பக்கங்கள்

பக்கங்கள்

2 ஆக., 2019

தேசிய அரசாங்கம் அமைக்கும் முயற்சியை கூட்டமைப்பு தோற்கடிக்கும் – சுமந்திரன்

தேசிய முன்னணியை உருவாக்கி அதனூடாக அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கும் ஐ.தே.க.வின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு ஒரு நிலைப்பாடு இருந்தால் அந்த முயற்சியை கூட்டமைப்பு தோற்கடிக்கும் என்றும் அவர் கூறினார்.



மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சியொன்றில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான யோசனையை எதிர்வரும் 31ஆம் திகதி சபை முதல்வர் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்படி அமைச்சு பதவிகளை 48 வரையும் மற்றும் பிரதி அமைச்சு இராஜங்க அமைச்சு பதவிகளை 45 வரையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பிலிருந்து வரும் குழுவொன்றை இணைத்துக்கொண்டு இந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே தேசிய அரசாங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கும் ஐ.தே.க.வின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.