பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2016

வித்தியா கொலை சந்தேக நபர்களை மூன்றுமாதம் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஒன்பது பேரையும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு யாழ்ப்பாணம்  மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி யாழ் மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு  உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். 

இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒன்பது சந்தேக நபர்களின் ஒரு வருடத்துக்கான விளக்கமறியல் கடந்த மே மாதம் 11ஆம் திகதியுடன் நிறைவடைந்த்து.

இதனைத் தொடர்ந்து சட்டமா அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விசேட மனுவிற்கமைய சந்தேக நபர்களை மேலும் மூன்று மாதங்களுக்கு தடுத்து வைப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டிருந்தது

இவ்வாறு நீடிக்கப்பட்ட மூன்று மாதம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் சந்தேகநபர்கள் இன்று மீண்டும் யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேகநபர்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் நிறைவுபெற்று வழக்குக் கோவை பரிசீலனைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவது வழக்கிற்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தினால்  அவர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் மூன்று மாதம் நீடிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி ஜனாப் சக்கி இஸ்மாயில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி மனுவொன்றை சமர்ப்பித்தார்

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஒன்பது சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் ஒன்பதாம் திகதி  யாழ் மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் 4ஆம் 7 ஆம் மற்றும் 9 ஆம்  சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சந்தேக நபர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரப்பட்ட பிணை மனுவும் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது