- உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ்மேனன், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர், அமீர், இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பன். இயக்குநர்கள் ரத்தினகுமார், புகழேந்தி தங்கராஜ்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானத்தைக் கொண்டு வர வலியுறுத்தி திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கம் உள்ளிட்ட திரை அமைப்பினர் பங்கேற்றனர்.
காலை 9 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடந்தது.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், இயக்குநர் அமீருக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
இளையராஜா, சரத்குமார்: உண்ணாவிரதப் போராட்டத்தில் இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர், பாலா, கௌதம் வாசுதேவ்மேனன், ஏ.ஆர்.முருகதாஸ், வசந்த், பாலாஜி சக்திவேல், பிரபுசாலமன், சிம்புதேவன், எஸ்.பி.ஜனநாதன், சசிகுமார், பாண்டியராஜன், எஸ்.ஜே.சூர்யா, மனோபாலா, மு.களஞ்சியம், பேரரசு, நடிகர்கள் சரத்குமார், பிரசன்னா, இசையமைப்பாளர் இளையராஜா, நடிகைகள் சுஹாசினி, சத்யபிரியா, குயிலி, தயாரிப்பாளர்கள் ஏ.எல். அழகப்பன், கலைப்புலி எஸ்.தாணு, கேயார், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஃபெப்ஸி அமைப்பின் செயலாளர் சிவா, பாடலாசிரியர்கள் தாமரை, நா.முத்துக்குமார், சினேகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தில் பேசிய பலர், ராஜபட்சவை சுதந்திரமான பன்னாட்டு நீதிமன்றத்தின் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். தனி ஈழத்தை உருவாக்க வேண்டும். ஈழத்துக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.
மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி - அமீர்: உண்ணாவிரதத்தை முடித்து இயக்குநர் அமீர் பேசியது: தமிழ் மக்களின் நீண்ட போராட்டங்கள் இன்னும் மத்திய அரசுக்கு புரியவில்லை. எங்களின் வலி மத்திய அரசுக்கு தெரியவில்லை. இந்த உணர்வு தானாக வந்தது. அரசியல் கட்சிகளின் உணர்வுபோல் அல்லாமல், தமிழர்களின் நலத்துக்கான உணர்வு இது. மக்களின் இந்த எழுச்சிமிகு போராட்டங்கள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி. ஜெனீவாவில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டால், எங்களின் இந்தப் போராட்டம் தொடரும் என்றார்.