""ஹலோ தலைவரே... ராஜபக்சேவை கூண்டிலே நிறுத்திடுமா அமெரிக்காவின் தீர்மானம்? இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்குமா?''
""இந்த இரண்டும்தான் இப்ப மில்லியன் டாலர் கேள்வி.''…nakeeran
""தலைவரே.. அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் போர்க் குற்றம்ங்கிற வார்த்தை இருக்குமாங்கிறதுதான் கேள்வி. அதனாலதான் வைகோ, பெ.மணியரசன் போன்றவங்க இந்தத் தீர்மானத்தை கடுமையா எதிர்க்குறாங்க. போர்க்குற்றம்ங்கிற வார்த்தையோ, இனப்படுகொலைங்கிற வார்த்தையோ அந்தத் தீர்மானத்தில் இல்லாதபோது, ராஜபக்சேவை எப்படிக் கூண்டில் நிறுத்த முடியும்ங்கிறதுதான் அவங்க கேள்வி. சித்ரவதை என்ற வார்த்தையைக் கூட அமெரிக்கா தன்னோட தீர்மானத்திலிருந்து நீக்கி விட்டது அப்படிங்கிறது தான் அவங்களோட குற்றச்சாட்டு.''
""அவங்க கேட்கிறது நியாயம்தானே,… இலங்கை யில் நடந்தது இனப்படுகொலைதான்ங்கிறதை யார் மறுக்கமுடியும்?''
""மறுக்க முடியாதுதாங்க தலைவரே.. ஆனா, அந்தப் படுகொலைகள் நடந்தப்ப அமெரிக்காவும் அதனுடன் கூட்டணி சேர்ந்த நாடுகளும் கண்ணை மூடிக் கிட்டுத்தானே இருந்தது. ஏன்னா, நியூயார்க் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட 9/11 சம்பவத்துக்குப்பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிரான போர்ங்கிற பேரில் உலகில் உள்ள பல விடுதலை அமைப்புகளையும் கறுப்புப் பட்டியலில் சேர்த்து அவற்றை ஒழிப்பதற்கு உதவி செய்ததே அமெரிக்காவும் இந்த நாடுகளும்தான். ராஜபக்சே நடத்துன இனஅழிப்புக்கு இந்த நாடுகளும் இந்தியாவும் மறைமுகமாகவும் நேரடி யாகவும் ஆதரவாக இருந்துவிட்டு, இப்ப திடீர்னு போர்க்குற்றம், இனப்படு கொலைன்னு எப்படி தீர்மானம் கொண்டு வருவாங்க?''
""அப்படின்னா ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வர்ற தீர்மானத்தால என்ன பிரயோஜனம்?''
""எந்த நாடுகளெல்லாம் தனக்கு ஆதரவா இருந்ததுன்னு ராஜபக்சே நினைச்சிக் கிட்டிருந்தாரோ அந்த நாடுகளே இலங்கைக்கு எதிரா தீர்மானம் கொண்டு வருவதில் ராஜ பக்சே மிரண்டுதான் போயிருக்காரு. போர்க் குற்றம், இனப்படு கொலைங்கிற வார்த்தை யெல்லாம் இல்லாவிட் டாலும், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி ரிப்போர்ட் எடுக்க ஐ.நா. சார்பில் சுய அதிகாரமுள்ள ஒரு குழு இலங்கைக்கு அனுப் பப்படும் வாய்ப்பு இருக்குது. போருக்குப்பிறகு அங்குள்ள நிலைமை, தமிழர்களின் மறுவாழ்வுக்கு ராஜபக்சே அரசு என்ன செய்திருக் கிறதுங்கிற உண்மை நிலவரம் இதெல்லாம் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலமா, உலக நாடுகளை தொடர்ந்து ஏமாற்றிவரும் இலங்கை அரசுக்கு ஒரு நெருக்கடி வரும். அதாவது, ராஜபக்சேவின் குடுமி முதன் முறையா அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கைப்பிடிக்குள் வரும்.''
