பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2015

நிதிஷ்குமார், லல்லு பிரசாத் யாதவுக்கு வைகோ வாழ்த்துக் கடிதம்



மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு இன்று (09.11.2015) வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். அதன் விவரம் வருமாறு:- 

’’பீகார் முதலமைச்சர் மாண்புமிகு நிதிஷ்குமார் அவர்களுக்கு வணக்கம்.

இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான மதச்சார்பின்மையை பாதுகாக்கும் ஒளி விளக்காக உங்களின் வரலாற்றுப் புகழ்மிக்க தேர்தல் வெற்றி அமைந்ததற்கு எனது இதயபூர்வமான வாழ்த்து களைத் தெரிவிக்கிறேன்.

ஆர்.எÞ.எÞ. அமைப்பால் இயக்கப்பட்ட ஆபத்தான இந்துத்துவா சக்திகளின் நாசகார முயற்சிகளுக்கு உங்கள் தேர்தல் வெற்றி மரண அடியைத் தந்துள்ளது. ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்ற தத்துவத்தை வெற்றி பெறச் செய்த பீகார் மாநில வாக்காளர்களின் குரல், அனைத்து இந்தியாவிலும் உள்ள மக்களுக்கு ஊக்கமளிக்கும் எழுச்சி பூபாளமாக ஒலிக்கிறது.

உங்கள் தலைமைப் பண்பினுடைய வெற்றி இந்தியா முழுவதிலும், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. உங்கள் ஆட்சி மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

எனது அன்பிற்குரிய லல்லு பிரசாத் யாதவ் அவர்களுக்கு வணக்கம்.

உங்களின் உன்னதமான அரசியல் தலைமைப் பண்பினால் நிதிஷ்குமார் அவர்களை அரவணைத்து, இந்துத்துவா சக்திகளின் கேடு மிகுந்த முயற்சிகளை தகர்த்து தவிடுபொடியாக்கி விட்டீர்கள். இந்திய ஜனநாயகத்தின் மூல பலமான மதச்சார்பின்மையை பாதுகாக்கும் கவசமாகவும், கேடயமாகவும் நீங்கள் வகுத்த அரசியல் வியூகம் அமைந்துவிட்டது.

லோக நாயகர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் தகுதிவாய்ந்த சீடர் நீங்கள் என்பதை நிருபித்துவிட்டீர்கள். தீபாவளியை மகிழ்ச்சியோடு கொண்டாடுவீர்கள். பீகார் தேர்தல் முடிவுகள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு மாபெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. உங்களுக்கு சல்யூட் வைத்து வாழ்த்துகிறேன்.