நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் டெல்லி அரசியல் வட்டாரத்தைப் பெரும் பரபரப்புக்குள் ளாக்கியிருக்கிறது, சபாநாயகர் மீராகுமாருக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம். thxx-nakeeran
""இந்த விவகாரத்தின் உண்மைகள் அனைத்தும் அவசரமான பார்வை யினாலும், தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட ஒருசார்பு நிலையாலும், தவறான விசாரணை முறைகளாலும், பிழையான முடிவுகளாலும் ஊடகங் களின் உதவியுடன் அழுத்தி நசுக்கப்பட்டுள்ளன. எனவே நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முன் நான் சாட்சியமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும்'' என்று சொல்லும் அந்த 3 பக்க கடிதத்தை எழுதியிருப்பவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.
2ஜி வழக்கு விறுவிறு விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆ.ராசாவின் இந்தக் கடிதம் வெறும் அரசியல் செய்தி அல்ல என்றும், இந்தியாவை ஆள்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி என்றும் சொல்கிறார் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சீனியர் தலைவரே. அகில இந்திய அளவில் தி.மு.க.வின்மீது ஊழல் முத்திரை குத்தி, அக்கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பிய பரபரப்பான வழக் கில், ஆ.ராசாவின் இந்தக் கடி தம் ஒரு முக்கிய திருப்புமுனை என்கிறது டெல்லி வட்டாரம்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் டெல்லியில் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் மேல்மட்டத் தில் நடந்த ஆலோசனையில் பிரதமர் மன்மோகன்சிங், அப்போதைய மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர். தீவிரமாக நடந்த ஆலோசனையின்போது ப.சி. தன்னுடைய கருத்தை முன்வைத்தார். "ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொல்வதுதான் சரி. காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு வராமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு தி.முக.வை நாம் பலிகொடுத்துதான் ஆகவேண்டும்' என்பதே ப.சி.யின் கருத்து.
ராசாவின் ராஜினாமா குறித்து அவரது கட்சித் தலைவரும் தமிழக முதல்வராக இருந்தவருமான கலைஞ ரிடம் பிரணாப்முகர்ஜி, ப.சி. இருவருமே பேசினார்கள். "ராஜினாமா செய்தால் போதும். நிலைமை சரியான தும் மீண்டும் அமைச்சராக் கப்படுவார்' என இங்கிருந்து (டெல்லி) உறுதி தரப்பட்டது. அதை நம்பி தி.மு.க தலை வரும் தன் கட்சியின் மத்திய அமைச்சரை ராஜினாமா செய்யச் சொன்னார். அடுத்த சில நாட்களில் ராசா மீது சி.பி.ஐ. விசாரணை பாய்ந்தது. பதில் சொல்லிவிட்டு வந்து விடலாம் என்பதுதான் அந்த சமயத்திலும் இங்கிருந்து சென்னைக்குத் தெரிவிக்கப் பட்டது. அதற்கும் உடன்பட் டது தி.மு.க தலைமை. சி.பி.ஐ. விசாரணைக்கு சென்ற ராசா, அங்கிருந்து திகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் கழித்து தான் அவரால் ஜாமீனில் வெளியே வரமுடிந்தது.
ஆ.ராசாவைத் தொடர்ந்து கனிமொழி மீதும் 2ஜி வழக்குப் பாய்ந்தது. அப்போது சோனியாவே கலைஞ ரிடம் பேசினார். ச்ச்சும்மா விசாரணைதான் என்றார்கள். ஆனால், கிட்டதட்ட ஒரு வருடம் கழித்துதான் ஜாமீனில் வெளியே வந்தார் கனிமொழி. அதற்குள்ளாக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் இந்த வழக்கு குறித்து ஆளாளுக்குத் தீர்ப்பெழுதி தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கிவிட்டார்கள். அடுத்ததாக, தயாநிதிமாறனும் விசாரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அழுத்தம்பெற, அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தி.மு.க திணறிக் கொண்டிருந்த நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் அழகிரியும், 2ஜி நெருக்கடிக்குள்ளான தயாநிதியும் சோனியாவை சந்தித்து சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்து பேச, 2ஜியை பிடிமானமாக வைத்துக் கொண்டு அதிக சீட்டுகளை வாங்கியது காங் கிரஸ். 2011 தேர்தலில் சட்டமன்ற எதிர்க்கட்சி அந்தஸ்துகூட தி.மு.க.வுக்குக் கிடைக்காமல் போனதை இங்கே (டெல்லி) சிலர் வருத்தமாக வும் பலர் கேலியாகவும் பேசினார்கள் என பழைய விவரங்களை விரிவாகவே அலசினார் கள், தற்போது ஆ.ராசா எழுதியுள்ள கடிதம் குறித்து பரபரப்பாக பேசும் அரசியல் பிரமுகர்கள்.
பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு விசாரணை வேகமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நாடாளு மன்றக் கூட்டுக்குழு வின் விசாரணையும் தொடர்கிறது. இதில் காங்கிரஸ் உள்பட பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர். காங்கிரஸ் எம்.பி.யான பி.சி.சாக்கோ, இதன் தலைவர். இந்த கூட்டுக் குழுவின் முன், 2ஜி ஒதுக்கீட் டின்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாகவும், தற்போது அட்டர்னி ஜெனர லாகவும் உள்ள வாகன்வதி அண்மையில் ஆஜராகி சாட்சியமளித்தார்.
அதில், 2ஜி தொடர்பான ஒரு பத்திரிகை செய்திக் குறிப்பில் இருந்த அறிக்கையின் ஒரு பாராவை ஆ.ராசா நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக வேறு பேனாவால் சில வரிகளை எழுதியிருக்கிறார். இதன் மூலமாக அவருடைய செயலுக்கு நான் உடன்பட்டது போன்ற எண்ணத்தை உரு வாக்கியிருக்கிறார் என வாகன்வதி தெரிவித் திருந்தார். இதன் மூலமாகத்தான் 2ஜி முறைகேடு நடைபெற்றது என்றும், ராசா மட்டும்தான் அதற்குப் பொறுப்பாளி என்பதுபோலும் தோற்றமளிக்கும் விதத்தில் அமைந்தது நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன் அட்டர்னி ஜெனரலின் சாட்சியம்.
இந்தக் கூட்டுக்குழுவில் தி.மு.க எம்.பி.க் களான டி.ஆர்.பாலுவும் திருச்சி சிவாவும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சம்பந்தப் பட்ட நிகழ்வின்போது அவர்கள்தான் இது குறித்து கேள்விகள் எழுப்பி, எதிர்ப்புத் தெரிவித்திருக்கவேண்டும். திருச்சி சிவா தனது மகள் திருமண ஏற்பாடுகளில் இருந்த நிலையில், டி.ஆர்.பாலுவோ மு.க.ஸ்டாலின் மணிவிழா மலருக்காக தலைநகரில் உள்ள அரசியல் தலைவர்களிடம் வாழ்த்துச் செய்தி வாங்குவதில் பிஸியாக இருந்தார் என்கிறார் கள் டெல்லி தி.மு.க.வினரே. அட்டர்னி ஜெனரலின் சாட்சி யம், ஆ.ராசா மீது மொத்தப் பழியையும் சுமத்திய நிலையில், வரும் புதனன்று (பிப்.27) பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்ற விசாரணையிலும் அவர் நேரில் ஆஜராகி சாட்சியமளிக்க இருக்கிறார். சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராகும் அட்டர்னிஜெனரல், ஒரு மாஜிஸ்ட்ரேட் லெவல் கோர்ட்டில் அளிக்கும் சாட்சி யம் என்பது 2ஜி வழக்கில் மிக முக்கியமானதாக அமையும் என்ற நிலையில்தான், சபாநாய கர் மீராகுமாருக்கு ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார் என்று இதன் முக்கியத்துவத்தைச் சொல்கிறது டெல்லித்தரப்பு.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் சாட்சியமளிக்கத் தன்னை அழைக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கோரி யுள்ள ஆ.ராசா, தான் நீதிமன்றத் தை முழுமையாக மதிக்கும் அதே நேரத்தில் 2ஜி தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில் உண்மைகளுக்கும் ஆவ ணங்களுக்கும் முரண்பாடான அம்சங்கள் இருப்பதையும், துரதிர்ஷ்டவசமாக தன்னுடைய சீராய்வு மனு அனுமதிக்கப் படாத நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அது போலவே மத்திய தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக் கையில் உள்ள குளறுபடிகளை யும் தனது மூன்று பக்க கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஆ.