பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு மீது பல வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளியது ஜெ.அரசு. 12 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமீனில் வெளியான ராமதாசு,
* தமிழக அரசும் விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து தான் மரக்காணம் கலவரத்தை நடத்தியதாக சிறையிலிருந்து விடுதலையான மருத்துவர் ராமதாசு குற்றம்சாட்டியுள்ளாரே?
இது குற்றச்சாட்டல்ல. உலக மகா நகைச்சுவை. அரசியலில் அரிச்சுவடி தெரியாதவர்கள் கூட இதைக்கேட்டு சிரிப்பார்கள். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் இருப்பதும் டெசோ அமைப்பில் கலைஞரோடு கைகோர்த்து பணியாற்றுவதும் தமிழகம் அறிந்த விஷயம். அப்படியிருக்கையில் சிறுத்தைகளும் அ.தி.மு.க. அரசும் இணைந்து மரக்காணம் கலவரத்தை நடத்தியதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மரக்காணம் கலவரம் ஏன் ஏற்பட்டது? எதற்காக ஏற்பட்டது? யாரால் ஏற்படுத்தப்பட்டது? என்பது மருத்துவரின் மனசாட்சிக்குத் தெரியும்.
* மாமல்லபுரம் மாநாட்டில் நிபந்தனைகளை மீறி நெடு நேரம் பேசினார், தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தார் என்கிற நிலையில் சட்டத்தை பாதுகாக்க கைது நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. ஆனால், ராமதாஸ் மீது அடுக்கடுக்காக தொடர் வழக்குகள் போடப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதானே?
இது வழக்கமான ஒரு நடைமுறைதான். இவர் மீது போடப்பட்ட வழக்குகள் எதுவும் தலித் மக்களுக்கு ஆதரவாகப் போடப்பட்டதல்ல. தர்மபுரி கலவரத்தில் இவர்கள் தான் காரணமென சுட்டிக் காட்டினோமே அதனடிப் படையில் போடப்பட்ட வழக்குகளா? இல்லை. கடந்த 6 மாதங்களாக தமிழகம் முழுக்கச் சென்று தலித் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டார்களே... அதற்காக போடப்பட்ட வழக்குகளும் இல்லை. விடுதலைச்சிறுத்தைகளை ரௌடி கும்பல் என்றும் பொறுக்கி கள் என்றும் காட்டுமிராண்டி கூட்டம் என்றும் 19 சதவீதத்தினர் 81 சதவீத மக்களை அடக்கி ஒடுக்குவதா என்றும் நாங்கள் ஆயுதம் தூக்கினால் என்னாகும் தெரி யுமா என்றும் மருத்துவரும் அவரோடு கை கோர்த்திருக்கும் மற்ற சாதி தலைவர்களும் சொன்னார்களே... அதற்காகவும் போடப்பட்ட வழக்குகளல்ல. மாறாக, தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் சட்ட-ஒழுங்கிற்கும் அவர் சவால் விட்டதன் அடிப்படையில் அரசுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதை நிரூபிக்க போடப்பட்ட வழக்குகள். நான் கைதானாலும் என் மீதுள்ள பழைய வழக்குகள் தூசு தட்டப்படத்தான் செய்யும். அதனால் இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக நான் பார்க்கவில்லை.
