விவகாரம் நீண்டு கொண்டே இருக்கிறது, விஸ்வரூபம் என்ற வார்த்தையைப் போலவே. படத்தை நீதிபதி பார்த்துவிட்டு தீர்ப்பளிப்பார் என்பதால் ஜனவரி 26-ந் தேதி சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மதியம் 3 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
தலைமைப் பதிவாளர், 5 பதிவாளர்கள், அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், கமல்தரப்பு வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், சதீஷ் பராசரன், கமல் ரசிகர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஸ்டாலின், ராஜசேகரன்,
இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சங்கரசுப்பு, ரமேஷ் உள்பட 60 பேர் அந்த தியேட்டரில் இருந்தனர். நீதிபதி கே.வெங்கட்ராமன் அங்கே வந்த போது, வெளியே நின்றிருந்த முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் சிலர் தாங்களும் படம் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள்.
அதற்கு நீதிபதி, ""உங்களுக்குத்தான் கமல்ஹாசன் ஏற்கனவே படத்தைப் போட்டுக் காட்டியிருக்காரே'' என்று சொல்லிவிட்டுச் செல்ல, அமைப்பினர் வெளியிலேயே காத்திருந்தனர். 3 மணியிலிருந்து 5.20 வரை படம் ஓடியது. அரசுத் தரப்பிலும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பிலும் வந்திருந்த வழக்கறிஞர்கள் கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டனர். இடை வேளை நேரத்தில்கூட யாரும் வெளியே வரவில்லை. 5.20 மணிக்கு படம் முடிந்தபோது, நீதிபதி எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் காரில் ஏறிச் சென்றார்.
ஜனவரி 28-ந் தேதி காலையிலேயே சென்னை உயர்நீதிமன்ற வளாகம், பாரிமுனை, பர்மா பஜார், கோட்டை ஏரியா, பிராட்வே பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலவரத் தடுப்புக் கருவிகளுடன் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விசாரணை நடைபெற்று தீர்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து கமலும் திரும்பி வந்திருந்தார்.
நீதிபதியின் உத்தரவையடுத்து, குவிக்கப் பட்டிருந்த போலீஸ் படையினர் ஒவ்வொரு இடத்திலிருந்தும் விலக்கிக் கொள்ளப்பட்டனர். நீதிமன்ற வளாகத்தில் குவிந்திருந்த கவனம், கோட்டைநோக்கித் திரும்பியது. அரசுத் தரப்புடன் பேச கமல் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கமல் தரப்பில் அவரது சகோதரர் சந்திரகாசன், பி.ஆர்.ஓ., வக்கீல் மூவரும் மாலையில் வருவார்கள் எனத் தகவல் வந்தபோதும், கோட்டை அலுவலக நேரம் முடியும் வரையில் யாரும் வரவில்லை.
அதேநேரத்தில், தலைமைச் செய லாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தலைமை யில் உள்துறைச் செயலாளர் ராஜகோபால், சிட்டி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் கோட்டையில் நடந்தது. படம் பார்த்திருந்த அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், தான் நோட் செய்திருந்தவற்றை எடுத்துச் சொன்னார். அதன்பின், சில காட்சிகளை நீக்க கமல் தரப்பு ஒப்புக்கொண்டால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்பதாகக் கோர்ட்டில் ஒப்புக்கொள்வோம் என அதிகாரிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது.
ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பாக வும் தொழுகை செய்வது மற்றும் குரான் படிப்பது, தீவிரவாதி முல்லா உமர் மதுரையிலும் கோவையிலும் இருந்ததாகச் சொல்வது, ஒயர்லெஸ் பேச்சுகளின் போது "அல்லாஹூ அக்பர்' என்று சொல்வது, குழந்தைகள் ஆயுதம் பயன்படுத்துவது உள்ளிட்ட காட்சிகள் இவற்றில் அடக்கம். எனினும், கமல் தரப்பிலிருந்து 28-ந் தேதி யன்று யாரும் கோட்டைக்கு வரவில்லை.
