எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்!
பிரிட்டனில் ஈழத்தமிழர்களுடன் பாரதிராஜா!

பிரிட்டனில் ஈழத்தமிழர்களுடன் பாரதிராஜா!
65 ஆண்டுகாலமாக தமிழினக் கருவறுப்புச் செயற்பாட்டை மேற்கொண்டு வரும் சிங்கள அரசின் மீது, ஐ நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு வலுச் சேர்க்கவும், பிரித்தானியாவில் 05.04.2013 வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் எழுச்சியுடன் ஒன்று கூடி பங்கேற்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள்உட்பட பெருந்திரளானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
பிரித்தானிய நேரம் மதியம் 2:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான எழுச்சிப் பேரணி ஆரம்ப நிகழ்ச்சியை கந்தையா இராஜமனோகரன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளரும் தமிழ்த்திரைப்பட இயக்குனருமான பாரதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் ஜெயானந்த மூர்த்தி, தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பாரதி ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஸ், தமிழகத்திலிருந்து வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம்பெற்றது.
பாரதிராஜா பேசுகையில், “ஈழம் கிடைக்கும், இனிமேல் தமிழன் என்பவன் ஈழத்தமிழன், இந்தியத் தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன்... பிரித்துப் பார்க்காதீர்கள். தமிழன் எல்லோரும் அவன் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்..”.என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் வாசஸ்தலம் நோக்கி நகரத் தொடங்கிய எழுச்சிப் பேரணி, மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றது.
நிறைவு செய்யப்பட்ட பொழுது எழுச்சிப் பேரணியில் இழுத்துச் செல்லப்பட்ட சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
நிறைவு நிகழ்ச்சியின் போது தமிழகத்திலிருந்து மாணவரர் பிரிட்டோ வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம்பெற்றது. தமிழக மாணவர் புரட்சியின் தொடர்ச்சியை இப்பேரணி பறைசாற்றியிருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.