பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூலை, 2016

வடக்கில் சிவில் செயற்பாடுகளில் இராணுவத் தலையீடு- வடக்கு மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டு

வடக்கில் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு அதிகரித்துள்ளதாக வடக்கு மனித உரிமை அமைப்பின்
பிரதிநிதி டி.பாலமுரளி தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவை வளாகத்தில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான உப குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘வடக்கில் இராணுவத்தினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து 18 மாதங்கள் கடந்துவிட்டபோதும் இன்னும் நல்லாட்சி இடம்பெறவில்லை.
விசேடமாக வடக்கில் சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு அதிகரித்து காணப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர்.
சிறுவர் பள்ளிக்கூடங்களை பாதுகாப்பு அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களே நடத்தி வருகின்றனர். எனவே நல்லாட்சியிலும் வடக்கு மக்களுக்கு நல்லது நடக்கவில்லை.
இவ்வாறான நிலையில் எவ்வாறு நீதியான பொறிமுறையை அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஏ. 9 வீதியில் இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாமல் உள்ளது. அதுமட்டுமன்றி சர்வதேச நீதிபதிகளுக்கு இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் திட்டவட்டமாக கூறிவருகின்றனர்.
நீதி விசாரணையை எதிர்பார்க்க முடியாத நிலைமை காணப்படுகிறது. மேலும் காணி விடுவிப்பிலும் மோசமான நிலைமையே காணப்படுகிறது. அதாவது வடக்கில் காணிகளை விடுவித்துவிட்டு முல்லைத்தீவு பகுதிகளில் காணிகளை அபகரிக்கும் நிலைமை காணப்படுகிறது. இந்த விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் கூட மிக பெரிய அளவில் வருவதில்லை’ என தெரிவித்துள்ளார்.