ராசா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முன் சாட்சியம் அளிப்பது தனது கடமை என்றும், அதன் மூலமாக, ஊடகங்களால் பொய்யாக சித்தரிக்கப் பட்டவற்றைத் தகர்த்து, மறைக்கப்பட்ட உண்மை களை இந்த நாட்டின் பார்வைக்குக் கொண்டுவரமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆ.ராசாவின் கடிதத்தில் உள்ள கோரிக்கை நியாயமானது என்றே சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நாடாளுமன்றக் கூட்டுக் குழுத் தலைவர் சாக்கோ, "குழுவின் மற்ற உறுப்பினர் களின் கருத்துகளையும் கேட்டபிறகே ஆ.ராசாவை சாட்சிய மளிக்க அழைப்பது பற்றி முடிவெடுக்கப்படும்' என்கிறார். அதேநேரத்தில், மார்ச் இறுதிக்குள் கூட்டுக்குழுவின் அறிக்கை யை சமர்ப்பித்துவிடவேண்டும் என்ற காங்கிரஸ் தரப்பின் நெருக்குதலுக்கு ஏற்ப சாக்கோ செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள் தலைநகர அதிகார மையத்தினர்.
ராசாவை சாட்சியமளிக்க விடாமல் செய்யவேண்டும் என்பதே காங்கிரசின் கணக்காக இருக்கிறது. ஏனென்றால், ராசா தன்னுடைய முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் அன்றைய நிதித்துறை அமைச்சர்களாக இருந்த பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டபிறகே எடுக்கப்பட்டது என்பதைத் தொடர்ந்து சொல்லிவருகிறார். அவை தொடர்பான கடிதங்கள், ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்ட ஆவணங்களையும் கூட்டுக் குழு முன் சமர்ப்பிப்பதற்கு அவர் தயாராக இருக்கிறார். 2ஜி வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டு அவரைக் காப்பாற்றியிருந் தாலும், 2007 டிசம்பர் 17 தேதியிடப்பட்ட 2ஜி தொடர்பான ஆவணம் உள்பட நிதித்துறைக்கு நேரடி தொடர்புள்ள பல ஆவ ணங்கள் பற்றி இதுவரை சுப்ரீம் கோர்ட்டுக்குத் தெரிவிக்கப் படவும் இல்லை, சமர்ப் பிக்கப்படவும் இல்லை என்ற தகவலைத் தெரி விக்கிறார் இந்த விவ காரம் குறித்து தொ டர்ந்து புலனாய்வு செய்துவரும் முன்னணி ஆங்கில பத்திரிகையாளர் ஒருவர். அப்போது, நிதி யமைச்சராக இருந்தவர் ப.சி. அதுபோல, பிரதம ருடன் ஆ.ராசா ஆலோ சித்தது, கடிதம் எழுதியது தொடர்பான ஆவணங் களும் உள்ளன.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் எப்படியாவது மன்மோகன்சிங்கை கூட்டுக்குழு விசாரணையிலிருந்து காப்பாற்றவேண்டும் என்று எடுக்கும் முயற்சிகளுக்கு அதன் தலைவர் சாக்கோவும் துணையா இருக்கிறார் என்பதே தலைநகரத்தில் ஹாட் டாபிக். எனினும், கபில்சிபல் போன்ற முக்கியத் தலைவர்கள் இந்த 2ஜி விவகாரத்தில் எந்த முறைகேடும் இல்லை என்றும் இதனைத் தி.மு.க பக்கம் தள்ளிவிடுவதால் இறுதியில் காங்கிரசுக்குத்தான் சங்கடம் வரும் என்பதையும் ஆரம்பம் முதலே கேபினட் மீட்டிங்கிலிருந்து கட்சியின் மேலிடம் வரை வலியுறுத்தி வந்துள்ளனர். அப்போது தப்பிக்க நினைத்த காங்கிரஸ், இப்போது நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலையில் இருக்கிறது என்ற பேச்சும் டெல்லியில் உள்ளது.
