யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது இராணுவம் நடத்தியிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
இதன் மூலம் ஒரு தெளிவான செய்தியைத் தமிழ்ச் சமூகத்துக்கு அரசாங்கம் கூறியிருக்கின்றது. குடாநாட்டில் மாணவர் அமைதியின்மையால் ஏற்பட்டுள்ள பதற்றிலை முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை காணப்படவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது.
போரில் பலியானவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்தச் சம்பவங்கள், அமைதியாக ஊர்வலம் சென்ற மாணவர்களை இராணுவத்தினரும், பொலிஸாரும் துரத்தித்துரத்தித் தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கின்றது. பல மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். சில மாணவர்கள் விசாரணை என்ற பெயரில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இச்சம்பவங்களால் மாணவர்களின் அமைதியின்மை தொடரும் நிலைதான் காணப்படுகின்றது.
விடுதிகளிலுள்ள மாணவர்கள் அச்சம் காரணமாக அங்கிருந்து வெளியேறிவருகின்றார்கள். இதன் மூலம் பல்கலைக்கழகம் செயற்படாத நிலை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகமும் இச்சம்பவங்கள் தொடர்பில் தமமுடைய கரிசனையை வெளியிட்டிருக்கின்றது. ஊடக சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்கா தன்னுடைய கவனத்தைச் செலுத்ததுவதாக அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிட நடைபெற்ற சம்பவங்கள் இந்தியத் தூதரகம் உட்பட கொழும்பிலுள்ள பெரும்பாலான மேல்நாட்டுத் தூரகங்கள் அவதானித்துக்கொண்டுள்ளன.
ஆக, இந்தச் சம்பவங்கள் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
இராணுவம் நடந்துகொண்ட முறையைக் கண்டிக்கும் முகமாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்றும் எதிர்வரும் செவ்வாய்கிழமை 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்கள் தேசிய முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய தமிழ்க் கட்சிகளும் பங்குகொள்ளவிருப்பதாகத் தெரிகின்றது.
இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்ன என்பதையிட்டு இந்த இடத்தில் ஆராய்வது அவசியம்.
இச்சம்பவங்களைப் புகைப்படம் எடுப்பதற்காகச் சென்ற உதயன் பத்திரிகையின் ஆசிரியர் தேவானந்தன் பிரேம்நாத் இராணுவத்தினால் தாக்கப்பட்டுள்ளார். சுவர் ஒன்றுடன் சாய்த்து வைத்து அவரது முகத்தில் படையினர் பலமாகத் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டார்கள். இச்சம்பவத்தின் போது பிரேமாநத்தை பாதுகாக்கச் சென்ற குறிப்பிட்ட பத்திரிகையின் உரிமையாளரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான ஈ.சரவணபவன் மீதும் படையினர் தாக்குதலை நடத்த முற்பட்டனர். அப்போது அவரது மெய்ப் பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போது, அவர் மீது இராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்.
உதயன் ஆசிரியர் தேவானந்தா பிரேம்நாத் தன்ன ஒரு பத்திரிகையாளர் என அடையாளம் காட்டிய நிலையிலேயே தாக்கப்பட்டுள்ளார். பொது நிகழ்வுகளில் இராணுவ அத்துமீறல்களைப் புகைப்படம் பிடிப்பதற்காகச் செல்லும் படப்பிடிப்பாளர்கள் இவ்விதம் தாக்கப்படுவது ஒரு வழமையான நிகழ்வாகவே இலங்கையில் காணப்படுகின்றது. ஊடகத் துறையினரின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு அச்சுறுத்தலான இவ்வாறான சம்பவங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் இதுவரையில் முன்னெக்கப்படவில்லை.
இச்சம்பவத்தின் போது அங்கு வந்திருந்த சரவணபவன் எம்.பி.யின் வாகனமும் தாக்கப்பட்டுள்ளது. அவரது வானின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டன. இராணுவத்தினர் பார்த்துக்கொண்டு நிற்கத்தக்கதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக சரவணபவன் பின்னர் தெரிவித்தார். நடந்த சம்பவங்கள் இவைதான்.
