தமிழகத்தில் இடைத் தேர்தல் பணிகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ' வேட்புமனு
பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடக்க இருக்கிறது. அன்று ஒரு பெரும் பிரச்னையைக் கிளப்ப தி.மு.கவும் பா.ஜ.கவும் தயாராகி வருகின்றன' என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கு வருகிற நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. தேர்தல் களத்தில் பிரதான போட்டியாளர்களாக தி.மு.கவும் அ.தி.மு.கவும் உள்ளன. முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சூழலில், மூன்று தொகுதிகளையும் கைப்பற்றிவிட முடிவெடுத்திருக்கிறது தி.மு.க. "சட்டமன்றத்தில் தங்களுடைய பலத்தைக் கூட்டியாக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின். வருகிற 26-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 3-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடக்க இருக்கிறது. அன்று கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள், கட்சித் தலைவரின் கையொப்பமிட்ட விண்ணப்பத்தை (ஃபார்ம் பி) தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தில் இங்க் மையால் கட்சித் தலைவர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும். இந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு தி.மு.க, பா.ஜ.கவும் அரசியல் செய்ய உள்ளன.
'முதல்வர் கையெழுத்து தொடர்பாக தேர்தல் ஆணையரின் அப்பாயின்மென்ட்டை வாங்கி வைத்திருக்கிறீர்கள். இடைத்தேர்தலில் முதல்வர் கையெழுத்தை வைத்து மோசடி நடக்கிறது என புகார் கொடுங்கள்' எனப் பேசியிருக்கிறார். அவரிடம் பேசிய சசிகலா புஷ்பா, "தேர்தல் ஆணையரை சந்திக்க அனுமதி வாங்கியிருப்பது உண்மைதான். என்னுடைய அரசியல் நிலைப்பாடு என்பது, சசிகலாவுக்கு எதிராகத்தான். அதை நீங்கள் குழப்ப வேண்டாம். முதல்வர் நலமில்லாமல் இருக்கும் சூழலில், தஞ்சாவூரில் சசிகலா போட்டியிட களமிறங்கியிருந்தால், கண்டிப்பாக ஆணையரை சந்தித்து இருப்பேன். அப்படியொரு சூழல் உருவாகவில்லை. தற்போது போட்டியிடும் வேட்பாளர்களும் முதல்வரின் விருப்பப்படிதான் களமிறங்குகிறார்கள். சோதனையான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக இருந்ததற்கு நன்றி. ஆணையரை சந்திக்கும் முடிவில் நான் இல்லை' எனத் தெளிவாகக் கூறிவிட்டார். இதையடுத்து, வேட்புமனு பரிசீலனையின்போது, கையெழுத்து தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்தும் முடிவில் தி.மு.கவும் பா.ஜ.கவும் உள்ளன" என்றார் விரிவாக.
நவம்பர் 3 அன்று தி.மு.க எழுப்பப் போகும் அதிரடியை, அ.தி.மு.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது?