தமிழகத்தின் மின் நிலைமையைப் பற்றி உயரதி காரிகளுடன் ஆய்வு நடத்திய முதல்வர் ஜெயலலிதா, "தமிழகத்தில் உயரழுத்த மின் நுகர்வோருக்கான கட்டுப் பாடுகள் அனைத்தும் தளர்த் தப்படுகிறது. ஜூன் 1 முதல் மின் வெட்டு இருக்காது' என்று தெரிவித்தார்.
அப்பாடா... என்று மக்களும் தொழில் முனைவோ ரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால், ஜூன் 1 முதல் மின்வெட்டு நீக்கப்பட்டதா? இல்லை. அன்றைய தினம்தான் சென்னை நீங்கலாக தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்தது. நொந்துபோன மக்கள், இரவு நேரங்களில் தூக்கமின்றி வீதியில் நிற்கும் அவல நிலைக்கு ஆளானார்கள். தொழில்கள் முடங்கிப் போயின. மின்சார பிரச்சினையில் தமிழக அரசில் என்னதான் நடக்கிறது என சம்பந்தப்பட்ட ஏரியாக்களில் ஒரு ரவுண்ட் வந்தோம்.
தமிழக மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""அனல் மின்சாரம், புனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம், மத்திய மின் தொகுப்பு, வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்குதல் என 5 வழிகளில் நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. 2011-ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபோது தமிழகத்தின் மின்உற்பத்தி 8 ஆயிரம் மெகாவாட். மின் தேவையோ 12 ஆயிரம் மெகாவாட். அந்த வகையில் அப்போதே 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை. இந்த மூன்று வருடங்களில் மின் நுகர்வோர்கள் 30 லட்சம் அதிகரித்திருக்கிறார்கள். வருடத்திற்கு 1000 மெகாவாட் கூடுதலாக நமக்குத் தேவைப்படுகிறது. அந்த வகையில் தற்போதைய மின் பற்றாக்குறை 5000-த்திலிருந்து 5500 மெகாவாட்டாக இருக்கிறது.
"ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதங்களில் மின் வெட்டை நீக்குவேன்' என்றவர்கள், இதையெல்லாம் கணக்கிட்டு, பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே மின் உற்பத்தியை பெருக்குவதற்கான குறுகிய கால, நீண்ட கால திட்டங்களைப் போட்டிருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை. இந்த ஆட்சியின் புதிய மின் திட்டம் என்று சொல்வதற்கேற்ப இது வரை ஒரு மின் திட்டம் கூட செயல்படுத்த முனையவில்லை. வெளிச்சந்தையில் மின்சாரத்தை வாங்கிக்கொள்ளலாம் என்கிற கொள்கை முடிவை எடுத்து அதன்படி அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதில்தான் அக்கறை காட்டினார்களே தவிர, சொந்தமாக மின் திட்டத்தை கொண்டுவருவோம்ங்கிற முனைப்பு இருக்கவே இல்லை. அதனால்தான் முந்தைய ஆட்சி காலத்தைவிட இன்றைய ஆட்சியில் மின்வெட்டு அதிகரிக்க காரணம்'' என்று சுட்டிக் காட்டினார்கள்.
ஆட்சியாளர்களின் அலட்சியத்திற்கு உதாரணமாக, ""கடந்த தி.மு.க. ஆட்சியில் எண்ணூர் விரிவாக்கத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டம் கொண்டுவரப்பட்டு எல்லா பணிகளும் முடிந்து டெண்டர் ஃபைனலைஸ் ஆகும் நேரத்தில் தேர்தல் குறுக்கிட்டதால் அது நிறுத்தி வைக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. மின் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்திய அரசிடம் இந்த திட்டம் குறித்து விளக்கினார்கள் வாரிய உயரதிகாரிகள். அப்போது இதற்கு அனுமதியளித்திருந்தால் 2013-ல் அந்த திட்டம் மின் உற்பத்தியைத் துவக்கியிருக்கும். ஆனால், தி.மு.க. திட்டம் என்பதால் அதனை கிடப்பில் போட்டனர். அப்படிப் போட்டவர்கள் புதிய திட்டம் கொண்டு வந்தி ருக்க வேண்டும்தானே. அதையும் செய்யவில்லை. இந்த சூழலில், அந்த திட்டத்தை மீண்டும் கையி லெடுத்த அரசு, தி.மு.க.வின் திட்டமாக இருக்கக்கூடாது என்பதற்காக, 600 மெகா வாட் என்பதை 660 மெகாவாட்டாக மாற்றி இந்த ஆட்சியின் திட்ட மாக கொண்டு வந்துள்ள னர். இதற்கான டெண்டர் பார்ஃமாலிட்டிகளெல்லாம் முடிந்து அண்மையில் தான் அதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், மின் உற்பத்தியை துவக்க பல மாதங்கள் ஆகும். இதனை ஆட்சிக்கு வந்த உடனே செய்திருந்தால் இந்நேரம் நமக்கு மின்சாரம் கிடைத்திருக்குமே!'' என்று ஆதங்கத்தைக் கொட்டினார்கள்.
