பக்கங்கள்

பக்கங்கள்

4 ஜூலை, 2016

வடக்கில் பொருளாதார மத்திய நிலையம்; கருத்துக் கணிப்பின் பின்னரே இறுதித் தீர்மானம்!

வடக்கில் பொருளாதார மத்திய நிலையத்தை எவ்விடத்தில் அமைப்பது  என்பது  தொடர்பில் வட மாகாண சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கருத்துக்கணிப்பொன்றை நடத்திய பின்னரே, இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
 
வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையில் சமமான கருத்துக்கள் உள்ளதாகக் குறிப்பிட்ட சீ.வி. விக்னேஸ்வரன்,
 
கருத்துக் கணிப்பொன்றை ஏற்படுத்தி இறுதி முடிவை எடுக்கவுள்ளதாகவும், எதிர்வரும் வாரத்திற்குள் இதற்கான முடிவை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
வட மாகாண சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் அதன் பிரகாரம் தாண்டிக்குளத்திலே பொருளாதார மையம் அமையவேண்டும் எனக் கோரியும், வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் கடந்த 27 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதேவேளை, வடமாகாண பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்கு முதலமைச்சர் முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவாக, முதலமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம் என தெரிவித்து வவுனியாவில் விவசாயிகளினால் கடந்த 28 ஆம் திகதி பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
 
இந்த நிலையிலே வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கு அமைக்கப்படவேண்டும் என்பது தொடர்பில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
 
இந்தக் கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிவகச்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.வடக்கில் பொருளாதார மத்திய நிலையம்; கருத்துக் கணிப்பின் பின்னரே இறுதித் தீர்மானம்!