வடமராட்சி கிழக்கு பகுதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம் செய்து, அப்பகுதி மக்களின் தேவைகள் பற்றகலந்துரையாடியுள்ளனர்.
இன்று காலை வடமராட்சி கிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி நாகர்கோவில் ஆகிய இடங்களில் வசிக்கின்ற மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைநிறைகளை கேட்டறிந்தனர்.
இச்சந்திப்பில் மக்களுடைய வாழ்வாதரங்களுக்கான அடிப்படைத் தேவைகளான கல்வி, சுகாதாரம், வீட்டு திட்டம், மலசலகூடம், வீதி போக்குவரத்து, மின்சாரம் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலங்கள் போன்றவை தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இச்சந்திப்பின் போது, மக்கள் தங்களுடைய கடற் தொழிலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதையும் முறையிட்டதோடு, கடற்றொழில் செய்வதற்கு உபகரணப் பற்றாக்குறையையும், சந்தை வாய்ப்பு இன்மையையும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.
இம்மக்கள் சந்திப்பில் பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் பூ.சஞ்சீவன், வலி. வடக்கு பிரதேசத் தலைவரான சோ.சுகிர்தன், பிரதேச உறுப்பினர்களான பெ.கனகசபாபதி எஸ. எக்ஸ்.குலநாயகம், க.பரஞ்சோதி, மாவை.சோ.சேனாதிராசாவின் ஆராய்ச்சி உதவியாளரான எஸ்.கஜன் மற்றும் க.பிருந்தாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.