ஆ.ராசாவின் கடிதத்திற்கு சபாநாயகர் மீராகுமார் என்னவிதமான நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கேட் டால், ""நாடாளுமன்றத்தின் எந்தக் குழு விற்கும் சபாநாயகர் உத்தரவிடமுடி யாது'' என்கிற சட்ட வல்லுநர்கள், ""இக்கடிதத்தை கூட்டுக்குழுத் தலைவரின் பரிசீலனைக்கு வேண்டுமானால் அனுப்ப முடியும்'' என்கிறார்கள். ராசா சாட்சியமளித்தாக வேண்டும் என்பதை தி.மு.க வலியுறுத்துமா என்பதே இப்போது டெல்லி எதிர்பார்த்திருக் கும் கேள்வி. கடந்த முறை கூட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்காமல் போன டி.ஆர். பாலுவும் திருச்சி சிவாவும் தற்போது, ராசா சாட்சிய மளிக்க அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி, "ஐக்கிய முற் போக்கு கூட்டணியின் ஒருங் கிணைப்புக் கூட்டத்திலும் இதை வலியுறுத்துவோம்' என தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தரப்பிலோ தி.மு.க.வை எப்ப டியும் சமாதானப் படுத்திவிடமுடியும் என நினைக்கிறது. சில்லரை வர்த்த கத்தில் அந்நிய முதலீடு தொடர்பான விவகாரத்தில் தி.மு.க. வின் எதிர்ப்பு நிலையை மாற்றியது, கனிமொழி யுடனான சோனியாவின் டெலிபோன் பேச்சு. அதன்பிறகே, "முதலீட்டை எதிர்த்தாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதால் அரசை ஆதரித்து வாக்களிப்போம்' என அறிவித்தார் கலைஞர்.
2ஜி வழக்கை எதிர்கொள்ளும் கனிமொழி யும் தயாநிதிமாறனும் சோனியாவின் நம் பிக்கைக் குரியவரான அகமது பட்டேலை அடிக்கடி சந்தித்து வருகின்றனர். எம்.பி. தேர்தலிலும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுதி என அகமது பட்டேலிடம் தயாநிதி தெரிவித்திருப்பதாகவும் அதனால், அவர் மூலமாகப் பேசி நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் பிரதமருக்கு நெருக்கடி ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வோம் என்கின்ற டெல்லி காங்கிரஸ் தலைகள், சென்னையின் நிலவரம் என்ன என்பதை அறிந்துகொள் வதில் ஆர்வமாக இருக்கின்றன.
பேராசிரியருடன் ஆலோசித்த கலைஞர், ""இனியும் காங்கிரசின் மிரட்டல்களுக்காக சீட்டுகளை வாரி வழங்கிக்கொண்டிருக்க முடியாது. 2ஜி வழக்கை சட்டரீதியாக எதிர் கொண்டு வெற்றிபெறமுடியும். அந்த வழக் கைக் காட்டி காங்கிரஸ் விளையாட நினைத் தால் கூட்டணியே வேண்டாம்''’ என்று பேசியதுடன் அதை டி.ஆர்.பாலுவிடமும் சொல்லி, டெல்லியில் தெரிவிக்கச் சொன்னதை நமது நக்கீரனில் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
தற்போதுவரை அதே மனநிலையில் இருக்கும் கலைஞர், 2ஜி வழக்கில் தொடர்பு படுத்தப்பட்டு சிக்கல்களையும் சோதனை களையும் சந்தித்த தி.மு.க.வினர் தங்களின் நியாயத்தை எடுத்துவைத்து, நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்ற முடிவில் இருப்பதாக டெல்லிக்கு வந்துசேரும் தக வல்கள் தெரிவிக்கின்றன.