பக்கங்கள்

பக்கங்கள்

11 செப்., 2016

தாயும் மகளும் அடித்துக் கொலை

மட்டக்களப்பு ஏறாவூர் முகாந்திரம் வீதி பகுதியிலுள்ள வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த  தாய் மற்றும்  மகள் ஆகியோர்  அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்  பொலிஸார் தெரிவித்தனர்.

55 வயதுடைய நூர்முஹம்மது சித்தி ஜனீரா என்ற தாயும் அவரது திருமணமான மகளான 34 வயதுடைய ஜனீரா பானு மாஹிர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பாரிய ஆயுதம் ஒன்றினால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொலையாளிகள் வீட்டின் சமயலறையின் கூரை ஓடுகளைக் கழற்றி உள்ளே நுழைந்து வீட்டிலிருந்தவர்களை அடித்துக்கொலை செய்துவிட்டு சமையலறைக் கதவைத் திறந்து தப்பிச்சென்றுள்ளனர்.

சடலங்கள் வீட்டின் முன்பகுதியில் காணப்பட்டதுடன் சுவர்களில் இரத்தம் தோய்ந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப்புலனாய்வுப் பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து மோப்ப நாயின் உதவியுடன் சோதனை மேற்கொண்டபோதிலும் கொலையாளிகளின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
மகளின் கணவர் கடந்த ஒன்றரை வருடகாலமாக மத்திய கிழக்கு நாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில் குறித்த வீட்டில் தாயும் மகளும் மாத்திரமே வாழ்ந்து வந்துள்ளனர்.

ஏறாவூர்ப் பொலிஸார் இந்த இரண்டைக் கொலைச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.