பக்கங்கள்

பக்கங்கள்

20 செப்., 2018

தமிழீழக் கோரிக்கைக்கு தீனி போடக்கூடாது அரசு! – நீதியான தீர்வு வேண்டும்


தமிழர்கள் தனி ஈழம் கோரியவர்கள்தான். இன்றும் அந்தக் கருத்தை முழுமையாகத் தூக்கி எறியவில்லை. எனவே, அந்தச் சிந்தனையிலிருந்து அவர்கள் விடுபடவேண்டுமானால் நீதியான முறையில் தீர்வு முன்வைக்கப்படவேண்டும். மாறாகத் தமிழீழ கோரிக்கைக்கு தீனி போடும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமையக்கூடாது.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான அபிவிருத்தி அதிகார சபை சட்டமூலம், பிரதேச சபைகள் திருத்தச் சட்டமூலம், இலங்கை ஆளணி முகாமை நிறுவக திருத்தச்சட்டமூலம் ஆகியவை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் வாழும் மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே நடத்தப்பட்டனர். அவர்களுக்கான சம்பளம் நியாயமான முறையில் இல்லை. காணியுரிமை அற்றவர்களாகவே இருந்தனர்.

1987ஆம் ஆண்டுதான் பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டது. மக்கள் வரிசெலுத்தினாலும் அதை அனுபவிக்கமுடியாத நிலை தோட்டப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. இன்று அந்தத் தடை நீங்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம்.

ஓர் இலட்சத்து 40 ஆயிரம் வீடுகள் இன்னும் தேவையாக உள்ளன என அமைச்சர் திகாம்பரம் கூறினார். அந்தத் திட்டம் துரிதப்படுத்தவேண்டும். மலையக மக்களின் வாழ்வுரிமை மேம்பாட்டுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஆதரவையும் வழங்கும். மலையகம் தொடர்பில் இன்று நிறைவேற்றப்பட்டவுள்ள இரண்டு சட்டமூலங்களும் மலையக மக்கள் வாழ்வில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.

அதேவேளை,ஆளணி முகாமை நிறுவனச் சட்டமூலமும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளணிமுகாமை நிறுவகம் இனவாதம் பூசிய இயந்திரமாக இருக்கக்கூடாது. போட்டிப் பரீட்சைகளில் இனவாதம் திணிக்கப்படுகின்றது.

நிலைமை இப்படி இருக்கையில் நல்லிணக்கம் பற்றியும், ஒருமைப்பாடு குறித்தும் பேசுவதில் பயன் இல்லை.

இலங்கை நிர்வாக மற்றும் கணக்கியல் சேவையில் அதிக தமிழர்கள் சித்தி பெற்றமை காரணமாகத் தற்போது அதற்கான நேர்முகப் பரீட்சை இடை நிறுத்தப்பட்டுள்ளது. கல்வியில் காட்டப்பட்ட பாரபட்சம் காரணமாகவே இலங்கையில் ஆயுதப்போராட்டம் வெடித்தது. பௌத்த மேலாதிக்க சிந்தனையிலிருந்து நீங்கள் வெளிவரவேண்டும்.

அதேவேளை, தாம் தனிஈழம் கேட்கவில்லை என அமைச்சர் திகாம்பரம் கூறினாராம். நாம் தனிஈழம் கோரியவர்கள்தான். இன்றும் அந்தக் கருத்தை முழுமையாகத் தூக்கிஎறியவில்லை. இப்படியான சிந்தனை, எண்ணம் நீங்கவேண்டுமானால் எமக்கு நீதியான தீர்வு கிடைக்கவேண்டும்.

எமக்குரிய கலை, கலாசாரங்களைப் பின்பற்றி வாழ்வதற்குரிய உரிமைவேண்டும். அதைச் செய்யாது தொடர்ந்தும் புறக்கணிப்புகளைச் செய்து, தனிஈழம் கோருபவர்களுக்குத் தீனி போடும் வகையில் தென்னிலங்கை செயற்படக்கூடாது” – என்றார்.