பக்கங்கள்

பக்கங்கள்

2 ஆக., 2019

மகாவலி, வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியன அபகரித்துள்ள நிலங்களை பார்வையிட்ட ரவிகரன்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்ளுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், மற்றும் குளங்களை வனஜீவராசிகள் திணைக்களம், மாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்பன அபகரித்துள்ளன.

இந்நிலையில் கொக்குத் தொடுவாய் பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த அபகரிப்பு நிலைமைகளை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

குறிப்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சரணாலயத்திற்கென ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழ் மக்களுடைய அறுதி உறுதி மானாவாரி விவசாய நிலங்களான கோட்டைக்கேணி, குஞ்சுக்கால்வெளி, தீமுந்தல், அம்பட்டன் வாய்க்கால், பணம்போட்ட கேணி, வெள்ளைக்கல்லடி போன்ற வயல் நிலங்கள் பார்வையிடப்பட்டன.

அதேபோல் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது பூர்வீக குளங்களான சின்னக்குளம், ஊரடிக்குளம் மற்றும் அந்தக் குளங்களின் கீழான விவசாய நிலங்கள் என்பனவும் பார்வையிடப்பட்டன.

மேலும் இவ்வாறு அபகரிப்பு நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், குறித்த அபகரிப்பு நிலைமைகள் தொடர்பில் உரிய இடங்களில் தெரியப்படுத்துவதாக அம் மக்களிடம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.