""ஒன்றுமே இல்லாததற்கு இது கொஞ்சம் பெட்டர்தான்.. ஆனா, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கக்கூட இந்தியா பம்முதே...… புதன் கிழமையன்னைக்கு பார்லிமெண்ட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், தீர்மானத்தை ஆதரிப்பது சம்பந்தமா இந்தியா இன்னும் முடிவெடுக்கலைன்னும், தீர்மானத்தோட இறுதி வடிவங்கள் பற்றியும், அதில் உள்ள அம்சங்கள் பற்றியும் ஆய்வு செய்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும்னும் சொல்லியிருக்காரே.''…
""இதுதான் இந்தியாவோட இலங்கை ஆதரவு நிலைக்கான பச்சையான ஸ்டேட்மெண்ட்டுன்னு விவரமறிந்த டெல்லிக்காரங்க சொல்றாங்க தலைவரே.. அமெரிக்காவோட தீர்மானத்தை நிறைவேறவிடாம செய்யணும்னு ரொம்பவே பாடுபட்ட ராஜபக்சே, அது முடியாதுங்கிறதால தீர்மானத்தை இன்னும் நீர்த்துப் போகச் செய்யணும்னு நினைக்கிறார். பன்னாட்டு விசாரணை, பொருளா தாரத் தடை போன்ற அம்சங்கள் எதுவும் தீர்மானத்தில் இருந் திடக்கூடாதுன்னு லாபி பண்ண ஆரம்பிச்சார். இந்தியாவோட குரலும் ராஜபக்சே லாபிக்கு ஏற்ற மாதிரியே ஒலிக்குது. இதற்கிடையிலே, ராஜபக்சேவை கொழும்பில் சந்திச்சிட்டு வந்து, திருச்சி ஏர்போர்ட்டில் பேட்டி கொடுத்துட்டுப் போன சுப்ரமணிய சாமி, திடுதிப்புன்னு அமெரிக்காவுக்குப் பறந்துட்டாரு. இந்திய அரசின் கவனமோ ஆலோசனையோ இல்லாம போயிருப்பாரான்னு அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்திருக்கு.''
""இந்தியாவின் நிலைப்பாடு இப்படி வெளிப்படையா ராஜபக்சேவுக்கு ஆதரவா இருக்கிற நிலையில், அமெரிக்க தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கணும்னு வலியுறுத்தி டெசோ சார்பில் 12-ந் தேதி பொதுவேலைநிறுத்தம்னு கலைஞர் அறிவிச்சிருக்காரே.. அதுபோல டெல்லியில் டெசோ கருத்தரங்கம் 7-ந் தேதி நடந்ததே, இதனால இந்தியாவின் நிலைப்பாடு மாறுமா?''
""பா.ஜ.க தலைவர் யஷ்வந்த்சின்ஹா பேசியதைக் கேட்டிருப்பியே?''
""புட்டு புட்டு வச்சிட்டாரே.… பாலச்சந்திரன் புகைப்படம் போரின் ஒரு கோர முகத்தை வெளிப் படுத்தியுள்ளது. அது உக்கிரமான இலங்கைப் போரின் ஒரு சான்று. மாறி வரும் சூழலில் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வேண்டும். போரின் போது சென்னையில் தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அளித்த உறுதி மொழி வேறு. இலங்கை சென்றபின்னர் தேசிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் வேறு. சிங்கள படை வெற்றிக்கு இந்தியா உதவியதும் தங்களின் வெற்றிக்கு ஒரு காரணம் என ராஜபக்சே அப்போது தெரிவித்திருந்தார். தமிழர்கள் மீதான இனப் படுகொலை குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும். சர்வதேச அமைப்பு பிரதிநிதிகள் மூலம் விசாரணை நடத்தவேண்டும். ஐ.நா.வில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்தை இந்தியாவே வடிவமைக்க வேண்டும்னு சின்ஹா அழுத்தமா சொன்னாரே..''
""இதற்கப்புறமாவது இந்தியாவின் நிலைப்பாடு மாறுமா? தமிழக கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் இலங்கை பிரச்சினை தொடர்பா நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்திருக்காங்களே.''…
""ஐ.நா. மனித உரிமை ஆணையமே, இலங்கை அரசாங்கம் இன்னமும் பாடம் கற்றுக்கொள்ளவில்லைன்னும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அது கொடுத்த வாக்குறுதிப்படி விசாரணை நடத்தலைன்னும் தமிழர்கள் மறுகுடியேற்றம் செய்யலைன்னும் குற்றம்சாட்டியிருக்கே.. அப்புறம் இன்னமும் இந்தியா ஏன் பம்முது? டெல்லி டெசோ மாநாட்டில் இது சம்பந்தமா என்ன பேசினாங்க?''
