பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2016

தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை பறிகொடுத்த நபர்: யாழில் மோசடி

இலங்கையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவம் ஒன்றில் பெருமளவு பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி யாழ்.ஆணைக்கோட்டை-
மடத்தடி பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து 36ஆயிரம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் காலை 11மணியளவில் மேற்படி ஆணைக்கோட்டை மடத்தடி பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உங்களு க்கு 10 மில்லியன் ரூபாய் பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், அந்த பணத்தை பெறுவதற்கு 50 ஆயிரம் பணம் 3 வங்கி கணக்குகளுக்கு வைப்பிடப்படவேண்டும் எனவும் 100ரூபா பெறுமதியான 10 மீள் நிரப்பு தொலைபேசி அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் படியும் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பணத்தின் மீதான ஆசை காரணமாக தனது மனைவியின் தங்க ஆபரணத்தை நண்பரிடம் கொடுத்து 30 ஆயிரம் ரூபாவை பெற்ற மேற்படி நபர் தன்னிடமிருந்த 6 ஆயிரம் ரூபாவையும் சேர்த்து 36ஆயிரம் ரூபாவை முதற்கட்டமாக வங்கியில் வைப்பு செய்துள்ளதுடன் 100ரூபா பெறுமதியான 10 மீள் நிரப்பு அட்டைகளை ரீச்சார்ஜ் செய்து விட்டு தமக்கு அழைப்பு கிடைத்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டுபோது அந்த தொலைபேசி இலக்கம் பாவனையில் இல்லை என அறிவித்தல் கிடைத்துள்ளது.
இந்நிலை யில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குறித்த நபர் ஊடக நிறுவனங்களுக்கும், குறித்த தொலைபேசி நிறுவனத்திற்கும் முறைப்பாடு கொடுத்துள்ளார்.
மேலும் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இதேவேளை யாழ்.குடாநாட்டில் தொலைபேசி நிறுவனங்களில் பண பரிசு கிடைத்துள்ளதாகவும், பிரபல வங்கிகளில் வேலை பெற்றுக் கொடுப்பதாகவும் கூறி பல மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இது குறித்து அந்த நிறுவனங்கள் உரியவாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ள போதும் மக்கள் பணத்தை கொடுத்து ஏமார்ந்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.