“தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலை அமைப்பினுடைய தலைமகனாரின் மறைவையொட்டி மனங்கொள்ள வேண்டியவைகள் -முத்துச்செழியன்-

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஒப்பிடற்கரிய ஈகங்களைத்
தன்னுடைய வரலாறாகக் கொண்டது. வரலாற்றின் விளைபொருளான மறவழித் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தாங்கு தூண்களும், இயங்கு ஆற்றலும் தமிழிளையோர்களே! தமிழீழ மக்களின் விடிவிற்காகத் தம்மை ஒறுத்த தமிழிளையோரிற் சிலர் விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளாகவும் ஏனைய பலர் பங்காளர்களாகவும் வரலாற்றிற் பதிவாகியுள்ளனர். தமிழர்தேசத்தின் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையானது இன்னார், இன்னாரல்லோர் என்ற நோக்குநிலையற்று ஒட்டுமொத்த தமிழர்களின் மீதான வன்மமாகவும், ஒட்டுமொத்த இலங்கைத்தீவையும் சிங்கள பௌத்த நாடாக்கும் பேரினவாதவெறியாகவும் ஒடுக்குமுறை வெறியாட்டம் ஆடியதால் அமைவிட வேறுபாடின்றியும், பொருண்மியப் படிநிலை வேறுபாடின்றியும், குமுகாய அமைப்பு வேறுபாடின்றியும் தமிழர்கள் அனைவரையும் பாதித்தது.நில வன்கவர்வுகளால் தமிழீழத்தின் எண்ணிக்கையில் அதிகமான எல்லையூர்களைச் சேர்ந்தோர் கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர்; தனிச் சிங்களச் சட்டத்தினால் தமிழர் அனைவரும் பாதிக்கப்பட்டனர்; இனமேலாதிக்க நோக்கிற் கொண்டுவரப்பட்ட கல்வியில் தரப்படுத்தலால் அரச பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியைப் பெற்றுவிட வேண்டுமென்ற வேட்கையிலிருந்த பெருமளவான நடுத்தரக் குடும்ப இளையோர்கள் பாதிக்கப்பட்டனர்; தென்னிலங்கைப் பகுதியில் அரச பயங்கரவாதத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்கள் மீதான இனவன்முறைகள் மற்றும் தமிழர்களின் பொருண்மியத்தைச் சிதைத்தழிக்கும் நோக்கிலான அழிப்பு நடவடிக்கைகளால் பதவிகளிலிருந்த நடுத்தர மற்றும் மேட்டுக்குடிகளும் வணிகமாற்றிய நடுத்தர மற்றும் மேற்தட்டு மக்களும் மற்றும் மலையகத் தமிழர்களும் பாதிக்கப்பட்டனர்; இதனால், வேறுபட்ட வாழ்வியற் பின்னணிகளைக் கொண்ட தமிழிளையோரும் ஒடுக்குமுறைக்கெதிரான விடுதலைத் தீயில் வேகுவதற்கு வெகுண்டெழுந்தனர்.
இருப்பினும், பாதிப்புகளின் அளவும் அந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கக் கூடிய வாய்ப்புகளும், பாதிப்புகளிலிருந்து மீண்டுவரக்கூடிய குமுகாய, பொருண்மியச் சூழமைவும் எல்லாத் தமிழர்கட்கும் ஒரேயளவினதாக இருந்திருக்கும் என்றில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனினும், விடுதலை வேட்கையுடன் வெகுண்டெழுந்த எல்லோரினது உறுதியும் ஒரேயளவினதாக இருந்ததா? ஊசலாட்டத் தரப்பினர் எவ்வகையினர்? கருத்தியற் குழப்பங்களால் காவுகொள்ளப்பட்டவர்கள் எதனால் அவ்வாறு ஆகினர்? உசிப்பிவிட்டு ஓடித் தப்பியவர்கள் எந்த வகைப்பாட்டினுள் மதிப்பிடப்பட்டார்கள்? அவர்களில் யார் உழைக்கும் மக்களின் பிள்ளைகள்? யார் தரகு முதலாளிகளின் வழித்தோன்றல்கள்? யார் குட்டி முதலாளித்துவப் பின்னணியினர்? யார் ஓடுகாலிப் பண்பினர்? யார் காலனிய அடிமை மனநிலையினர்? யார் குறுங்குழுவாதிகள்? யார் குறுந்தேசிய வாதிகள்? யார் தேச விடுதலையின் இன்றியமையாமையை உணர்ந்து இறுதிவரை உறுதியான புரிதலில் நின்றவர்கள்? யார் பாதி வழியில் பயணம் மாறி மீதி வழியில் ஒடுக்குமுறையாளரின் ஒத்தோடிகளானவர்கள்? போன்ற வினாக்கட்கு விடையிறுக்கும் ஆய்வுகள் தொடரட்டும். ஆனால், இன்னார் தான் போரிட வந்தார்; இன்னாரெல்லாம் வரவேயில்லை என்று மட்டுக்கட்டி மதிப்பிட முடியாதவாறு பல்வேறு வாழ்வியற் பின்னணிகளைக் கொண்ட தமிழிளையோரும் வீறுகொண்டு விடுதலைக்காகப் போராட முன்வந்தனர் என்பதை யாரும் மறுத்திட மாட்டார்கள்.
அந்த வகையில், பிறப்பாலும், செல்வச் செழிப்புக் கொண்ட குடும்பப் பின்னணியாலும், வாழ்நிலையாலும், கல்வி மற்றும் விளையாட்டுகளில் ஈட்டிய அடைவுகளாலும், வாய்த்த வாய்ப்புகளாலும் ஒய்யாரமாக இளமைத் துள்ளலுடன் வாழ்ந்துவிட்டுப் போக அத்தனை வழிகளிருந்தும், தம் மக்களும் தாயகமும் ஒடுக்குண்டு கிடப்பதைச் சகித்துக்கொள்ள இயலாமல், விடுதலை வேட்கையுடன் தம்மை ஒறுத்துத் தமது மக்களின் விடுதலைக்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களைத் தமிழீழ வரலாறு தன்னிற் பதிவுசெய்திருக்கிறது.
அப்படியாக, இளமையில் ஏழ்மை தெரியாத, நினைத்தவற்றை நிறைவேற்றும் பொருண்மியவன்மையும் குடும்பப் பின்னணியும் கொண்ட மிகவும் செல்வந்தக் குடும்பத்தில் 1955.06.25 அன்று புங்குடுதீவில் பிறந்தவர் தான் பின்னாளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முன்னோடிகளில் ஒருவராக உயர்ந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (தம்பா என்று தோழமையுடன் அழைக்கப்பட்டவர்). நல்ல உடல்வலிமையும் மெச்சத்தக்க அறிவாற்றலும் கொண்ட மாணவனாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விபயின்ற இவர் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் மெய்வன்மையுடையோனாகவும் திகழ்ந்தார். அத்துடன், உயர்கல்விக்காக இலண்டன் பல்கலைக்கழகம் சென்று பொறியியற் கல்வியைத் தொடர்ந்த இவர், ஈழ மண்ணில் தமிழர்கள் இனவழிப்பிற்குள்ளாவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல் தன்னை ஒறுத்துப் போராடுவது என்ற முடிவுடனும் தன் மக்கட்காக எந்நேரமும் உயிர்துறக்கும் ஈக உணர்வுடனும் 1970 களின் இறுதியில் இறுதிநிலையை அடையும் தறுவாயில் இருந்த அவரது பொறியியற் பட்டப்படிப்பைத் தூக்கிப்போட்டு விட்டுத் தமிழீழத் தாயகம் திரும்பினார்.
