பக்கங்கள்

பக்கங்கள்

28 பிப்., 2017

ஓ.பி.எஸ். ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு


ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தங்களுக்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தனர்.

இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.

ஆகவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர். இதற்காக டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் அசோக்குமார், சுந்தரம், சத்யபாமா, வனரோஜா, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, செங்குட்டுவன், மருதைராஜா, பார்த்திபன், எஸ்.ராஜேந்திரன், விழுப்புரம் லட்சுமணன் உள்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டெல்லி செல்கின்றனர்.

சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தக்கோரி வேண்டுகோள் விடுக்க உள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்தித்து தங்களுடைய கோரிக்கை தொடர்பான மனுவையும் அவர்கள் கொடுக்க உள்ளனர்.

இந்த நிலையில் தற்போதுள்ள அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், காமராஜ் ஆகியோர் இன்று காலை பெங்களுருவுக்கு விமானம் மூலம் சென்றனர். பெங்களுரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை இன்று அவர்கள் சந்தித்து பேச உள்ளனர் என கூறப்படுகிறது.