பக்கங்கள்

பக்கங்கள்

24 அக்., 2015

பெண்களை அடித்ததால் கிராம மக்கள் பதில் தாக்குதல்: தப்பியோடிய போலீஸ் அதிகாரிகள்: 19 பேர் கைது




பெண்களை அடித்த போலீஸ் அதிகாரிகள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லாரி கிளீனிர் ராமமூர்த்தி லாரியில் இருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த 21.10.2015 புதன்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து வரப்பட்டது. 

ராமமூர்த்தி சாவில் மர்மம் இருப்பதாக கூறியும், லாரி ஓட்டுநர், உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கூறியும் சடலத்துடன் சாலை மறியல் செய்தனர். பெண்கள் 3 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அங்கு வந்த செங்கம் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி மறியலில் ஈடுபட்ட பெண்களை கையால் அடித்து விரட்டியுள்ளார். இதில் வெண்ணிலா என்ற பெண் மயக்கம் அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அவர் போலீஸ் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார். 

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் செங்கம் வட்டாட்சியர் காமராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். மறியலை கைவிட மறுத்த கிராம மக்கள் டி.எஸ்.பி. சம்பவ இடத்திற்கு வர வேண்டும் என்றனர். இதையடுத்து அதிரடிப்படையினருடன் டி.எஸ்.பி. வந்ததும், மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், பலரை தேடி வந்தனர். அவர்களில் 7 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தண்டம்பட்டு பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.