பக்கங்கள்

பக்கங்கள்

10 ஆக., 2016

காணாமற் போனோர் குறித்த செயலகங்களை வடக்கு,கிழக்கில் அமைக்கவேண்டும்

இலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைய வேண்டும் என்ற அரசினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனைக் குழுவின் முன் வைக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான குழுவின் கிழக்கு மாகாண மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் அமர்வின் போது சாட்சியமளித்த காணாமல் போனவர்களின் உறவுகளினால் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
குறிப்பாக சாட்சியமளித்த பெண்ணொருவர் " காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களுக்கான செயலகம் இந்த ஆண்டுக்குள் காணாமல் போனவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக உள் நாட்டு விசாரணையை விட சர்வதேச விசாரனையைத் தான் தாங்கள் எதிர்பார்ப்பதாக மற்றொரு பெண் தனது சாட்சியத்தில் கூறினார்.

போரினால் பாதிப்புக்குள்ளான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிகளை அரசாங்கம் வழங்குவது போல், போரின் காரணமாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கும் தேவைகளை அறிந்து அரசாங்கம் உதவ முன் வர வேண்டும். என்று அவர் குறிப்பிட்டார்.
தங்களின் பிரச்சினைகளை கடந்த காலங்களில் அரசினால் நியமிக்கப்பட்ட பல குழுக்களிடம் தாங்கள் முன் வைத்து, ஏமாற்றங்களை சந்தித்ததாக அப் பெண் சுட்டிக்காட்டினார்.

இதே போல், அம்பாறை மாவட்டத்திற்கான முதலாவது நாள் அமர்வு திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பமானது.