இவற்றைப் பார்க்கும்போது தென்பகுதியில் ஒரு சட்டத்தையும் வடபகுதியில் மற்றொரு சட்டத்தையும் அரசாங்கம் கையாள்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. தென்பகுதியில் இடம்பெறும் இது போன்ற சம்பவங்களைக் கையாள்வதற்கு பொலிஸாரையே அரசாங்கம் பயன்படுத்துகின்ற போதிலும், யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து அனுமதியைப் பெற்றுக்கொண்டா இராணுவத்தினர் பெண்கள் விடுதிக்குள் சென்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
தென்பகுதியில் 1971 இலும் பின்னர் 1989-90 காலப்பகுதியிலும் இடம்பெற்ற அரசுக்கு எதிரான ஜே.வி.பி.யின் கிளர்ச்சியின் போது அரச படைகளால் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர அனுமதி வழங்கப்படுகின்றது. கார்த்திகை வீரர்கள் தினம் என தமது தலைவர் ரோஹண விஜயவீர உட்பட ஏனையவர்களின் நினைவு தினத்தை ஜே.வி.பி.யினர் வருடாந்தம் பிரமாண்டமான நிகழ்வுகளின் மூலம் அனுஷ்டிக்கின்றார்கள்.
ஆனால், வடபகுதியில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூருவதற்கு மட்டும் அரசாங்கம் ஏன் தடை விதிக்கின்றது?
இதனைவிட புதன்கிழமை காலை அமைதியாக இடம்பெற்றுக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஊர்வலத்தின் மீது எவ்வித தூண்டுதலும் இல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஊர்வலத்தைக் கலைந்து செல்லுமாறோ நிறுத்துமாறோ கோரிக்கை எதனையும் விடுக்காத படையினர், நேரடியாகவே தடியடித் தாக்குதலில் இறங்கினார்கள். இதன்போது பலர் காயமடைந்திருக்கின்றார்கள்.
ஜனநாயக முறைப்படி அமைதியான முறையில் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குக் கூட தமிழ்ர்களுக்கு உரிமை மறுக்கப்படுகின்றது. தென்பகுதியில் தினசரி ஆப்ப்பாட்டங்களும், வீதி மறியல் போராட்டங்களும் அனுமதி பெறப்படாமலேயே நடத்தப்படுகின்ற போதிலும் கூட, அந்த ஜனநாயக உரிமைளை தமிழர்களுக்கும் வழங்க அரசு தயாராகவில்லை. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் அதனைத்தான் உணர்த்துகின்றன.
கடந்த காலங்களில் அமைதியான அறவழிப் போராட்டங்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இராணுவத்தினதும், பொலிஸாரினதும் அடக்குமுறைகள்தான் வடபகுதியில் இளைஞர்களின் போராட்டங்களுக்கு வழிவகுத்தது என்பது நாம் வரலாற்றிலருந்து கற்றுக்கொண்ட பாடம். மீண்டும் அதேவழியில் படைத்தரப்பினர் இப்போது செயற்படுவது மற்றொரு ஒரு ஆயுதக்கிளர்சிக்குத் தமிழர்களை அழைப்பதாகவே உள்ளது.
இந்த நிலையில் மாணவர்களுடைய செயற்பாடுகளில் முன்னணியிலிருந்து செயற்பட்டதாகக் கருதப்படும் நான்கு மாணவர்கள் காரணம் எதுவும் கூறப்படாமல் தமது வீடுகளில் வைத்துக் கைது செய்யப்பட்டு கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரே இவர்கள் மீதான விசாரணைகளை முன்னெடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கைதான இவர்களை அங்கேயே வைத்து விசாரிக்காமல் கொழும்புக்குக் கொண்டுவந்தமைக்கான காரணம் மர்மமாகவே உள்ளது.
அமைதியிழந்திருந்த மாணவர்கள் மத்தியில் இந்தக் கைதுகள் பெரும் அச்ச நிலை ஒன்றை ஏற்படுத்தியிருக்கின்றது. விடுதி மாணவர்கள் அவசரமாக வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றிருப்பது மாணவர்கள் மத்தியில் காணப்படும் அச்ச உணர்வை வெளிப்படுத்துகின்றது.
இந்தக் கைதுகள், தாக்குதல்களின் மூலம் தெளிவான செய்தி ஒன்றை அரசாங்கம் தமிழ் சமூகத்துக்குச் சொல்லியிருக்கின்றது. அடிமைகளாக இருங்கள் இல்லையெனில் இதுதான் நடக்கும் என்பதுதான் அந்தச் செய்தி. ஆனால், வரலாற்றிலிருந்து அரசாங்கம் எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்தியிருக்கின்றது!
- கொழும்பிலிருந்து தமிழ்லீடருக்காக பார்த்தீபன்.