மாற்றான்- கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள மாற்றான் திரைப்படத்தில் சூர்யா ஒட்டிபிறந்த இரட்டையர்களாக நடித்துள்ளார். |
இவர்கள் இருவருக்கும் ஒரே ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கின்றார். சூர்யா, காஜல் அகர்வால் என சிலர் மட்டும் தான் நமக்கு நன்கு பரிட்சயமான நடிகர்கள். ஒட்டிப்பிறந்த இருவர் என்பது தான் மாற்றான் படத்தின் கதைக்களம் என்ற மைண்ட் செட்டில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அதையும் தாண்டி சூர்யாவின் கடும் உழைப்பிற்கு விடப்பட்ட சவால் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெனிடிக் ஆராய்ச்சி போன்று இதுவரை நாம் பார்க்காத ஒன்றை இத்திரைப்படத்தின் முதல் பாதியிலேயே மிக அழகாக உணர்த்தியிருக்கின்றார் இயக்குனர். ஒட்டி பிறந்ததோடு மட்டுமில்லாமல் இருவருக்கும் ஒரே இதயம் இருப்பதால் பச்சிளம் குழந்தைகளில் ஒன்றை கொன்றுவிடலாம் என்று கூறும் சூர்யாவின் அப்பாவின் வார்த்தையை மீறி இருவரையும் வளர்க்கிறார் சூர்யாவின் அம்மா. இதயம் இருக்கும் சூர்யா நல்ல பண்புகளுடனும், மற்றொரு சூர்யா பிளேபாயாகவும் முதல் பாதி படம் பக்கா கமர்ஷியலாக நகர்கின்றது. இந்த மாதிரியான கமெர்ஷியல் காட்சிகளுக்கிடயே சீரியஸான கதைக்கருவுக்கான காட்சிகளையும் ஆங்காங்கே நுழைத்திருக்கிறார் இயக்குநர். விளையாட்டு வீரர்கள் அருந்தும் "எனர்ஜியான்" என்ற ஹெல்த் ட்ரிங்க் நிறுவன முதலாளி தான் சூர்யாவின் தந்தை. எனர்ஜியான் ஹெல்த் டிரிங்கின் ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க உக்ரைன் நாட்டிலிருந்து ஜர்னலிஸ்டாக வருகிறார் வோல்கா. எனர்ஜியான் நிறுவனத்திற்குள் புகுந்து ஒரு வழியாக ஃபார்முலாவை திருடி அதை சூர்யாவிடம் கொடுத்து உன் தந்தை கெட்டவர், அவரால் இந்த நாட்டிற்கே ஆபத்து ஏற்படவிருக்கிறது என்று கூறுகிறார். பிளேபாய் சூர்யா என் அப்பா கெட்டதே பண்ணாலும் என் நல்லதுக்காகத் தான் பண்ணுவாரு என இதை உதறித்தள்ளிவிடுகிறார். சூர்யாக்களிடமிருந்து அந்த ஃபார்முலாவைக் கைப்பற்றி கொண்டுவரச்சொல்லி தந்தையே ஆள் அனுப்புகிறார். அடியாட்களுடன் நடக்கும் சண்டையில் இதயம் இருக்கும் சூர்யா தாக்கப்பட்டு கோமாவுக்குச் செல்கிறார். கோமா நிலையிலிருந்து மீள மாட்டார் எனத் தெரிந்ததும் மற்றொரு சூர்யாவிற்கு இதயம் மாற்றி வைக்கப்பட்டு மற்றொருவர் கொல்லப்படுகிறார். ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் பெரும்பாலான போட்டிகளில் வெற்றியடையும் அமெரிக்காவை வீழ்த்தவும், ஐரோப்பிய நாடுகளை வெற்றியடைய செய்யவும் கண்டுபிடிக்கப்பட்டது தான் அந்த ஹெல்த் ட்ரிங். பல வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களாலேயே கண்டுபிடிக்க முடியாத எனர்ஜியான் ஹெல்த் ட்ரிங்கின் பாதிப்பை சூர்யா எப்படி கண்டுபிடித்தார்? தன்னுடன் ஒட்டிப்பிறந்த சகோதரனைக் கொன்ற தந்தையை பொலிசுக்கு காட்டிக்கொடுத்தாரா? என்பது தான் மீதிக் கதை. பக்கா கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது மாற்றான். காதில் பூ சுற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு பூக்கடையையே காதில் எடுத்து வைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.சூர்யா கன்ஜாயிண்ட் டுவின்ஸாக நன்றாக நடித்திருந்தாலும், கதைக்கு அந்த கதாபாத்திரம் தேவையா? தேவையில்லாமல் ஏன் அவர் கஷ்டப்பட்டு நடிக்கனும்? என்ற கேள்விகள் எழுகின்றன. காஜல் அகர்வால் பார்ப்பதற்கும் அழகு நடிப்பிலும் அழகு. ஹீரோயிஸம் செய்யும் ஹீரோவுடன் நடனமாடவும், காதலுக்காகவும் மட்டும் வந்து செல்லாமல் அழுத்தமான கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார் காஜல். |
முன்செல்ல |