அகன்ற வாசிப்பும், மதிநுட்பமும், தொழினுட்பங்களைத் தெரிந்து தெளிந்துகொள்ளும் நாட்டமும், பல்வேறு அறிவுத்துறைகளிலும் அகன்ற ஆய்வுத்தேடலும், உலக வரலாற்றின் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளும் ஆற்றலும் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற வியத்தகு ஆளுமையாகத் தமிழீழ மறவழிப் போராட்ட வரலாற்றில் இடம்பிடித்த கட்டற்ற கலைக்களஞ்சியமாக இவர் திகழ்ந்தார். தம்மை ஒறுப்பதென்பதென்பது ஒன்று. ஒறுப்பதற்கு என்னென்னவுண்டோ அவை அனைத்தையும் ஒறுப்பதென்பது இன்னொன்று. தம்பா அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகத் தன்னை ஒப்புக்கொடுத்த பின்பு அவரின் ஒறுத்தலின் மாண்பென்பது அந்தக் கால யாழ்ப்பாணக் குமுகாய அமைப்பில் யாரும் செய்யத் துணியாதது மட்டுமல்ல எண்ணிப் பார்க்கக் கூட இயலாத ஒன்றாகவிருந்தது. அதாவது, தனது தமக்கையின் இல்லற இணையேற்பு நிகழ்வானது மிகவும் கோலாகலமாகவும் ஒய்யாரமாகவும் கொண்டாடப்பட இருந்த நாளுக்கு முதல்நாள் இல்லற இணையேற்பிற்கென மணமகளும் உடன்நின்றாரும் அணிந்துகொள்வதற்கென பெட்டகத்தில் வைத்திருந்த 300 பவுன் தங்கநகைகளை யாரிற்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, அந்த நகைகளை விற்றுப்பெற்ற பணத்தின் மூலமே தனது மறவழிப்போராட்ட வரலாற்றைத் தம்பா அவர்கள் தொடங்கினார்.
பின்னாளில் இது பற்றி அவரது சிறைத்தோழர் வினவிய போது “என்னுடைய குடும்பம் வசதியானது. இந்த இழப்பினை ஈடுசெய்யவோ அல்லது இயலாது போகினும் நல்லதொரு வாழ்வை மீளக்கட்டியமைக்கவோ அவர்களால் இயலும். ஆனால், எமது மக்கள் படும்பாட்டினைப் பார்க்கும் போது, எமது மக்கள் ஒடுக்குண்டு வாழாதிருக்கும் போது, எங்கும் சாவு ஓலங்கள் என் மண்ணில் கேட்கும் போது, இந்த ஒடுக்குமுறைக்கெல்லாம் முடிவுகட்டி என் மக்களைக் காப்பதைத் தவிர வேறொன்றும் எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அப்படியாக, ஒரு விடுதலைப் படையைக் கட்டுவதற்கான முதற்கட்டப் பொருண்மியத் தேடலில் வசதிவாய்ப்புடைய எனது குடும்பத்தின் தனியுடைமைத் தங்க நகைகள் என் கண்ணிற்குத் தெரிந்தன” என்றாராம்.
ஈகங்களின் எல்லைகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல தளங்களில் மீறப்பட்டுள்ளது. கரும்புலி கப்டன் மில்லருடன் தொடங்கிய கருவேங்கைகளின் எல்லை கடந்த ஈகங்கள், ஒரு சொட்டுத் தண்ணிகுடிக்காமல் அணுவணுவாகத் தன்னை ஈந்த ஈகைப்பேரொளி லெப். கேணல் திலீபன் அவர்களின் எல்லைகளை விஞ்சிச் சென்ற ஈகம், தாம் பெற்ற மகவுகளை ஒவ்வொன்றாகத் தமீழீழ விடுதலைப் போராட்டத்தில் விதைத்துவிட்டு வாழாதிருந்த பெற்றாரின் ஈகங்கள், தானுண்டு தம்பிள்ளைகளுண்டு என்று வாழும் குமுகாய அமைப்பினை உடைத்துக் கொண்டு ஈகத்தின் எல்லைகளை மேவிவந்து நரபலி இந்திய வல்லூறே தமிழீழ மண்ணை விட்டு வெளியேறு என்ற கோரிக்கை முழக்கத்துடன் உண்ணாமல் கிடந்து உயிர்துறந்த அன்னை பூபதி அம்மாவின் ஈகம், தன் பிள்ளை முகம் மறைத்தும் முகவரியற்றும் தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கும் கருவேங்கையாக ஈகங்களின் எல்லைகளைக் குறுக்கவும் நெடுக்கவும் தாண்டிக் கடந்துவிட்டாள்/ கடந்துவிட்டான் என்று அறிந்தும் ஊரார் அறியா வண்ணம் (இராணுவத்திடம் பிடிபட்டானோ/ இயக்கத்தால் ஏதேனும் குற்றங்கட்காகத் தண்டிக்கப்பட்டானோ/ தப்பி ஓடிவிட்டானோ/ வெட்கப்படும் படியாக ஏதேனும் செய்துவிட்டுத் தலைமறைவாகி விட்டானோ என்றெல்லாம் அறியாத ஊராரின் வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாக எத்தனையோ கதைகள் அளக்கப்பட்ட போதும்) மட்டுமன்றித் தனது கணவர் கூட தம் பிள்ளையின் நிலையறியாமல் இரகசியங்காத்த ஈகத்தின் தெய்வங்களான தாய்மாரின் ஈகம் என அளப்பரிய ஈகங்களின் உறைவிடமான தமிழீழ மறப்போராட்ட வரலாற்றில் தம்பாப்பிள்ளை அவர்களின் போராட்ட வாழ்வின் தொடக்க நாள்களில் அவர் செய்த ஈகவுணர்வின்பாற்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை நாம் குறைத்து எடைபோடுவது வரலாற்றினை மறுப்பதற்குச் சமனானது.
