பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2016

பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை பிரயோகம்

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சுமார் 40பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் சிலர் மயக்கம் அடைந்தனர் என்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பேசிக்கொண்டிருந்த போதே அங்கு வந்திருந்த நான்கு பேர் நச்சுவாயு கலந்த சக்தி வாய்ந்த கண்ணீர்புகையை பிரயோகித்து பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவை சேனாதிராசாவின் சகோதரரும், இம்மகாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தங்கராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரும் பிரான்ஸில் உள்ள ஒரு நபரின் ஏற்பாட்டில் தான் மண்டபத்திற்குள் நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை கருவையை தமது உடைகளுக்குள் மறைத்து கொண்டுவந்தார்கள் என்று தெரிவித்தார்.
இம்மாகாநாட்டை குழப்ப போவதாக ஏற்கனவே கஜன் என்ற நபர் முகநூல்களிலும் சில இணையத்தளங்களிலும் வீடியோக்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்தார் என்றும் இதனால் மகாநாடு நடக்கும் மண்டபத்திற்குள் வன்முறையை மேற்கொள்வார்கள் என நாம் எச்சரிக்கையுடன் இருந்தாக அவர் தெரிவித்தார்.
மகாநாடு ஆரம்பமாகி சற்று நேரத்தில் கார் ஒன்றில் ஒரு நபர் நான்கு பேரை அழைத்துக்கொண்டு இறக்கி விட்டு அந் நபர் காருக்குள் இருந்தார் என மகாநாட்டில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர்.
மண்டபத்திற்குள் வந்திருந்த நான்கு பேரிலும் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை அவதானித்து கொண்டிருந்ததாகவும் மாவை சேனாதிராசா பேச ஆரம்பித்ததும் அந்த நான்கு நபர்களும் கூச்சல் இட்டவாறு பொதுமக்கள் மீது கண்ணீர்புகையை பிரயோகித்ததாகவும் தங்கராசா தெரிவித்தார்.
நஞ்சுவாயு கலந்த கண்ணீர்புகையால் கண்கள் திறக்க முடியாது பாதிக்கப்பட்டிருந்த வேளையில் அந்நான்கு நபர்களும் மண்டபத்தை விட்டு வெளியில் ஓடினர்.
ஏற்கனவே காரில் இருந்த அந் நபர் அவர்களை ஏற்றிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார் என மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் மீது நச்சு வாயு கலந்த கண்ணீர்புகையை பிரயோகித்து குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் பொதுமக்கள் பாதிப்படைய காரணமாக இருந்தவர்களின் அடையாளங்கள் அங்கு எடுக்கப்பட்ட காணொளியில் பதிவாகியுள்ளதாகவும் அந்த நான்கு நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மகாநாட்டு ஏற்பாடுகளில் சில சதிகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இம்மகாநாட்டில் இவ்வாறான சம்பவம் நடைபெறும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.
கஜன் என்ற நபர் இம்மாகாநாட்டை நடத்த விடமாட்டோம், குழப்புவோம் என வெளிப்படையாக சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகளை வெளியிட்டிருந்தார்.
இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என தெரிந்திருந்தும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும் அதனை தடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை மண்டபத்தை ஏற்பாடு செய்தவர்கள் ஏன் செய்யவில்லை.
சிலர் மகாநாட்டை குழப்புவார்கள் என அறிந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் இளைஞர்கள் சிலர் தாம் அங்கு வந்து பாதுகாப்பிற்கு நிற்கிறோம் என கேட்ட போது ஏற்பாட்டாளர்கள் அதனை நிராகரித்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கைக்குழந்தையுடன் யாராவது இருந்திருந்தால் அக்குழந்தை நச்சுவாயுவினால் மூச்சு திணறி இறந்திருக்கும்.
கொலைவெறியுடன் கூடிய பாதக செயலை செய்தவர்களும் பொதுமக்கள் பற்றி சிந்திக்கவில்லை, ஏற்பாட்டாளர்களுக்கும் இச்சம்பவம் நடக்கும் என தெரிந்திருந்தும் இதனை தடுக்க முன்னேற்பாடுகளை அவர்கள் செய்யவில்லை.
இச்சம்பவங்களின் பின்னணியில் தமிழின விரோத சக்திகள் இருந்துள்ளார்கள் என்பதற்காக ஆதாரங்களும் கிடைத்துள்ளன.
நச்சுவாயு கலந்த கண்ணீர்புகையை பிரயோகித்த நபர்களின் புகைப்படங்களும் அதன் காணொளிகளும் விரைவில் வெளியிடப்படும்.