பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2016

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டமும் கொடூரமானது: சபையில் சுமந்திரன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக அமுல்படுத்தப்படவுள்ள புதிய சட்டம் முன்னையதைவிடப் பலமடங்கு
கொடூரமானதாக இருக்கும் என எச்சரித்துள்ள கூட்டமைப்பின் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் இப் புதிய சட்டத்தால் அப்பாவித் தமிழ் மக்களும் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோற்று செவ்வாக்கிழமை ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் உரையாற்றுகையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலான சட்டவரைவொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்க சட்ட ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்திருந்தது. இந்த ஆணைக்குழுவிற்கு முன்னிலையில் நானும் கருத்துக்களைப் பகிர்ந்திருந்தேன். என்னுடைய கருத்துக்களையும் உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட சட்டவரைபு தற்பொழுது குப்பைத் தொட்டியிற்குள் இருக்கும் என நம்புகின்றேன்.
இந்நிலையில் பாதுகாப்புப் பிரிவுடன் தொடர்புடைய குழுவொன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலான வரைவொன்றைத் தயாரித்துள்ளது. இவ்வாறு பாதுகாப்புப் பிரிவினரால் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு தற்பொழுது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் பலமடங்கு மோசமானதாக ,கொடூரமானதாக இருக்கும் என்ற தகவல் எனக்குக் கிடைத்துள்ளது.
நபர்களைக் கைதுசெய்து தடுத்து வைத்தல் வாக்கு மூலம் பெறுவதை மறைத்தல் போன்ற மோசமான விடங்கள் புதிய சட்டத்திலும் மாற்றப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். எனக்குக் கிடைத்த தகவல் உண்மையாயின் புதிய சட்டம் முன்னய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் பலமடங்கு மோசமானதாக கொடூரமானதாக இருக்கும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிக்கொண்டு புதிய பொயரில் முன்னயதை விட மோசமான சட்டத்தை அமுல் படுத்துவதற்கு முற்படுகின்றனர் என்றார்.
குறிப்பு: கடந்த 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது ஈழ விடுதலைப் போராட்டத்தை இலங்கைக்குள் அடக்கும் நோக்குடன் அமுல்படுத்தி தமிழ் இளைஞர் யுவதிகளைக் கொன்று குவித்தனர். ஆனால் தற்பொழுது போராட்டம் சர்வதேச மயப்பட்டுள்ள நிலையில் அதனைத் தடுக்கும் நோக்குடன் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் ஸ்ரீலங்காவிற்கு வெளியே வாழுகின்ற தமிழருக்கு எதிராகப் பாயும் என்பதை சுமந்திரன் கோடிட்டுள்ளார்.