யாராவது பணங்கொடுத்தால் அமைப்புக் கட்டலாம்; உண்டியல் குலுக்கி அமைப்புக்கட்டலாம் என்று நம்பியோர் (உண்டியல் குலுக்குதல் மக்களிற் தங்கியிருத்தல் என்ற அளவில் அதனை வரவேற்கும் நாம் உண்டியல் குலுக்கியே ஒடுக்கும் அரசின் இராணுவ எந்திரத்தைத் தகர்க்கவல்ல அமைப்பைக் கட்டப்போவதாகச் சொல்லப்பட்டதின் பொருத்தப்பாடின்மையையே இங்கு சுட்டுகின்றோம்); செல்வந்தர்களின் புரத்தலை நம்பித் தொண்டு நிறுவனங்கள் போல அமைப்புக்கட்டப் போவதாக இன்னமும் சொல்லிக்கொள்வோர் என பல வகைமையினர் இன்றளவில் இன்னமும் கூடுதலாக இருக்கும் சூழலில், ஒடுக்கும் பேரினவாத அரசிற்குச் சொந்தமான வங்கிகளில் பணப்பறிப்பை மேற்கொள்வதைத் தொடக்கக்கட்டப் பொருண்மிய மூலமாகக் கொண்டு விடுதலைப் போராட்ட அமைப்பைக் கட்ட முயன்றமையே தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வளர்ச்சிகட்கும் வெற்றிகட்கும் அடிக்கோலிட்டன. அவ்வகையில் செயலாற்றல் மிக்க வலுவான விடுதலை அமைப்பைக் கட்டுதல் என்பது அடிப்படையில் ஒடுக்கும் அரசின் வங்கிகளில் பணப்பறிப்பை வெற்றிகரமாக மேற்கொள்ளுதல் என்பதிலேயே அன்று தங்கியிருந்தது. அந்த வகையில், மிகக் கூடுதலான வங்கிப் பணப்பறிப்பு முயற்சிகளில் துணிகரமாக இறங்கிய மறவழி விடுதலைப்போராட்ட முன்னோடிகளில் முன்னின்றவராகத் தோழர் தம்பா அவர்கள் இருந்தார்.
அப்படியாகத் திருகோணமலை புல்மோட்டையிலுள்ள வங்கியொன்றிற் பணப்பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட போது தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் கைதாகி பனாகொடை இராணுவமுகாமில் சிறைப்பட்டார். விடுதலைக்காகப் போராடிய இளையோர், போராட முன்வந்த இளையோர், தமிழர்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தோர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நயன்மையை (நியாயத்தை) உலகிற்கு உரைத்தோர், உடனின்றோர், உடனின்றதாகக் கருதப்பட்டோர் என பல நூறு இளையோர்கள் அந்நாளில் தளைப்பட்டு இராணுவ முகாம்களிலும் சிங்களக் காவல் நிலையங்களிலும், சிறைகளிலும் கொடுந் துன்புறுத்தல்கட்கு ஆளாகினர். அந்த வகையில், துன்புறுத்தல்கட்குப் பெயர் போன பனாகொடை இராணுவமுகாம் என்ற உயர்பாதுப்புடைய வதைமுகாமில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் சிறைப்பட்டிருந்தபோது பல துன்புறுத்தல்கட்கு ஆளாகி உடல் நலிவுற்றிருந்த போதும் பாதுகாப்பு அரண்களும் காவலரண்களும் எனப் பாதுகாப்பு வலுப்பட்டிருந்த பனாகொடை இராணுவ முகாமின் சிறைக் கூண்டை உடைத்துத் தப்பிச்சென்று தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் சிறையுடைத்த வரலாற்றைத் தொடக்கிவைத்ததால் அன்றிலிருந்து “பனாகொடை மகேஸ்வரன்” என எல்லோராலும் விரும்பி அழைக்கப்பட்டார். இருந்தும் சிங்களப் புலனாய்வாளர்களின் தேடல்களில் மீண்டும் கைதாகிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் வெலிக்கடைச் சிறையில் தளைப்பட்டிருந்தார்.
அவர் வெலிக்கடைச் சிறையில் தளைப்பட்டிருக்கும் போதே, தமிழ் அரசியற் கைதிகள் மீது முறைகேடான குற்றப் பின்னணிகொண்ட சிங்களக் கைதிகளை ஏவிவிட்டு சிங்கள பௌத்த பேரினவாத அரசு 1983 ஆம் ஆண்டு சூலை 25 மற்றும் 27 ஆம் தேதிகளில் மொத்தமாக 53 தமிழ் அரசியற்கைதிகளைப் படுகொலை செய்தது. இந்த வெலிக்கடைச் சிறைப்படுகொலையில் உயிர்தப்பியவர்களில் ஒருவராக தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் இருந்தார். இந்த வெலிக்கடை சிறைப்படுகொலையின் பின்னர் அங்கிருந்த தமிழ் அரசியற்கைதிகள் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டனர். ஏலவே, யாரும் அந்நேரத்தில் கற்பனை கூட செய்திராத நிகழ்வான பனாகொடை இராணுவ வதைமுகாமிலிருந்து சிறையுடைத்துத் தப்பிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மட்டக்களப்புச் சிறைக்குள் தேவாரம் பாடிக்கொண்டு, விடுதலை வேண்டி நேர்த்தி வைப்பதும் விரதமிருப்பதுமாகவா இருந்திருப்பார்? பலரும் விடுதலைக்காக சட்டவாளர்களை எதிர்பார்த்திருந்த வேளையில், சிறையினை உடைத்து அங்கிருந்து தானும் தப்பிப்பதுடன் கூடவிருக்கும் பல்வேறு இயக்கங்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் அரசியற்கைதிகளையும் தப்பிக்கச் செய்யும் முனைப்பில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் இறங்கினார். அப்போது, மட்டக்களப்பினைச் சேர்ந்த பரமதேவா என்ற தமிழ் அரசியற்கைதியை மட்டக்களப்புச் சிறையுடைப்பிற்கான முகாமையான வேலைகளைச் செய்துதருமாறு தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் கேட்டுக்கொண்டதன் படி, சிறைக்கு வெளியேயிருந்த தனது தொடர்புகளையும் பயன்படுத்தி பரமதேவா என்ற போராளி மட்டக்களப்புச் சிறையுடைப்பிற்கான வேலைகளைத் திட்டமிட்டிருந்தார்.
