பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜன., 2020

ஐ.நாவின் பொறிக்குள் இருந்து ராஜபக்ச அரசு தப்ப முடியாது - கூட்டமைப்பின் தலைவர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு, இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும். அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தக் கடமையிலிருந்து அரசு தப்ப முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

இலங்கை மீதான ஐ,நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி அதனை அவமதிக்கும் வகையில் ராஜபக்ச அரசு வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில் பதிலளிக்கும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை அரசால் ஐ.நாவுக்கும் சர்வ தேச நாடுகளுக்கும் பலவிதமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாக்குறுதிகளை ராஜபக்ச அரசு நிறைவேற்றியே தீர வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப் படுத்துவது மிகவும் அவசியமாகும்.

பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையால் கால அவகாசம் வழங்கப்பட்டும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

அதை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தப் புதிய அரசு தயாராக இல்லை என்றால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் இந்தக் கருமத்தை எவ்விதமாகச் செயற்படுத்தலாம் என்று தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என எம்மைக் கடந்த வாரம் சந்தித்த பிரிட்டன், அமெரிக்கா நாடுகளின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்துள்ளோம்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானத் தைச் செயற்படுத்தும் வகையிலான பேச்சுக்களை சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து நாம் நடத்துவோம் என்றார்.