மின்வெட்டு நீக்கப்படாமல் அதிகரிக்கவே செய்திருக்கிறதே என்கிற கேள்வியை, தமிழ்நாடு மின்வாரிய சேர்மன் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்.ஸிடம் நக்கீரன் முன்வைத்தபோது, ""மின் வெட்டு அதிகரித்திருக்கிறது என்று சொல்வது தவறானது. முதல்வர் சொல்லியிருப்பது போல, ஜூன் 1 முதல் மின் வெட்டு அறவே நீக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் மின் பற்றாக்குறை இல்லை. மின்வெட்டு நீக்கப்பட்டுவிட்டதுங்கிறதுதான் உண்மை. சில இடங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் கரண்ட் துண்டிக்கப்பட்டிருக்கும். பழுது நீங்கியவுடன் சப்ளை வந்துவிடும். ஸோ, லோட் செட்டிங்தான் நடந்திருக்குமே ஒழிய மின்வெட்டு தமிழகத்தில் இல்லை'' என்று அடித்துச் சொல்கிறார்.
ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பணியாளர்களோ, ""லோட் செட்டிங் என்பது கண்துடைப்பு. அறிவிக்கப்படாத மின்வெட்டுதான் அமலாகிறது. மின்சாரம் துண்டிக்கப் பட்டிருப்பதை அறிந்து மின் அலுவலகத்துக்கு புகார் தெரிவித்தால் மின்வெட்டு என்று சொல்லாமல், அங்கு வயர் கட்டாயிடுத்து, இங்கு ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்து விட்டது, பராமரிப்பு பணி நடக்கிறது என்று சொல்ல வேண்டும் என்பது மேலிட உத்தரவு. அதனால் மின் வெட்டு என்பதை இப்படி லோட் செட்டிங் என்று சொல்லி சமாளிக்கிறார்கள்'' என்கிறார்கள்.
இந்த நிலையில், நீண்டகால ஒப்பந்த கொள்முதல் அடிப்படையில் 15 வருடங்களுக்கு 3300 மெகாவாட் மின் சாரத்தை தனியாரிடம் வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது ஜெயலலிதா அரசு. இதனைத்தான், கலைஞரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார். இது குறித்து அவரிடம் நாம் பேசியபோது, ""நீண்டகால ஒப்பந்தமாக 15 வருடத்திற்கு தனியாரிடம் 3300 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதில் முறையான நடைமுறைகளை பின்பற்றினார்களா என்கிற சந்தேகம் இருக்கிறது. அதனால் வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிற விவகாரத்தில் வெள்ளையறிக்கையை இந்த அரசு வெளியிட வேண்டும்'' என்கிறார்.
இதன் பின்னணிகள் பற்றி மின்வாரிய தொழிற்சங்கங்களிடம் பேசிய போது, ""குஜராத்திலுள்ள அதானி, மகாராஷ்ட்ராவிலுள்ள ஜே.எஸ்.டபிள்யூ, சத்தீஸ்கரிலுள்ள இந்துபாரத், மற்றும் டி.பி.ரியாலிட்டி உள்பட 6 தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து இந்த 3300 மெகாவாட் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கடந்த வருடம் போடப்பட்டது. இந்த வருடம் ஆகஸ்ட்டிலிருந்து அந்த நிறு வனங்கள் படிப்படியாக மின்சாரத்தை விநியோகிக்கவிருக்கிறது. இவர்களில் குஜராத் அதானி குரூப் பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான நிறுவனம். மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம் 4 ரூபாய் 91 காசுகளுக்கு வாங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது.