தம்பாப்பிள்ளை மகேஸ்வரனால் இந்த மட்டக்களப்புச் சிறையுடைப்பை வெற்றிகரமாகச் செய்ய முடியுமென்று உணர்ந்த அனைத்து விடுதலை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தம்மாலியன்ற பங்களிப்புகளை சிறைக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் செய்தனர். விளைவாக, தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் முன்னெடுப்பில் மேற்கொண்ட மட்டக்களப்புச் சிறையுடைப்பானது அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த போராளிகளினதும் பங்களிப்பினால் 1983.09.23 அன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்தச் சிறையுடைப்பில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் உற்ற தோழனாக இருந்து உறுதியாக உழைத்த பரமதேவா என்ற சிறந்த போராளியே பின்வந்த நாள்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து தென்தமிழீழத்தில், குறிப்பாக மட்டக்களப்பில், விடுதலைப் புலிகள் இயக்கம் வலுப்பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்புச் சிறையுடைப்பின் வெற்றிக்கு அடிக்கோலிட்டு அனைத்துத் தமிழ் அரசியற்கைதிகளின் விடுதலைக்குத் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் வழியமைத்திருந்தும், விடுதலைப் புலிகள் உறுப்பினரான நிர்மலா என்ற பெண் போராளியால் சிறையுடைப்பில் வெளியே வரமுடியாதபோது அடுத்து வந்த நாள்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அன்றைய மட்டக்களப்புத் தளபதியாகவிருந்த காக்கா அவர்களின் நேரடி முன்னெடுப்பில் மீண்டும் மட்டக்களப்புச் சிறையுடைக்கப்பட்டு நிர்மலா அவர்கள் சிறைமீண்டார் என்ற வரலாற்றையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
மட்டக்களப்புச் சிறையுடைப்பின் பின் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம் புங்குடுதீவிற்குத் திரும்பிய தம்பா அவர்கள் புங்குடுதீவு வங்கியிலும் பணப்பறிப்பைச் செய்து மீண்டும் தென் தமிழீழம் சென்று “தமிழ் ஈழ இராணுவம்” என்ற தனது தலைமையிலான விடுதலை அமைப்பை வலுப்படுத்தத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக 1984 ஆம் ஆண்டில் காத்தான்குடி மக்கள் வங்கியில் பணம் மற்றும் தங்க நகைகள் அடங்கலாக மூன்று கோடிக்கும் மேற்பட்ட பணப்பெறுமதிகொண்ட பணப்பறிப்பை வெற்றிகரமாக நிகழ்த்தினார். இந்தக் காத்தான்குடி வங்கிப் பணப்பறிப்பே அந்நாளில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வங்கிப் பணிப்பறிப்பாக வரலாற்றிற் பதிவானமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையில் முன்னின்று செயற்பட்ட வரதன் என்ற போராளியே “தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலை இயக்கத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனிற்கு அடுத்த நிலையில் இருந்தவர். பின்னாளில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏனைய இயக்கங்கள் மீதான தடையினால், புலிகள் இயக்கத்துடன் முரண்பாடுகளை வளர்த்துத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பின்னடைவை ஏற்படுத்தாமல், தன்னுடைய தலைமையிலான “தமிழ் ஈழ இராணுவம்” என்ற இயக்கத்தின் போராளிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து போராடுமாறும், அதில் உடன்பாடில்லாத தோழர்களை முரண்பாடுகளை வளர்க்காமல் விலகிச் செல்லுமாறும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கட்டளையிட்டார். அந்த வகையில் “தமிழ் ஈழ இராணுவம்” என்ற அமைப்பில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கட்கு அடுத்த நிலையிலிருந்த வரதன் அவர்கள் பின்னாளில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கட்கு மிகவும் நெருங்கிய நம்பிக்கையான போராளியாகவும் நடவடிக்கை ஒன்றிற்கான பொறுப்பாளராகவும் இருந்து, தென்னிலங்கையில் நடவடிக்கை ஒன்றிற்காகச் சென்றிருந்த வேளையில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது, தான் தலைமையேற்றிருந்த விடுதலைப் புலிகளின் மரபிற்கேற்ப சயனைட் நஞ்சருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் என்ற செய்தியை இங்கு சுட்டாமல் இருக்க முடியாது.
“தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலை இயக்கத்தின் தோழர்கள் பலர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து பொறுப்புகளில் இருந்துள்ளனர். அவர்களில் பலரை ஈரோசிலிருந்து வந்த போராளிகள் எனத் தவறாக எண்ணியதுமுண்டு (ஏனெனில், அளவில் பெரியதாக இருந்த ஈரோஸ் இயக்கமானது அதன் தலைவராகவிருந்த க.வே.பாலகுமாரன் அவர்களின் தலைமையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்தமையால் தமிழ் ஈழ இராணுவத்தின் போராளிகளின் இணைவானது அப்படி நோக்கப்பட்டாயிற்று). செந்தாழன் கிளைமோர் கண்ணிவெடி உற்பத்தியகத்தின் பொறுப்பாளராக இருந்த போராளியும் தம்பாப்பிள்ளை அவர்களால் வளர்க்கப்பட்டவர் என்ற செய்தியையும் நன்றியுடன் நாம் மனங்கொள்கின்றோம். அத்துடன், விடுதலைப் புலிகளுடன் இணையாமல் வெளிநாடு சென்ற தமிழ் ஈழ இராணுவத்தின் தோழர்கள் பின்னாளில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக் கட்டமைப்பில் இணைந்து பணியாற்றினர் என்பதையும் நாம் இங்கு சுட்ட விரும்புகின்றோம்.
இந்த வங்கிப் பணப்பறிப்புகள் மூலம் ஈட்டிய பொருண்மிய வலுவைக் கொண்டு நல்ல சூட்டுவலுவுள்ள சுடுகலன்கள், வெடிமருந்துகள், வெடிப்பிகள், விநியோக ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான படகுகள், பாரவூர்திகள், சிற்றுந்துகள், உழவியந்திரங்கள் போன்றவற்றைத் தம்பா அவர்கள் கொள்வனவு செய்து பாரிய தாக்குதல்களை நிகழ்த்தக் கூடிய வலுவினை ஏற்படுத்திக் கொண்டார். கருப்பு சூலைப் படுகொலைகள் என்ற வரலாற்றின் பக்கங்களில் கறையாகப்படிந்த சிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான இனவழிப்பு வன்முறைகட்குப் பதிலடியை அதிரடியாக வழங்கும் நோக்கோடு 1984.08.02 அன்று பொருண்மியப் போரொன்றை சிறிலங்காவின் மீது தொடுத்து ஒடுக்கும் சிங்கள அரச எந்திரத்தை வலுக்குன்றச் செய்வதன் மூலம் தமிழீழ விடுதலையை முனைப்புறுத்தலாம் என்ற தெளிவான சிந்தையின்பாற்பட்டு கொழும்பு கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வெடிகுண்டுவெடிப்பை நிகழ்த்தத் திட்டமிட்டார். அந்தத் திட்டம் யாதெனில், சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையத்திலிருந்து கொழும்பிற்கு இரவு புறப்படும் “ஏர் லங்கா” வானூர்தியில் வெடிபொருட் தொகுதியை நேரக்கணிப்பானுடன் பொருத்திப் பயணப் பையாக கொழும்பு அனுப்பிவைத்து, பயணிகள் வெளியேறிய பின்பாக வெடிக்குமாறு செய்வதன் மூலம் ஒடுக்கும் சிறிலங்கா அரசின் வானூர்தியும் அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானூர்தித்தளமும் வெடித்து அழியுமாறு தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களால் நன்கு திட்டமிடப்பட்டது.