""தலைவரே... கனிமொழி வரவேற்புரையாற்ற தி.க.வீரமணி, ஸ்டாலின், திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினாங்க. டெல்லியில் நடந்த டெசோ மாநாடு வெற்றி அடையும் என்று தமிழர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், காங்கிரஸ் சார்பாக குலாம்நபி ஆசாத்தையும், தேசியவாத காங் கிரஸ் சார்பாக சரத்பவாரின் மகள் சுப்ரியாவையும் தாண்டி வேறு எந்த வட இந்திய தலைவர்களும் கலந்துகொள்ள வில்லை. சென்னையில் நடந்த டெசோ மாநாட்டில் கலந்துகொண்ட வட இந்திய தலைவர்கள்கூட டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்துகொள்ளாதது தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டுக்கு பின்னடைவே என்று அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் கவலை தெரிவித்தார்கள்.''
""சரி... இந்தியாவின் நிலைப்பாடு இனி மாறுமா? அல்லது ராஜபக்சேவோட கொடூர செயல்களுக்குத் துணையாகவே இருக்குமா?''
""அது சம்பந்தமா நான் சொல்றேன்.. இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கணும்ங் கிறதுதான் டெல்லியில் டெசோ மாநாடு நடந்ததன் நோக்கம். டெசோ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுவேலை நிறுத்தப் போராட்டத்தின் பின்னணியும் அதுதான். நாடாளுமன்றத்திலும் டெசோ மாநாட்டிலும் மற்ற தளங்களிலிருந்தும் ஒலிக்கும் அழுத்தமான குரல்களையடுத்து, ஐ.நா. மனித உரிமை தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பதாக மத்திய அரசு அறிவித்தால், பொது வேலை நிறுத்தத் தை கைவிடுவதுங்கிறதுதான் கலைஞரோட நிலையாம்.''
லாஸ்ட் புல்லட்
எரிவாயுக் குழாய்களை பதிக்கும் விவகாரத்தில் அரசின் ஆலோசகரான முன்னாள் தலைமைச்செயலாளர் சாரங்கி யின் பதவி பறிபோனது. குழாய் பதிப்புத் தொடர்பாக நடக்கும் கருத்துக்கேட்புக் கூட்டங்களில் விவசாயிகள் தங்கள் நிலை மையை கண்ணீருடன் விளக்கினர். அதே நேரத்தில் மத்திய அரசின் கெயில் நிறு வனமும் தனியார் நிறுவனமான ரிலை யன்சும் அரசுத் தரப்புடன் தொடர்பில் உள்ளன. எம்.பி. தேர்தல் நேரத்தில் விவசாயிகளின் வாக்குகளைத் தக்க வைப்பதா, பெரிய நிறுவனங்களின் தேவையை நிறைவேற்றுவதன் சாதகங்களை கவனிப்பதா என ஆலோசிக் கிறாராம் ஜெ. டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் பொறுப் பிலிருந்து முன்னாள் ஐ.பி.எஸ் நட்ராஜ் ஓய்வு பெறுவதை யடுத்து, அந்தப் பதவிக்கு அறிவிக் கப்பட்டிருக்கிறார் அட்வகேட் ஜெனரலாக இருந்த நவநீதகிருஷ்ணன். நீதிபதி பதவியை எதிர்பார்த்திருந்த வருக்கு சேர்மன் பதவி. அய்யா வைகுண்டரின் பிறந்த நாளன்று கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவ் வழக்கம் நீடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு திடீரென, விடுமுறை அறிவிப்புக்கு முயற்சி எடுத்த அமைச்சர் பச்சை மாலுக்கு நன்றி என போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. விசாரித்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்த உள்ளூர் விடுமுறை குறித்து அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்கள் முயற்சிப்பார்கள். ஆனால், இந்த முறை பச்சை மால் வேண்டுமென்றே மறந்து விட்டாராம். உளவுத்துறை மூலம் இந்தத் தகவல் மேலே போய், அதன்பிறகே கலெக்டர்களுக்கு விடுமுறை விடுவதற்கான ஆர்டர் வந்துள்ளது. இந்த விஷயத்தை அமுக்கத்தான், அமைச்சர் முயற்சி எடுத்ததுபோல நன்றி போஸ்டர்களாம். |