பக்கங்கள்

பக்கங்கள்

22 செப்., 2016

ரூ. 4 கோடி ஹவாலா பணத்துடன் கடத்தப்பட்ட கார்: விசாரணை வலையத்தில் திருட்டு & ஒரிஜினல் போலீஸ்


ஹவாலா பணம் ரூ.4 கோடியுடன் சென்ற காரை கடத்தி கொள்ளையடித்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உள்பட 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.



கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் அன்வர்சதாத், தொழில் அதிபர். இவரிடம் வேலை பார்க்கும் முகமதுஇப்ராகிம், முசீர், ஆனந்த், ஷிஹாஸ் ஆகிய 4 பேர் கடந்த மாதம் 25-ந் தேதி சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரில் ரூ.3 கோடியே 93 லட்சம் பணம் வைத்திருந்தனர்.

கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே சென்றபோது காரை ஒரு போலீஸ் வேன் மறித்தது. வேனில் இருந்த 3 பேர் போலீஸ் சீருடையில் இருந்தனர். அவர்கள் காரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறி 4 பேரையும் காரில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் அவர்களை அங்கேயே விட்டு, விட்டு பணத்துடன் காரை கடத்திச் சென்றனர்.

காரை காணவில்லை என்று அன்வர்சதாத் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காரை கடத்தியவர்கள் கரூர் மாவட்டம் க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

போலீசார் நேற்று முன்தினம் கரூர் சென்று, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரை கோவைக்கு விசாரணைக்கு அழைத்துவந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நகைக்கடை அதிபர் அன்வர்சதாத்திடம் வியாபாரம் தொடர்பாக பழக்கம் வைத்து இருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் (42), சுபீர் (32), சதீஷ் (30) ஆகிய 3 பேருக்கும் இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சுபாஷ், சுபீர், சதீஷ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன், ஏஜெண்டாக செயல்பட்ட கோடாலி ஸ்ரீதர் (55), அவரது மகன் அருண் (30) ஆகியோரை தேடி வருகின்றனர்.

கரூர் அருகே கடந்த மாதம் பால்பண்ணை அதிபர் வீட்டில் கொள்ளையடிக்க வந்த மர்மநபர்கள், அங்கிருந்த காவலாளிகளை கடத்திச் சென்றனர். அவர்களை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரும் இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் கோவை மாவட்டம் வந்தார்.

அப்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணம் அவ்வப்போது காரில் கடத்தப்படுவதாகவும், அவ்வாறு கடத்தப்பட்டு வரும் காரை மடக்கி சோதனை செய்வதுபோல் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்றும் ஹவாலா பணம் கொண்டு செல்லும் ஏஜெண்ட் கோடாலி ஸ்ரீதர், இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரிடம் கூறினார்.

அதற்கு இன்ஸ்பெக்டரும் ஹவாலா பணம் கடத்திவருவது குறித்து தகவல் தெரிவிக்கும்படி ஸ்ரீதரிடம் கூறினார். கடந்த மாதம் 25-ந் தேதி கேரள தொழில் அதிபர் அன்வர்சதாத்தின் ஹவாலா பணம் ரூ.3 கோடியே 93 லட்சம் காரில் வருவதாக ஸ்ரீதர், போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறினார். அதனைத் தொடர்ந்து அந்த காரை மடக்கி சோதனை செய்வதுபோல் நடித்து ரூ.3 கோடியே 93 லட்சம் ஹவாலா பணத்துடன் காரை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஏட்டு தர்மேந்திரன் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. அருண் உத்தரவிட்டு உள்ளார்.