வெடிமருந்துகளையும் வெடிப்பிகளையும், வெடிமருந்தின் வீரியத்தைக் கூட்டுமாறான கலவைகளிலும் அதனுடன் தொடர்புடைய மின்சுற்றுக்களை இணைப்பதிலும் அக்காலத்திலேயே மீயாற்றலைக் கொண்டிருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் மிகவும் நேர்த்தியாக அந்த வேலைகளை முடித்திருந்தாலும், வானூர்திப் பயணப்பொதிகளுடன் அந்த வெடிபொருட் பொதியை ஏற்றவியலாமற்போக (எடை கூடுதலாகவுள்ளதாக எழுந்த சிக்கல்), வானூர்தி நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கட்குக் கையூட்டுக் கொடுத்து அதைச் சரிசெய்ய முயன்றபோது (அதாவது அதில் கடத்தற் பொருட்கள் உள்ளதாகச் சொல்லப்பட்டு அதனை வானூர்தியில் ஏற்ற உதவுமாறு கோரிக் கையூட்டு வழங்கப்பட்டது), அதில் தங்கக் கட்டிகள் இருக்கலாமென்று நம்பிய கையூட்டுப் பெற்ற ஊழியர்கள் கையூட்டையும் பெற்று ஏமாற்றவும் செய்தனர். நடப்பனவற்றை மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த தம்பா அவர்கள் அந்த வெடிபொருட் பொதிகள் வானூர்திநிலைய சுங்கக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டமையை அறிந்து அது வெடித்தால் பாரிய உயிரழிவுகள் தமிழ்நாட்டில் ஏற்படும் என்பதை மனங்கொண்டு, அவ்வாறு நிகழ்ந்துவிடாமல் தடுக்கும் எண்ணத்தோடு உடனடியாக தொலைபேசியில் சுங்க அதிகாரிகளுக்கு அழைத்து இப்படியாக வெடிபொருட்கள் இருப்பதாகச் சொன்னார். ஆனால், தங்கக் கடத்தல்காரர் தான் அந்தப் பொதியை மீட்டெடுப்பதற்காக இப்படி அச்சமூட்டுகின்றனர் என பணத்தாசையால் அசட்டையாகவிருந்த சுங்கத்துறைக்கு மீண்டும் மீண்டும் அழைப்பெடுத்துக் கூறியும் அது கைகூடாமல் போக, நேரடியாகத் தமிழ்நாட்டு முதலமைச்சராகவிருந்த எம்.ஜி.ஆரிற்குத் தகவல் சொன்னதாகச் சொல்லப்படுகின்றது. நிலைமையின் தீவிரத்தை அறிந்து அந்த வெடிபொருட் பொதியை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அது வெடித்ததில் 33 பேர் உயிரிழந்ததுடன் 27 பேர் படுகாயமடைந்தனர். இதனால் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கைதாகி புழலில் சிறைப்படுத்தப்பட்டார். பின்பு இந்த வழக்கில் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தலையீட்டால் கிடைத்த பிணையில் தம்பா சிறையிலிருந்து விடுதலையானார்.
“கையூட்டு வாங்கிய சுங்க ஊழியர்களின் ஏமாற்றுத்தனத்தால் தாக்குதல் கைநழுவிப் போனபின்பு என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று நீங்கள் தப்பித்துக்கொள்ளாமல் ஏன் முட்டாள்த்தனமாக மாட்டிக்கொண்டீர்கள்?” என்று அவரிடம் சிறைத்தோழர் ஒருவர் வினவிய போது “தமிழ்நாட்டில் அந்த வலுவாய்ந்த குண்டு வெடித்தால் வீணாக இங்குள்ள தமிழ்மக்களும் இலங்கைக்குப் பயணமாகவிருந்த பொதுமக்களும் பாதிக்கப்படுவர். அப்படியாகட்டும் என்று என்னால் கடந்து போக முடியாது. அத்துடன், அன்று தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் வளர்ந்து வந்தன. முதலமைச்சர் அவர்களின் துணையும், தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்புகளும் அன்பும் தமிழீழப் போராளிகட்கு இருந்தது. இப்படியான ஓர் குண்டுவெடிப்பால் தமிழ்நாட்டைத் தளமாகக் கொண்டு இயங்கும் விடுதலைப் போராட்ட அமைப்புகளின் நடவடிக்கைகட்கு ஊறு ஏற்படுவதற்குக் காரணமான வரலாற்றுத் தவறை நான் செய்ய விரும்பவில்லை. அதனால் தான், எனக்கு நேர்வது நேரட்டும் என்று அப்படியான முடிவை எடுத்தேன்” என்றாராம்.
வாய்ப்பாட்டு மார்க்சியர்களும், வாய்ப்பேச்சு வீணர்களும், செயலுக்குப் பின்னடிக்கும் கோழைகளும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் “சாகசக்காரர்” என்று எள்ளி நகையாடுவதுண்டு. தம்பா அவர்களைப் போலவே தலைவர் பிரபாகரன் அவர்களையும் செயலற்ற வீணர்கள் “சாகசக்காரர்” என்று கூறித் தொடக்க காலத்தில் ஒதுக்கப் பார்த்தார்கள். செயல்முனைப்பில் இருப்பவர்களைச் சாகசக்காரர் என்று கூறுவது வரலாற்றில் பல இடங்களில் நடந்தேறிய ஒன்றுதான். 1953 இல் ஒடுக்குமுறையாளர்களின் மொன்காடா இராணுவ முகாமைத் துணிகரமாகத் தாக்கச் சென்ற புரட்சியாளர் பிடல் காஸ்ரோவையும் “சாகசவாதி” என்றே வாய்ச்சொல் வீரர்கள் எள்ளிநகையாடினர். மென்காடா மீதான தாக்குதலின் போது போராளிகள் பலர் சாவடைந்தும் பிடல் காஸ்ரோ உட்பட உயிர்தப்பியோர் சிறைப்பட்டும் போயினர். ஆனால், நீதிமன்றில் “வரலாறு என்னை விடுதலை செய்யும்” என்று பிடல் கூறினார். வீணான சாகச முயற்சி என்று இகழப்பட்ட இந்த மென்காடா இராணுவமுகாம் மீதான தாக்குதலே கியூபப்புரட்சியின் வரலாற்றில் தொடக்க விதை என்று பின்னாளில் வரலாறு பதிவாகியது. சாகசக்காரன் என்று தொடக்கத்தில் இருட்டடிப்பிற்கு ஆளான பிரபாகரன் அவர்கள் தான் பின்வந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமகனாகி, தமிழீழத்தேசியத் தலைவராகி, இன்று உலகத் தமிழர்களின் அடையாளமாக