புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மே, 2014

க.ஐயாத்துரை ஆசிரியர்-



உயர்திரு க.ஐயாத்துரை ஆசிரியர்-  
பிரதி பண்ணல்  தடை செய்யப்பட்டுள்ளது  
_ஆக்கம்சிவ -சந்திரபாலன் ___________________________________

புங்குடுதீவு கிழக்குப் பகுதியின் சமூக சேவை பொதுநலம் தொண்டு என்பன பற்றி பேசப் புறப்பட்டால் அமரர் க.ஐயாத்துரை அவர்களின் நினைவு தான் மனக்கண் முன்னே வந்து நிற்கும் . 
புங்குடுதீவு எட்டாம் வட்டாரம் நாகதம்பிரான் கோவிலுக்கு அருகாமையில்  வசித்து வந்த தில்லையர் கந்தையா அவர்களின் ஒன்பது புதவர்களில் ஐந்தாவது புத்திரனாக29. 04 .1916   இல்  அவதரித்தார் இந்த பெருமகன். பெரிய குடும்ப அங்கத்தவர்களை கொண்ட வசதியற்ற குடும்பத்தில் பிறந்த இவர் கஷ்டப்பட்டு கல்வி  கற்று ஒரு  ஆசிரியராக வாழ்வைத்  தொடங்கினார். ஆரம்பத்தில் வல்லன் ஸ்ரீ சண்முகநாதன் வித்தியா சாலையிலும் பின்னர் முப்பது ஆண்டுகளாக மடத்துவெளி கமலாம்பிகை கனிஸ்ட மகா வித்தியாலயத்திலும் தனது பாரிய கற்பித்தல் பணியை செவ்வனே செய்து முடித்தார் .இந்த காலப் பகுதியில் பாடசாலையில் இருக்கும் நேரத்தையும் தூங்கும் நேரத்தையும் தவிரமீதி உள்ள அத்தனை கால நேரத்தையும்  பொதுநலன் ஒன்றுக்காகவே வாழ்ந்து  மரணித்தார்.
  1952இல் வல்லன் கிராம முன்னேற்றச் சங்கத்தை ஆரம்பித்தது முதல் காலன் காலடியில் வீழும் வரை இந்த கிராம முன்னேற்றசங்கதுக்காகவே வந்தார் என்றால் மிகை ஆகாது.இதனை தொடர்ந்து மடத்துவெளி சன சமூக நிலையத்தை 1959 இல் ஆரம்பித்து மேலும் ஒரு அத்திவாரத்தை புங்குடுதீவு கிழக்கு  மக்களுக்கு இட்டுக் கொடுத்தார். பிற்காலத்தில் வல்லன் சனசமூக நிலையத்தையும் ஸ்தாபித்து அதன் வா சிகசாலையயும்  கி.மு.சங்க கட்டிடத்திலேயே அமைத்து அந்த பகுதி மக்களின் அறிவுபசியை போக்கினார். 

சிரமதானப் பணிபற்றி பேசும் போது எமது மண்ணில் இரண்டு பெரியோரின் பெயர்கள் தான் சொல்லப் பட்டாக வேண்டும் .ஒருவர் சர்வோதயம் திருநா அண்ணா .மற்றவர் ஐயாத்துரை ஆசிரியர் அவர்களே .மடத்துவெளி வல்லன் பகுதிகளில் அமைந்துள்ள அத்தனை குளங்கள் கிணறுகள் கடற்கரை அணைக்கட்டுக்கள் மயானம் என அத்தனையையும் இவரது சிரமதானப் பணிகள் மூலம் சீர் செய்து மக்களின் செல்வாக்கை ,அன்பைப்  பெற்றார் .இவர் அத்தனை பணிகளையும் இலகுவாக செய்யவில்லை .அரச  நிர்வாகத்துடன் மோதி தர்க்கம் செய்து எத்தனையோ கஷ்டத்தின் மத்தியில் அனுமதியையும்  ஆதரவையும்  பெற்று தொடங்கும் எல்லாப் பணிகளுக்கும் பல புல்லுருவிகள் தடையை ஏற்படுத்தும் போதும் அவற்றை தனது சாதுரியமான புத்தியால்  முறியடித்து வெற்றி கண்டுள்ளார்.

ஏராளமான திட்டங்களை கி.மு.சங்கத்தின் மூலம் அரசிடம் இருந்து கேள்விபத்திரம் எடுத்து செவ்வனே நிறைவேற்றி உள்ளார் .இவ்வகையான இவரது பல சிரமதானபணியில் மக்களை ஈடுபடுத்தி மக்களின் வறுமையை போக்குவதோடு திட்டங்களையும் முடித்து சாதனை படைத்துள்ளார் .இந்த சிரமதான பணிகளில் மேற் பார்வையாளராக பணிபுரிந்தவன் என்ற வகையில் இவரது கஷ்டங்களை நேரில் கண்டு வியந்தவன் நான். புங்குடுதீவு பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை அங்கத்தவராகவும்   பங்காற்றி உள்ளார் .

