பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2020

பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களுக்கு விஜயம்

www.pungudutivuswiss.com
சிறிலங்கா பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் 2020 டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு இரு நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.


கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது மன்னார் மடு தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான இடைமாறல் இல்லங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயம் ஆகியவற்றின் நிர்மாணப்பணிகளை அவர் மேற்பார்வை செய்தார்.

மன்னார் மடு தேவாலயத்தில் இடைமாறல் இல்லங்களை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை 2020 ஆகஸ்ட்டில் கைச்சாத்திடப்பட்டதுடன் இந்தத் திட்டம் 290 மில்லியன் இலங்கை ரூபா செலவில் 2021 செப்டம்பர் மாதம் பூர்த்தி அடையவுள்ளது.

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் மகாமண்டபத்தின் புனர்நிர்மாண பணிகள் இந்திய அரசின் உதவியுடன் நிறைவடைந்திருக்கும் அதேசமயம் 320 மில்லியன் இலங்கை ரூபா செலவில் அந்த ஆலயத்தில் ஒட்டுமொத்த நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வெற்றிகரமான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடமையில் இந்த இரு திட்டங்களும் மிகவும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.

இந்த விஜயத்தின் ஓர் அங்கமாக டிசம்பர் முதலாம் திகதி பிரதி உயர் ஸ்தானிகர் ஜேக்கப் அவர்கள் மன்னர் மறை மாவட்ட ஆயர் கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ அவர்களை சந்தித்திருந்ததுடன் மன்னார் பிராந்தியத்தில் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கு சாத்தியமான கூறுகள் தொடர்பாக இருவரும் கருத்துக்களை பரிமாறியிருந்தனர்.

அத்துடன் டிசம்பர் 08 ஆம் திகதியன்று மன்னார் தம்பபன்னியில் 100 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் மிகப் பிரமாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வுகளிலும் பிரதி உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டிருந்ததுடன் இந்த திட்டமானது மன்னாரில் முதற்தடவையாக நிறைவேற்றப்பட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இலங்கை மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அமுலாக்கத்திலும் இந்திய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.