மாறியிருக்கிறார். தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களையும் வரலாறு விடுதலை செய்யும். அவரின் எண்ணங்களில் கருக்கொண்ட பொருண்மியப் போர்முறை (Economic Warfare) இனிவரும் காலங்களில் எம்மைப் போல தாயகமண்ணில் எண்ணிக்கையில் சிறுத்து நிற்கும் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தை முன்கொண்டு செல்லும் ஒரேவழியாக மாறும். ஒடுக்கும் அரசுகள் உலகந்தழுவி நின்று நாடற்ற தேசங்களை ஒடுக்கும்போது, அவர்களின் கொழுத்த முதலீடுகளிற்குப் பாதுகாப்பில்லை என்ற நிலையை உருவாக்கித் தமக்கான விடுதலைப் போராட்டத்தை நாடற்ற தேசங்கள் முன்னகர்த்திச் சென்று வரலாற்றின் விளைபொருளாகத் தேச அரசுகளை அமைப்பார்கள். அப்படியான முனைப்பு என்றோவொரு நாள் மீளவும் தமிழீழ தேசத்தில் நிகழ்ந்தேறும். அந்நாளில் சிறிலங்காவின் மத்திய வங்கி, கொழும்புத்துறைமுகம், கலதாரி உல்லாச விடுதி, கட்டுநாயக்கா வானூர்தி நிலையம், கொலன்னாவ எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையம், காலித்துறைமுகம் எனப் பல பொருண்மியப்போர்களை வெற்றிகரமாக நிகழ்த்திய தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளிகளும், கருவேங்கைகளும் நினைவேந்தப்படும் போது, பொருண்மியப்போரினை ஒரு போரியல் வடிவமாகத் தனது எண்ணங்களில் எப்போதும் கொண்டிருக்கும் தம்பாவின் வரலாறும் தேடி வாசிக்கப்படும். சிறிலங்காவின் தேசிய வருமானத்தில் முன்னின்ற ஏற்றுமதி செய்யப்படவிருந்த தேயிலையில் சயனைட்டைக் கலந்து, பின் அது ஏற்றுமதியாகிச் சந்தைகளுக்குச் செல்லும்வரை காத்திருந்து, அந்தத் தறுவாயில் “ஒடுக்கும் சிறிலங்காவின் தேயிலையில் சயனைட் நஞ்சு கலக்கப்பட்டது” என்ற செய்தியை உலகறியச் செய்ததன் மூலம் தேயிலையை மட்டுமன்றி சிறிலங்காவின் எல்லா விதமான ஏற்றுமதிகளும் பாதுகாப்பற்றவை என்ற செய்தியை உலகெங்கும் பரப்பி, சிறிலங்காவின் ஏற்றுமதி வருமானத்தில் நெற்றியடியைக் கொடுக்கும் முனைப்பில் ஈடுபட்ட பொருண்மியப்போர் வல்லுநராக தம்பா அவர்கள் திகழ்ந்தமையை எமது வருங்காலப் போராட்டத் தலைமை மனங்கொள்ளாமல் விடாது என்பது திண்ணம். வரலாறு அன்று தம்பாவையும் விடுதலை செய்யும்.
1985 சூலை மற்றும் செப்டெம்பர் ஆகிய மாதங்களில் இரண்டு கட்டங்களாக நிகழ்ந்த திம்புப் பேச்சுவார்த்தையில் எல்லா விடுதலை இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பங்குபற்றியது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடக்கம் முதலே இந்தத் திம்புப் பேச்சுவார்த்தை முனைப்புகளில் நம்பிக்கை இல்லையென்று கருத்துவெளியிட்டதோடு, அதில் ஈடுபாடின்றிக் கலந்துகொண்டது. ஏனெனில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை இயக்கங்களின் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்று அவதூறு பரப்பிய காலத்தில் அந்த அவதூறை முறியடிக்கும் முகமாக ஈழதேசிய விடுதலை முன்னணி என்ற 4 இயக்கக் கூட்டணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இணைந்திருந்தது. எனவே தான் ஈழதேசிய விடுதலை முன்னணி சார்பாக, அதன் ஒற்றுமையைக் குலைத்தவர்கள் என்ற அவப்பெயர் நேராதிருக்கத் திம்புப் பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பங்கேற்றது. ஆனால் தம்பா அவர்கள் தலைமையிலான “தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலையமைப்பு இந்த விடயத்தில் மிகவும் கறாரான நிலைப்பாட்டை எடுத்தமையை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.
“பூட்டானில் விற்பதற்குத் தமிழீழம் என்ன கடைச் சரக்கா?”, “பூட்டானில் அரங்கேறுது கபட நாடகம்”, “பூட்டான் பேச்சுவார்த்தை சரணாகதியின் முதற்படி; பின்வரும் வட்டமேசை சரணாகதியின் கடைசிப்படி”, “செந்தோழர்களே வேண்டாம் இந்த இடைக்காலத் தீர்வு”; “பேச்சுவார்த்தை இந்தியாவின் தந்திரம்; கூட்டணியே பலிக்காது உங்கள் சதி, தப்பாது எங்கள் குறி”; போதும் உங்கள் சோசலிச வாய்ப்பேச்சு…. இந்தியாவே வேண்டாம் உங்கள் தலையீடு; வேண்டும் எங்கள் தமிழீழ நாடு” என்ற முழக்கங்களைத் திம்புப் பேச்சுவார்த்தையின் போது முன்வைத்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் திம்புப் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார். அதாவது, தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மீட்பதுதான் இறுதி இலக்கு; தமிழீழத் தனியரசு என்பது மட்டுமே அதற்கான ஒரேவழி என்று முடிவாகிய பின்பு, தமிழரின் தன்னாட்சியுரிமையைப் பேச்சுவார்த்தையில் பேரம்பேசும் பொருளாக மாற்றுவது விடுதலை அறத்திற்கு எதிரானது (ஏனெனில், self-determination is not negotiable) என்பதே தம்பா அவர்களின் நயன்மையான நிலைப்பாடாக இருந்தது. தேசிய இனவிடுதலைக் கருத்தியலைச் சரியாகப் புரிந்துகொண்டவர்கள் திம்புப் பேச்சுவார்த்தை விடயத்தில் தம்பாவின் கறாரான நிலைப்பாட்டைக் கருத்தியற் தளத்தில் மறுத்துரைக்க முன்வர மாட்டார்கள்.
