பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2016

கண்காணிப்பில் தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்! -ஆடுபுலி அரசியல்!?

ப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டு 19 நாட்கள்
கடந்துவிட்டன. ' தலைமைச் செயலாளரை மட்டுமே நம்புகிறார் சசிகலா. அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க வரும் தலைவர்களால், கிரீம்ஸ் சாலை நிரம்பி வழிகிறது. அகில இந்திய தலைவர்கள் மற்றும் தமிழக அரசியல் தலைவர்களின் தொடர் வருகையும் முதல்வர் உடல்நலன் குறித்தான பாசிட்டிவ் பேச்சுக்களும் தொண்டர்களுக்கு ஆறுதலை அளித்து வருகின்றன. அப்போலோ வெளியிடும் அறிக்கைகளை மட்டுமே நம்ப வேண்டிய சூழலில் அ.தி.மு.க தொண்டர்கள் உள்ளனர். ஆட்சி அதிகாரத்தை வழிநடத்துவதற்கு 'பொறுப்பான' ஒருவர் தேவை என்ற பேச்சு சகலமட்டத்திலும் எழுந்துள்ளது. ' முதல்வர் போயஸ் கார்டன் வந்துவிட்டாலும், ஆட்சியை வழிநடத்திச் செல்வதற்கு மேலும் பல மாதங்கள் ஆகலாம்' என்பதால், அடுத்துச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சசிகலா. 
அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "முன்பு சசிகலா என்ன சொல்கிறாரோ, அதைச் செயல்படுத்துவது மட்டுமே தலைமைச் செயலாளரின் பணியாக இருந்தது. ஆனால், இப்போது தலைமைச் செயலாளர் சொல்வதை மட்டுமே நம்புகிறார் சசிகலா.ஆளுநரை சந்தித்து விவாதிக்கவும் ராமமோகன் ராவையே அனுப்பினார். கூடவே, பெயரளவுக்கு அமைச்சர்கள் ஓ.பி.எஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் உடன் சென்றனர். தற்போதைய அரசியல் சூழலில், முதல்வரின் உடல்நிலையைப் பயன்படுத்தி, எம்.எல்.ஏக்களை வளைக்கும் நடவடிக்கைகள் நடக்கிறதா என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறார் சசிகலா. முதல்வர் சிகிச்சை பெறும் சூழலைப் பயன்படுத்தி, கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்தும் தொழிலதிபர்களை தீவிரமாக கண்காணிக்கிறது உளவுத்துறை.
அவர்கள் மூலம் என்ன மாதிரியான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகிறது? எத்தனை எம்.எல்.ஏக்களை வளைக்கத் திட்டமிட்டுள்ளனர் என்கின்ற தகவல்கள் எல்லாம் உடனுக்குடன் அவரது கவனத்துக்குச் செல்கிறது. அ.தி.மு.கவின் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர். சசிகலாவின் உறவினர்களால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் யார்? அவர்களுக்கு தற்போதைய தேவை என்ன? அவர்களை சமாதானப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விரிவான விவாதம் நடந்து வருகிறது. இந்தப் பணியில் சில சீனியர்கள் ஈடுபட்டுள்ளனர்" என்றார். 
அதேநேரத்தில், தி.மு.க தரப்பிலும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். ' அ.தி.மு.கவில் ஜெயலலிதாவால் நேரடியாக பாதிக்கப்பட்டு, தி.மு.கவில் ஐக்கியமானவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் பத்துக்கும் மேற்பட்டோர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அ.தி.மு.கவில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டால்கூட, சசிகலா ஆதரவில் செல்வாக்கோடு வலம் வரலாம் என்ற கனவில் சிலர் உள்ளனர். இவர்களும் ஒருகாலத்தில் அ.தி.மு.கவில் பவர்ஃபுல்லாக கோலோச்சியவர்கள்தான். ' இப்படியொரு முடிவை நோக்கி இவர்கள் செல்லலாம்' என்பதால், அவர்களில் சிலர் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது தி.மு.க' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 
அ.தி.மு.கவின் நாடாளுமன்ற பலத்தை குறிவைத்து பா.ஜ.கவும் காங்கிரஸும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அ.தி.மு.கவிலும் தி.மு.கவிலும் நடக்கும் 'கண்காணிப்பு அரசியலை' கவனித்து வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.