அதேநேரத்தில், விஸ்வரூபம் விவ காரத்தில் ஆட்சி மேலிடத்தின் கடுமையான போக்கு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. விஸ்வரூபம் படத்தைத் திரையிட முடிவு செய்திருந்த தியேட்டர் களுக்கு தாசில்தார் லெவலிலான அதிகாரி கள் சென்று, தமிழக அரசின் உத்தரவுப்படி 2 வாரத்துக்குப் படத்தைத் திரையிட மாட்டோம் என்று தியேட்டர் நிர்வாகி களிடம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். "நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில், மாநில அரசு ஏன் இந்த விவகாரத்தில் இத்தனை தீவிரமாக இருக்கிறது' என விசாரித் தோம்.
""விஸ்வரூபத்தின் சேனல் உரிமை முதலில் ஜெயா டி.வி.யிடம்தான் பேசப்பட்டது. 13கோடி வரை உரிமத் தொகையும் பேசப்பட்டது. அதன் பிறகு, டி.டி.ஹெச்.சில் படத்தை முதலில் ரிலீஸ் செய்யப்போவதாக கமல் அறிவித்ததுடன் ஏர் டெல், சன் என பல டி.டி.ஹெச்சுக்கும் உரிமம் கொடுத்ததில் ஜெயா டி.வி. நிர்வாகம் அதிருப்தி அடைந்தது. டி.டி.ஹெச்.சில் படம் ரிலீசாகி விட்டால் தியேட்டரிலே கலெக்ஷன் இருக்காது என்கிறார்கள். அப்புறம் எப்படி ஒரு வருடம் கழித்து டி.வி.யில் ஒளிபரப்பும்போது விளம்பர வருமானம் கிடைக்கும் என்று சொல்லி, சேனல் உரிமத்தொகையைக் குறைத்து 9கோடி ரூபாய் எனப் பேசியது. இந்நிலையில், விஜய் டி.வி. மகேந்திரன் மூலம் விஸ்வரூபத்தின் சேனல் ரைட்ஸ், விஜய் டி.விக்கு விற்கப்பட் டது. இதனால் கமல் மீது ஜெ. தரப்பும் ஜெயா டி.வி. நிர்வாகமும் கடும் கோபம் கொண்டது. அந்த நேரத்தில், இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு கிளம்பவே அதையே சாக்காக வைத்து 15 நாட்கள் தடை விதித்தது அரசு'' என்கிறார்கள் திரைத்துறையினர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் மூலமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டி ருப்பதால், அந்த உத்தரவு நகல்களை கமல் தரப்பு வாங்கி, கோர்ட்டில் சமர்ப்பிப்பதற்கே காலதாமதம் ஏற்படும், அதன் மூலமாக தடை விலக்க விசாரணையும் நீண்டுகொண்டே போகும் என்பதுதான் அரசுத் தரப்பின் கணக்காம். அமெரிக்காவிலிருந்து திரும்பிய கமல் இது குறித்தெல்லாம் தனது வழக்கறிஞர்களுடனும் பட நிறுவனத்தினரிடமும் தீவிரமாக ஆலோசித்திருக்கிறார்.
முடிவில், "சட்டரீதியாகவே இந்த விவகாரத்தைக் கையாள்வோம்' என்ற கமலிடம் "அரசு தரப்பிடமும் பேசிப் பார்ப்போம்' என்று ஆலோசனையும் கூறியுள்ளனராம் அவரது வக்கீல்கள். தேவைப்பட்டால், சுப்ரீம் கோர்ட் வரை இந்த வழக்கைக் கொண்டு செல்வோம். திட்டமிட்டபடி 2-ந் தேதி டி.டி.ஹெச்.சில் ரிலீஸ் செய்யவும் நடவடிக்கை எடுப்போம். சட்டம்-ஒழுங்கு என்று சொல்லி அதைத் தடுக்க முடியாது. கடைசிவரை போராடிப் பார்த்திடுவோம் என விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் கமல்.
-இளையசெல்வன், சக்திவேல், சேதுராமன்