பக்கங்கள்

பக்கங்கள்

24 ஆக., 2018

விமல் - சிவமோகனின் வாக்குவாதத்தால் அதிர்ந்தது பாராளுமன்றம்


முல்லைதீவு நாயாறு மீனவர் பிரச்சினை தொடர்பில் விமல் வீரவன்ச எம்.பிக்கும் - சிவமோகன் எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நல்லிணக்க முறையில் இருவரையும் சமாதானப்படுத்தினார் அமைச்சர் மனோ கணேசன்.


பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது முல்லைதீவு மீனவர் முரண்பாடு குறித்து ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி முல்லைதீவு நாயாறு மீனவர் கிராமத்தில் சிங்கள மீனவர்களின் வாடிகள் தீவைக்கப்பட்டுள்ளது.

சிங்கள மீனவர்களின் படகுகள் தீவைக்கப்பட்டுள்ளது. இறுதியில் பொலிசாரின் பாதுகாப்பில் சிங்கள மீனவர்கள் வெளியேற வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்திய மீனவர்கள் வடக்கு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர், அத்துமீறி இலங்கையில் மீன் பிடிக்கின்றனர் அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.

ஆனால் காலாகாலமாக தெற்கில் இருந்து மீன்பிடிக்கு செல்லும் சிங்கள மீனவர்களை மாத்திரம் வடக்கின் மீனவர்கள் விரட்டியடிக்கின்றனர். கடலை எல்லை பிரிக்க முடியாது. தமிழர்களின் கடல், சிங்களவர்களின் கடல், முஸ்லிம்களின் கடல் என எல்லை பிரிக்க முடியாது கடல் அனைவருக்கும் பொதுவானது.

அவ்வாறான நிலையில் இனவாதத்தை பரப்பும் இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தையும் அரசாங்கம் வேடிக்கை பார்க்காது உடனடியாக நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பின தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சிவமோகன் கருத்துக்கூறுகையில்.

இந்த பிரச்சினை தவறான வகையில் விமர்சிக்கப்படுகின்றது. உண்மைகளை மறைத்து கருத்துக்கூறுகின்றனர்.

முல்லைத்தீவு கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட 72 சிங்கள மீனவர்களுக்கு அனுமதி உள்ளது.

எனினும் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் குறித்தே பிரச்சினை எழுந்தது என கூறுகையில், விமல் வீரவன்ச எம்.பி சபையில் கூச்சலிட்டு சிவமோகன் எம்.பியை இனவாதி என விமர்சித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் இனவாதத்தை கக்குகின்றது என கூச்சலிட்டார்.

இதனை அடுத்து சிவமோகன் எம்.பியும் விமல் வீரவன்ச எம்.பியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய அமைச்சர் மனோ கணேசன் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தினார். அவர் கூறுகையில், சிங்கள கடல்,தமிழ் கடல் என்று ஒன்றும் இல்லை.

அதேபோல் இந்திய மீனவர்கள் இலங்கையில் மீன்பிடிக்க நாம் அனுமதிக்கவும் இல்லை.

அவர்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் தெற்கில் இருந்து மீனவர்கள் வடக்கில் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இன்று நேற்று அல்ல காலாகாலமாக அவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர் எனினும் இந்த சம்பவத்தை கவனிக்க வேண்டும்.

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட போதே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொலிசார் எனக்கு தகவல் வழங்கினர். அமைச்சரவையிலும் இன்ட பிரச்சினை குறித்து பேசியுள்ளேன். அதுமட்டுமல்லாது ஜனாதிபதிக்கும் இந்த காரணிகளை கொண்டுசென்றுள்ளோம்.

இதற்கான தீர்வுகளை அவர் பெற்றுக்கொடுப்பார் எனக் கூறினார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச எம்.பி:- ஜனாதிபதிக்கு இந்த காரணி கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்றால் ஒருபோதும் தீர்வு கிடைக்கப்போவதில்லை.

வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க வேண்டியதுதான் என கூறினார்.