பக்கங்கள்

பக்கங்கள்

8 ஆக., 2018

ஜெ. சமாதியை எதிர்த்த 5 வழக்குகளும் தள்ளுபடி.. கருணாநிதிக்கு மெரீனா கிடைக்க வாய்ப்பு பிரகாசம்


சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து ஜெயலலிதா சமாதியை அகற்றக் கோரி தொடரப்பட்ட 5 வழக்குகள் இன்று திரும்பப் பெறப்பட்டன. இதையடுத்து அவற்றை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 3 மனுதாரர்களும் மனுக்களை வாபஸ் பெற்றதால் அவர்கள் தொடர்ந்த 5 மனுக்களையும் தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

ஊழல் புகாரில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு மெரீனாவில் சமாதி அமைக்கக் கூடாது என்று கூறி அதை எதிர்த்து சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, தி.க. வழக்கறிஞர் துரைசாமி, பாமக வழக்கறிஞர் பாலு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதில் துரைசாமி நான்கு மனுக்களையும், மற்ற இருவரும் தலா ஒரு வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து அவரது உடல் அடக்கத்தை மெரீனா கடற்கரையில் நடத்த திமுக முடிவு செய்தது. ஆனால் மேற்கண்ட வழக்குகளை சுட்டிக் காட்டி தமிழக அரசு அனுமதி கொடுக்க மறுத்து விட்டது. இதையடுத்து டிராபிக் ராமசாமி தவிர்த்து மற்ற இரு மனுதாரர்களும் தங்களது மனுக்களை வாபஸ் பெற முன்வந்தனர்.

இதையடுத்து நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ஹுலவாடி ரமேஷ் வீட்டில் வைத்து நீதிபதி சுந்தர் சகிதம், இரு நீதிபதிகளும் இதுதொடர்பாக திமுக கொடுத்த முறையீட்டை விசாரித்தனர்.

வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு இன்று காலை வழக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது துரைசாமி, பாமக பாலு ஆகியோர் தங்களது மனுக்களை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று அவர்களது நான்கு வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஆனால் டிராபிக் ராமசாமி தரப்பு முதலில் வாபஸ் பெறுவதாகவும், பின்னர் இல்லை என்றும் மாறி மாறிப் பேசியதால் குழப்பம் ஏற்பட்டது. நீதிபதிகளும் கோபமடைந்தனர். இறுதியில் டிராபிக் ராமசாமி தரப்பு தனது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.