57 சிறிலங்கா இராணுவத்தினரும் 39 பொலிசாரும் இணைந்த செயற்பாட்டில் தங்கியிருந்த கிளிநொச்சிப் பொலிஸ்நிலையம் மீது 1985.09.23 அன்று நள்ளிரவில் துணிகரமான தாக்குதலானது தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தலைமையிலான “தமிழ் ஈழ இராணுவம்” என்ற விடுதலை இயக்கத்தால் நடத்தப்பட்டது. வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரவூர்தியை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் அருகில் நிறுத்தி வெடிக்கவைக்கப்பட்ட போது பொலிஸ் நிலையக் கட்டடத்தின் ஒரு பகுதி தகர்ந்து வீழ்ந்தது. வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரவூர்தியில் பெற்றோல், டீசல் போன்ற எரிபொருள் பீப்பாக்களும் வைக்கப்பட்டதால் வெடிப்பின் போது அவையும் பற்றி எரிந்து பொலிஸ் நிலையக் கட்டடத்தைப் பற்றிக் கொண்டது. இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகளும் போராளிகளால் மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கிச் சண்டை தொடரும் போது வெடிபொருள் நிரப்பப்பட்ட தண்ணீர்த்தாங்கி ஒன்று கிளிநொச்சிப் பொலிஸ் நிலையக் கட்டடத்தின் அருகிலிருந்த பொற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் குதம் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு வெடிக்க வைக்க முயற்சித்த போது, வெடிப்பி (detonator) சரியாகச் செயற்படாத காரணத்தினால் அந்தத் தண்ணீர்த்தாங்கி வெடிக்கவில்லை. அப்படி வெடித்திருந்தால் எண்ணெய்க் குதமும் வெடித்துத் தீப்பற்றி எரிந்து பாரிய அழிவுகளை அப்பகுதியில் ஏற்படுத்தி சிங்களத்தை வரலாறு காணாதவாறு நடுங்கச் செய்திருக்கும். ஆனாலும், இந்தத் துணிகரத் தாக்குதல் வெற்றிகரமாகவே நடத்தப்பட்டது. போராளிகள் தரப்பில் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இப்படி பாரியளவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரவூர்திகளை வெடிக்கச் செய்து பாரிய இழப்புகளை ஏற்படுத்தியவாறு அதிரடித் தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சியை முதன்முதலில் தம்பா தலைமையிலான தமிழ் ஈழ இராணுவமே மேற்கொண்டது. பின்னாளில், “ஒப்பரேசன் லிபரேசன்” நடவடிக்கை மூலம் கொக்கரித்த சிங்களத்தின் முதுகெலும்பை அடித்து நொருக்க 1987.07.05 அன்று நெல்லியடியில் கரும்புலி கப்டன் மில்லர் மேற்கொண்ட வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரவூர்தியைத் தானே ஓட்டிச் சென்று வெடிக்கவைத்த தாக்குதலானது விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றுப் பக்கங்களில் நீங்கா இடம்பிடித்தமை யாவரும் அறிந்ததே.
தனது சொந்த முயற்சியில் தானே உருவாக்கிய மோட்டார் எறிகணைகளையும் செலுத்தியையும் பயன்படுத்தி யாழ்ப்பாணக் கோட்டையில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவத்தினர் மீது அதிகளவான தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழ் ஈழ இராணுவத்தினரே என்பதை மறந்திடலாகாது. அத்துடன் ஒதியமலையில் தமிழர்களின் மீது ஏவிவிடப்பட்ட இனவெறித் தாக்குதலிற்கான பதிலடியாகச் சிங்கள வன்கவர்வாளர்களுக்கு அவர்கட்குப் புரியும் மொழியில் துணிகரமாகப் பதிலளித்தவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் என்பதையும் நாம் மறந்திடலாகாது. “கூட்டணியே வேண்டாம் உங்களுக்கு இந்தப் பாராளுமன்றக் கதிரை. இல்லையேல் தப்பாது எமது துப்பாக்கி ரவை” என்று அச்சுறுத்தியவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன். அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் என தமிழீழ விடுதலைப் புலிகள் சாவொறுப்புக் கொடுத்து அப்புறப்படுத்தியவர்களைத் தம்பாவும் அப்புறப்படுத்த விரும்பியவர் என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும்.
“இந்தியாவுக்கு சிங்களவர்களும் நண்பர்கள் தான். இந்தியாவின் விருப்பிற்கு மாறாக நடந்துகொண்டால் இந்திய நிலத்தைப் போராளி இயக்கங்கள் பயன்படுத்த முடியாது” என்று திம்புப் பேச்சுவார்த்தையின் போது இந்திய அரசின் பேராளர் விடுதலை இயக்கங்களைப் பார்த்து மிரட்டிய போது, இனி இந்திய நிலத்துண்டத்திற்கு வெளியே ஒரு மாற்றுத் தளத்தைத் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக அமைக்க வேண்டும் என்று கூறி அதற்கான முயற்சிகளில் உடனடியாக இறங்கியவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களே. பிஜி தீவுக்கூட்டத்தில் ஒரு நிலத்துண்டத்தையோ அல்லது ஆபிரிக்காவில் ஒரு நிலப்பரப்பையோ அல்லது மாலைதீவில் ஒரு சிறுதீவுப் பகுதியையோ வாங்கி அங்கு தமிழீழ விடுதலைப் போராட்ட நடவடிக்கைகட்கான பின்தளம் அமைக்கப் பல முயற்சிகளில் தம்பா இறங்கினார். இதைக் கேள்விப்பட்ட அவரின் புளொட் தோழர்களே மாலைதீவின் ஆட்சிக் குழப்பங்களால் வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாமும் அவ்வாறான ஒரு நடவடிக்கையாக மாலைதீவைக் கைப்பற்ற முனைந்தனர். ஆனால், புளொட்டில் இருந்த இந்திய உளவமைப்புகளின் அடிவருடிகளின் காட்டிக்கொடுப்பால் இத்தகைய முயற்சியை நன்கறிந்திருந்த இந்திய உளவமைப்பானது விடயங்களை நடக்கவிட்டு, அதனை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி மாலைதீவில் தமது மேலாதிக்கத்தை நிறுவிக்கொண்டது.
மீண்டும் நீதிமன்றின் உசாவல்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மீனம்பாக்கக் குண்டுவெடிப்பு வழக்கில் ஒறுப்புப்பெற்ற தம்பா அவர்கள் 1997 இல் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டு 2010 இல் செங்கல்பட்டு சிறப்புமுகாமிலிருந்து விடுதலையாகினார். “உங்களது சூட்டுவலுவுள்ள ஆயுதங்களையும் படகுகளையும் உந்துருளிகளையும் ஏன் புலிகளுக்கு வழங்கினீர்கள்?” என்று தம்பாவிடம் அவரின் சிறைத் தோழர்களில் ஒருவர் கேட்டபோது “நாம் போராடிப்பெற்ற போராட்டக் கருவிகளானவை தமிழர்களின் விடுதலைக்காக ஒடுக்கும் சிங்கள அரசிற்கு எதிராகப் பயன்பட வேண்டும் என்பதால் அதற்கான ஒரேவழியாக அன்றைக்கு இருந்தது அந்தச் சுடுகலன்களையும் போர்க்கருவிகளையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கைகளில் சேர்ப்பிப்பதே” என்று பதிலளித்திருக்கிறார். அவர் இந்தியாவில் சிறைப்பட்டிருக்கும் போதும் சிங்கள இராணுவத்தின் நகர்வுகள் பற்றிய தனது கணிப்புகள் மற்றும் தமிழர் தரப்பில் மேற்கொள்ளக் கூடிய போரியல் நுட்பங்கள் பற்றி எழுதியும் வரைந்தும் நெடுமாறன் போன்ற அன்றைக்கு எல்லோரும் நம்பிய தலைவர்களிடம் கொடுத்துப் புலிகளிடம் சேர்ப்பிக்குமாறு கூறுவாராம்.