வல்லன் கிராமம் என்றால் கஷ்டப்பட்ட வசதியற்ற வரட்சியான கிராமம் என்ற பெயருக்கு முக்கிய காரணம் போக்குவரத்து வசதியின்மையே யாகும். 
புங்குடுதீவின் பிரதான வீதி வழியே நடைபெறும் போக்குவரத்து சேவைகள் வல்லன் பகுதிக்கு கிடைக்காது.இப்பகுதி மக்கள் மடத்துவெளி புங்கடி சந்தியில் அல்லது ஆலடிச் சந்தியில் இறங்கி  சுமார் 4--8 கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாகவே பிரயாணம் செய்தனர். இந்த நிலையைப் போக்க மடத்துவெளி - வல்லன்-ஆலடி வீதி இணைக்கபட்டு போக்குவரத்து வசதி செய்யப்பட வேண்டும் என அறிந்த இந்த பெருமனிதன் ஏறாத படிகள் இல்லை போகாத அலுவலகங்கள் இல்லை. வெய்யில் மழை எல்லாம் இவரை தோழனாக்கிப் பார்த்தன.நான் இவரது மாணவனாக இருந்த காலத்தில் கமலாம்பிகை பாடசாலை முடிய இரண்டு மணிக்கு வீட்டுக்கு சென்று மதிய உணவு எடுக்கும் நோக்கத்தை தவிர்த்து ,அப்படியே பேரூந்தில் வடக்கு பகுதி நோக்கி பயணமாவார் .இப்படி  தன்னை வருத்தி தொண்டு செயயும் உள்ளம் யாருக்கும் வராது.ஆமாம்  ஊர் காவற்துறை ,வேலணை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் அமைந்துள்ள அரச காரியாலயங்களுக்கு சென்று யாரையோ எவரையோ எப்படியோ பிடித்து தனது காரியத்தை சாதிக்க வல்ல தொண்டன்.
இத்தனைக்கும் இவருக்கு துணை ஒரே ஒரு பழைய கறுப்புக் குடை மட்டுமே.
மடத்துவெளி வல்லன் மக்கள் அந்த வீதியால் நடக்கும் ஒவ்வொரு கணமும் இந்த வாத்தியாரின் இரத்த உறைவே  அது என்று எண்ண வேண்டும் 
எத்தனையோ கஷ்டத்தின் மத்தியில்வீதியை திறந்தா கிவிட்டது .இனி பேரூந்து சேவைக்காக போராடவேண்டும் .போராடினார் .வென்றார் . பா. உ.கா.பொ.ரத்தினம் ஆதரவில் அவரின் மூலம் எழுபதுகளின் மத்தியில் அந்த வீதியை பேரூந்து ஓடும் வீதியாக்கினார்.அந்த பெருநாளில் மடத்துவெளி சனசமூகநிலயத்தினர் ஆதரவளிக்க பேரூந்து புறப்பட்டு வலம் வந்த காட்சி கண்டு மக்கள் பூரித்து நின்ற நிலை இன்றும் என் கண்ணில் தெரிகின்றது .
இந்த பெருமகன் தான் வல்லன் திருப்பெருந்துறை நாகதம்பிரான் கோவிலை சீர்திருத்தி முறையான பராமரிப்பில் நித்திய நைமித்திய பூஜைகளை நடத்தி திருவிழாக்களையும் ஏற்பாடு செய்து ஒழுங்கு படுத்தினார் .
கி.மு சங்கம் மூலமாக நெசவு நிலையம், தையல் பயிற்ச்சி நிலையம் ,சிறுவர் பாடசாலை என அத்தனை பணிகளையும் செய்து முடித்த சாதனையாளன்.
அரசியலில் கூட ஏராளமான ஆற்றுகையை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ஆரம்பத்தில் கிராமசபை உறுப்பினாராக தெரிவாகி சேவை செய்தவர் பின்னர் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளின் வழியில் நின்று அரசியல் விழிப்புணர்வை உண்டாக்கினார் .கா.பொ.இரத்தினம் அவர்களின் நம்பிக்கைக்கு உள்ளாகி மேலும் பல நன்மைகளை கிராமத்துக்கு பெற்று கொடுத்தார் .
ஒட்டு மொத்தமாக ஒரே பார்வையில் இவரது சேவையை வரிசைப்படுத்தினால் பின்வருமாறு வகுக்கலாம் 
--------------------------------------------------
ஆசிரியப்பணி 
சிரமதானப்பணி
அரசியல் பணி 
சைவ நெறிப் பணி 
சனசமூகநிலைய கி.மு.சங்கபணிகள்
----------------------------------------------------
இவரது தொண்டில் பயன் பெற்றவை 

வல்லன் சனசமூக நிலையம் 
மடத்துவெளி சனசமூக நிலையம் 
வல்லன் கி.மு.சங்கம் 
கமலாம்பிகை வித்தியாலயம் 
சண்முகநாதன் வித்தியாலயம் 
புங்குடுதீவு ப.நோ.கூட்டுறவுசங்கம்
தமிழர் விடுதலைக் கூட்டணி 
நெசவு பயிற்ச்சி நிலையம்                                                                                                      தையல் பயிற்ச்சி நிலையம் 
சிறுவர் பாடசாலை 
------------------------------------------
முழுமனிதன் என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அமரர் ஐயாத துரையை தயங்காமல் சுட்டி காட்டலாம் . பொதுநல தொண்டு செய்ய புறப்படும் யாரும் இவன் பாதையை பின்பற்றுங்கள் .குடும்பம் பிள்ளைகள் சொத்து  சுயநலம் இத்தனையையும் மறந்து உழைத்த ஒரு தொண்டு மன்னன் இப்ப்போது எம்மத்தியில் இல்லை. இவர் தனது சமூகப் பணியில் சாதாரண எதிர்ப்பை சந்திக்கவில்லை .உயிர் ஆபத்தை கூட சந்தித்துள்ளார் .ஒரு தடவை சமூக விரோதிகளால் கொத்தி குதறப் பட்டு வைத்தியசாலையில் உயிருக்கு போராடி கொண்டு கிடந்த காட்சி என் உள்ளதை வெகுவாக பாதித்தது எனலாம்.இவரது இறப்புக்கு கூட இந்த காரணங்கள் சாட்சியா னவை.
இவரது நாமத்தை புங்குடுதீவு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் .மறக்கவும் கூடாது.நன்றி 
சிவ-சந்திரபாலன் சுவிட்சர்லாந்து 

ad

ad