பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2016

அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல் காலமானார் : 
புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நாளில் ஏற்பட்டுள்ள துயரம்!


 திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக எம்.எல்.ஏ. சீனிவேல், சிகிச்சை பலனளிக்காமல் தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம், திருபரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் அதிமுக வேட்பாளரான எஸ்.எம்.சீனிவேல் ( வயது 65).  இந்த வெற்றி செய்தி கூட சீனிவேல் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 வாக்கு எண்ணிக்கைக்கு முதல் நாள் இரவு (18.05.2016) நெஞ்சுவலி காரணமாக மதுரையில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் சீனிவேல்.  அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறி, அவரது உறவினர்கள் மற்றொரு தனியார் மருத்துவமனையான கண்ணா ஜோசப்பில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே அவரின் உடல்நிலை இருந்தது.  இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.

திருப்பரங்குன்றம் தொகுதியை கடந்த 2011 தேர்தலில் தேமுதிகவுக்கு ஒதுக்கியிருந்தது அதிமுக. இதனால் அங்கு போட்டியிட்டு ஏ.கே.டி. ராஜா வெற்றி பெற்றார். இந்த நிலையில் இந்த முறை அதிமுகவே நேரடியாக போட்டியிட்டது. முன்னாள் எம்.எல்.ஏவான 65 வயது சீனிவேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2001ல் இங்கு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் சீட் கிடைத்ததால் பெரும் ஆர்வத்துடன் சீனிவேல் தரப்பு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தது. வயதையும் பொருட்படுத்தாமல் சீனிவேல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

புதிய எம்.எல்.ஏக்கள் இன்று சட்டசபையில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். இந்நிலையில், இன்று பதவி ஏற்றுக்கொள்ள வேண்டிய எம்.எல்.ஏ. காலமாகியுள்ளது அதிமுக வட்டாரத்தை கவலையடையச்செய்துள்ளது. பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.