இந்த விலை ஒவ்வொரு வருடமும் மாறுதலுக்கு உட்பட்டது. மேலும், இந்த ரூ.4.91 காசுகள் என்பது டேரிப் விலைதான். இதைத்தாண்டி வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத் திற்கு கொண்டுவரும் செலவு உள்ளிட்ட மற்ற செலவுகளையும் சேர்த்தால் ஒரு யூனிட்டுக்கு 8 முதல் 10 ரூபாய் வரை வரும். ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2013 ஜூனில் பிறப்பித்த உத்தரவில் தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்தை 1 யூனிட்டை 3 ரூபாய் 50 காசுகளுக்கு மட்டுமே வாங்கவேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியிருக்கிறது. இதில் கொடுமை என்னன்னா, ஒழுங்குமுறை ஆணையம் விதித்த விலை நிர்ணயத்திற்கும் கூடுதலாக தமிழக அரசு வாங்கும் கூடுதல் விலை யை ஆணையமே ஒப்புக்கொண்டி ருக்கிறது என்பதுதான். ஆக, நீண்டகால திட்டமாக சுமார் 3 ஆயிரம் கோடி யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவிருக்கிறார்கள். (ஒரு யூனிட்டிற்கு 1 ரூபாயாம்)
இதுதவிர, தமிழகத்தில் உள்ள தனியார் மின் நிறுவனங்களிடமிருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்து வருகிறது வாரியம். குறிப்பாக, மதுரை பவர் கார்ப்பரேசன், ஜி.எம்.ஆர்., பிள்ளைப்பெருமான்நல்லூர், சாம்பல்பட்டி ஆகிய 4 நிறுவனங்களிடமிருந்தும் மொத்தம் 700 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படுகிறது. இதில் ஜி.எம்.ஆர். நிறுவனத்திடம் மட்டும் 250 மெகாவாட். இதில் மதுரை பவர் கார்ப்பரேசனிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை 10 ரூபாய் 96 காசுகளுக்கும், ஜி.எம்.ஆரிடமிருந்து 10 ரூபாய் 41 காசுகளுக்கும், சாம்பல்பட்டியிடமிருந்து 10 ரூபாய் 18 காசுகளுக்கும், பிள்ளைபெருமாள்நல்லூரிடமிருந்து 8 ரூபாய் 55 காசுகளுக்கும் என விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது மின்வாரியம். அரசு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து வாங்கும் விலையை விட மேற்கண்ட கம்பெனிகளிடம் இரண்டு மடங்குக்கும் கூடுதல் விலை தந்து வாங்கி வருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு மெகாவாட்டிற்கு 50 லட்சம் என 700 மெகாவாட்டுக்கும் 350 கோடி ரூபாயாம்.
தமிழ்நாடு மின்பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் காந்தியிடம் இது குறித்து பேசியபோது, ""தமிழக மின்சாரவாரியம் இன்றைய நிலையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் இருப்பதாக வாரியம் வெளிப் படையாகச் சொல் கிறது. அரசும் இதனை உறுதிப் படுத்துகிறது. மிகப் பெரிய அளவிற்கு நட்டத்தை வாரியம் சந்திக்க காரணம், வெளிச்சந்தையில் அதிக விலை கொ டுத்து மின்சாரத்தை வாங்குவதுதான். வாரியத்தின் நட் டத்தை குறைக்கும் வகையில் வருடத் திற்கு 5 ஆயிரத்து 177 கோடி ரூபாயை மானியமாக அரசு தருகிறது. இது, உணவு மானியத்தைவிட அதிகம். இந்த 5 ஆயிரம் கோடி ரூபாயில் சில மின்திட்டங் களை ஒவ்வொரு வருசமும் அரசே கொண்டுவந்திருந்தால் வெளிச்சந்தையில் மின்சாரத்தை கொள்முதல் செய்வது குறைந்திருக்கும். அப்படிக் குறையும்போது, வாரியத்தின் நட்டமும் குறையத் துவங்கும். ஒரு கட்டத்தில் வெளிச்சந்தையில் வாங்க வேண்டிய நிலையே உருவாகாது. அப்போது வாரியம் லாபத்தில் இயங்கும். இப்படிப்பட்ட விசயத்தில் கவனம் செலுத்தாமல், தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்வது என்கிற நிலைப்பாடு மின் பிரச்சினைக்குத் தீர்வாகாது'' என்கிறார் அழுத்தமாக.
புது மின் திட்டங்களைத் துவக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்தால் மக்களுக்கு லாபம். எங்களுக்கு? என்கிற கேள்வி ஆள்வோ ரிடம் எழுகிறதே!
-இரா.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்
தாய்மார்களின் அனுபவம்!
தமிழக முதல்வரும் 2014 ஜூன் 1 முதல் மின்வெட்டே இருக்காது என்று ஓங்கி அடித்துச் சொன்னார்.
முதல்வரும் அமைச்சரும் சொன்னபடி தமிழகம் உள்ளதா? |