2010 இல் விடுதலையானதும் தனது அகவை முதிர்வையும் கருத்திலெடுக்காமல் கிழக்கு ஆபிரிக்காவிற்கே சென்றார். அங்கிருந்து ஏதாவது பின்தள ஒழுங்குகளைச் செய்ய முடியுமா என்று முயன்று பார்த்தார். வேதிப்பொருட்களிற்காகவும் அலைந்து திரிந்தார். ஆனால், இவரின் மீதான ஐயத்தால் தன்சானியாவில் இவர் உசாவல்கட்கு உட்பட்ட போது இவரின் கடவுச்சீட்டிலிருந்த பெயரை இணையத்தில் தேடிய போது கிடைத்த வியக்க வைக்கும் தகவல்களால் இவர் இன்னாரெனத் தெரிந்துகொண்ட தன்சானிய அதிகாரிகள் இவரை இலங்கைக்கு நாடுகடத்தினர். அவர் நினைத்திருந்தால் ஐரோப்பாவில் வசதியாகவிருக்கும் அவரின் குடும்பத்தினரிடம் சென்றிருக்க முடியும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்பாக எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சிய ஆளுமைகளின் கால்கள் ஐரோப்பா நோக்கி நகர்ந்தபோது தம்பாவின் கால்கள் ஆபிரிக்காவை நோக்கித்தான் நகர்ந்தன என்பதை இங்கு நாம் மனச்சான்றுடன் மனங்கொள்ள வேண்டும். அவர் ஒருபோதும் பாசிசப் புலிகள் என்று கதையளந்து கொண்டு சிங்கள, இந்திய அரசுடன் ஒத்தோடவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக ஒரு சிறிய தவறைக் கூடச் செய்யவில்லை. அவர் தாம் கொண்ட கொள்கையில் தடம்மாறவேயில்லை. எனவே, தம்பா தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் நாம் மறந்துவிடக் கூடாதவொரு ஆளுமை என்பதை நாம் இங்கு அழுத்திச் சொல்ல விரும்புகின்றோம்.
தம்பா அவர்கள் நாடுகடத்தப்படுவதை அறிந்த சிறிலங்காவின் இந்நாள் அமைச்சரும் முன்னொரு காலத்தில் பனாகொடை இராணுவ வதை முகாம், வெலிக்கடைச் சிறை, மட்டக்களப்புச் சிறை என அவருடன் ஒன்றாகத் தளைப்பட்டுக் கிடந்த அந்நாள் போராளிகளில் ஒருவருமான டக்ளஸ் தேவானந்தா தனிப்பட்ட நட்பின் அடிப்படையிலும் தாம் சிறையில் இருந்து தப்பிக்கக் காரணமானவர் என்ற உணர்வினாலோ அல்லது தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் போக்கிடமற்றுத் தனித்து நிற்கும்போது அவரிற்குக் கைகொடுத்து வரவேற்றுத் தனது அரசியலுக்குப் பயன்படுத்துவதன் மூலம் தன்னைப் புனிதப்படுத்தும் வாய்ப்பாகவோ எண்ணி தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களை வானூர்தி நிலையத்திலிருந்து வெளியே வரும்போது தம்முடன் கூட்டிச் சென்றார். தம்பா நினைத்திருந்தால் டக்ளசின் தயவில் வசதியாகத் தனது இறுதிக் காலத்தைக் கழித்திருக்க முடியும். ஆனால், ஒடுக்கும் அரசின் ஒத்தோடியான டக்ளசின் தயவில் வாழ்வதை அருவருப்பாக நினைத்த தம்பா அவர்கள் டக்ளசின் பிடியிலிருந்து விலகியும் அவரது ஆட்களுடன் முரண்பட்டும் வெளியேறிச் சென்று நல்லூர் சங்கிலியன் தோப்பிற்கு அருகாமையில் இருந்த புலம்பெயர்ந்தவர் ஒருவரின் வீட்டைப் பாதுகாக்கும் காவலனாகவும் பராமரிப்பாளனாகவும் தனது இறுதிமூச்சு வரை பணியாற்றி, அதில் கிடைத்த சிறிய ஊதியத்தில் எவரின் தயவுமின்றித் தன்மரியாதையுடனும் மிடுக்குடனுமே வாழ்ந்து வந்தார்.
வாழைத்தோட்டத்தில் நீர்பாய்ச்சிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட நெஞ்சுவலியாலேயே அவர் மயக்கமுற்றுக் கீழே வீழ்ந்தார். இறுதிவரை தமிழீழம் மட்டுமே திர்வு என்பதிலும், அதுவும் மறவழியில் மட்டுமே வாய்க்கும் என்பதிலும் அசையாத்திடம் கொண்டிருந்த விடுதலைப் போராட்ட முன்னோடிகள் இருவரே… ஒருவர் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்; மற்றையவர் போராளித் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள். இந்தியாவிலிருந்து தமிழீழம் வந்து தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினரும் முன்னைநாள் ஈரோசின் தலைவருமான க.வே.பாலகுமாரன் மற்றும் தமிழ் ஈழ இராணுவத்தின் முன்னைநாள் போராளியும் பின்னாளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையில் முகாமையான இடத்திலிருந்தவருமான வரதனின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. காலங் கைகூடவில்லை. அதற்குள் அவர் இந்தியாவில் தளைப்பட்டார். “எமது விடுதலை இயக்கத்தின் மாவீரர்களைப் போல மற்றைய இயக்கங்களிலும் எத்தனையோ நல்ல போராளிகள் இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடி உயிர்துறந்திருக்கின்றனர். அவர்களின் தலைமைகள் தடம்மாறித் தவறான வழிகளில் போயிருந்தாலும், மற்றைய இயக்கங்களிலிருந்த அந்த நல்ல போராளிகளையும் நாம் எமது மாவீரர் நாளில் நினைவிற்கொள்வதே பொருத்தமானது” என்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தாம் 1989 இல் ஆற்றிய முதலாவது மாவீரர்நாள் உரையில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களையும் நாம் வரலாறு நெடுகிலும் நினைவேந்துவதே பொருத்தமானது என்பதை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எஞ்சிய ஆளுமைகள் மனங்கொள்ள வேண்டும் என்பதை இப்பத்தி வாயிலாக அழுத்திச் சொல்கின்றோம்.
“ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதிவைக்கப்படும். நீ மடியவில்லையடா… உன்கதை முடியவில்லையடா… வெடிகுண்டின் நடுவில் நின்ற உன் தோளை அடிநெஞ்சில் நினைப்பதற்கு ஆயிரம் உண்டு” என்ற புலிகளின் விடுதலைப்பா வரிகள் உன்னையும் தான் எமக்கு நினைவுபடுத்தும்.
அண்ணன் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனிற்கு எமது வீரவணக்கம்.