ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு தயார் : சுமந்திரன் எம்.பி
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிதளவேனும் அமுல்படுத்தவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருடன் பகிரங்க விவாதத்திற்கு நான் தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச விசாரணையினை தவிர அனை த்து பரிந்துரைகளையும் நிறைவேற்றத் தயார் என்ற ஜனாதிபதியின் கருத்து தொட ர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு
கருத்துத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களின் சர்வதேச விசாரணை தவிர்த்து ஏனைய பரிந்துரைகளை நிறைவேற்றத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணைகளைத் தவிர மிக முக்கியமான விடயங்களாக வடக்கில் இருந்து இராணுவத்தைக் குறைக்க வேண்டும். தனியார் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மீள் குடியேற்றத்தினை மேற்கொள்ள வேண்டும். வட மாகாண சபைக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படல் வேண்டும் ஆகியவை உள்ளடங்களாக பல விடங்கள் அமைந்துள்ளன. இவ்விடயங்களினால் வட மாகாண தமிழ் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் அரசாங்கம் தீர்வினை எய்துவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையினையும் எம்முடன் மேற்கொள்ள விரும்பவில்லை. இது தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே, இவை தொடர்பில் யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாக அரசாங்கம் எந்தவித முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ளாது இப்போது சர்வதேச விசாரணையைத் தவிர ஏனைய அனைத்தையும் மேற்கொள்ள முடியும் என்று ஜப்பான் அமைச்சரிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அரசாங்கம் ஐ.நா. பரிந்துரைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராகவே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்தது. வடக்கில் காணி அபகரிப்பு, இராணுவ குவிப்பு, பெண்கள் மீதான அடக்கு முறைகள் மற்றும் வட மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் இன்னமும் அடக்கு முறைக்குள்ளேயே வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனவே, சர்வதேசத்திடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து காலத்தைக் கடத்தியது போதும். இப்போதும் அனைத்தையும் செய்வோம் எனக்கூறி கதைத்துக் கொண்டிருக்காமல் செயலில் காட்ட வேண்டும். ஜனாதிபதி ஜப்பானிய அமைச்சரிடம் குறிப்பிட்டது அனைத்தும் உண்மையெனின் இம்மாத இறுதிக்குள் அனைத்தையும் செயற்படுத்திக் காட்ட வேண்டும்.
மேலும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 70 வீதமானவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆணைக்குழுவின் செயலணிக் குழுத்தலைவர் லலித் வீரதுங்கவே இதனை குறிப்பிட்டு வருகின்றார். ஆனால், உண்மையிலேயே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 20 வீதமேனும் செயலாக்கப்படவில்லை. இன்றும் வடக்கில் அனைத்து செயற்பாடுகளிலும் கட்டுப்பாடுகளே விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவுடன் பகிரங்க விவாதத்தை நடத்த நான் தயாராகவே உள்ளேன். ஆதாரமிருப்பின் செயற்படுத்திய திட்டங்களை லலித் வீரதுங்க காண்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.