலய ஓட்டங்களை எட்டியது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் பெங்களூர் அணி 45 ஓட்டங்களால் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.