நீதி விசாரணை வேண்டும் அல்லது சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையும். சி.பி.ஐ.விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டால் அதை முழுமையாக வரவேற்பேன். வன்முறை யை தூண்டுகிற, கலவரத்தை உருவாக்குகிற புத்தி எனக்கோ சிறுத்தைகளுக்கோ துளியளவும் கிடையாது. அப்படிப்பட்ட அரசியலை நாங்கள் கையிலெடுப்பதும் இல்லை. லட்சக்கணக்கானோர் மாமல்லபுரத்தில் கூடுகிறார்கள் என்று அறிந்துள்ள காவல்துறை... ஒவ்வொரு வருடமும் இத்தகைய மாநாட்டில் மரக்காணம் பகுதியில் பா.ம.க.வினர் நடத்தும் வன்முறைகளை அறிந்துள்ள காவல்துறை... மாநாட்டுக்கு வருகிறவர்களை மாற்று பாதையில் அனுப்பத் தவறினர். இதனால்தான் பியரை குடித்துவிட்டு அதன் காலி பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி தலித் குடிசைகளையும் முஸ்லிம் குடிசைகளையும் நோக்கி வீசியுள்ளனர். இவர்களின் வன்முறையில் வன்னியர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த கோபம்தான் மாநாட்டிற்கு வந்த பா.ம.க. வாகனங்களை கூனிமேடு பகுதியில் வன்னியர்களே தாக்கினர். பா.ம.க. வாகனங்கள் தாக்கப்பட்டதற்கும் இரண்டு வன்னியர்கள் இறந்து போனதற்கும் தலித்துகள் காரணமல்ல.
* பா.ம.க.வினர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் குண்டர் தடுப்பு சட்டமும் தொடர்ச்சியாக ஜெ. அரசு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் குறித்து...?
சமூக அமைதிக்காகவும் தலித் மக்களை பாதுகாக்கவும்தான் முதல்வரை சந்திக்க விரும்பினோமே தவிர தேர்தல் அரசியலுக்காக அல்ல. தேர்தல் அரசியலுக்காக தலைவர்களுடனான சந்திப்பை நடத்தியிருந்தால் அது தலித் மக்களுக்கு செய்கிற துரோகம். அந்த துரோகத்தை ஒருபோதும் நான் செய்யமாட்டேன். முதல்வரை சந்திக்க விரும்பியதிலோ நான் நன்றி தெரிவித்ததிலோ தேர்தல் அரசியலுக்கான நகர்வுகள் துளிகூட கிடையாது. அதேபோல சிறுத்தைகள் சிலர் நன்றி போஸ்டர்கள் அடித்தனர். அது தலைமை கொடுத்த சிக்னல் அல்ல. தலைமை நன்றி தெரிவித்ததால் அதை பிரதிபலிக்கும் விதமாக சிலர் உணர்ச்சி வயப்பட்டுள்ளனர். அவ்வளவே. அதனால் அரசியல் ராஜதந்திரம் எதுவும் இதில் இல்லை. கூட்டணிக்கான நகர்வுகளாக இருந்தால் முதல்வர் நேரம் ஒதுக்கி எங்களை சந்தித்திருப்பாரே?.
* சமூக போராளியாக தன்னை நிரூபித்திருக்கும் ராமதாஸ் எதற்காக இதையெல்லாம் செய்ய வேண்டும்?
கடந்த வருடம் ஆகஸ்ட் 17-ல் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன ராமதாஸ், "தம்பி, மனம் நிறைந்த வாழ்த்துகள். மேன்மேலும் புகழும் பெருமையும் அடைய வேண்டும்' என்று வாழ்த்தினார். மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால், அடுத்த இரண்டே மாதத்தில் தர்மபுரி வன்முறை (நவம்பர்-7). தர்மபுரி வன்முறைக்கு பிறகு நவம்பர் 20-ல் சேலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராமதாஸ், உ.பி.யில் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பது போல "சோஷியல் இன்ஜினியரிங் ஃபார்முலா' ஒன்றை பிரகடனப்படுத்தினார். அதாவது தலித் அல்லாத அனைத்து சாதி அமைப்புகளையும் ஒருங்கிணைக்கப் போகிறேன் என்பதுதான் அந்த ஃபார்முலா. அதன் செயல்திட்டம்தான் தர்மபுரி வன்முறை, அனைத்து சமுதாய பேரியக்கம் உருவாக்குதல், தமிழகம் முழுவதும் வெறுப்பு பிரச்சாரம், மரக்காணம் வன்முறை ஆகியவை. அதனால் இவைகள் ஏனோதானோவென நடந்த நிகழ்வுகள் அல்ல. தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலின் மையம் நான்தான் என்று காட்டிக்கொள்ள மருத்துவர் ராமதாஸ் திட்டமிட்ட நிகழ்வுகள். சரி... எதற்காக இதை அவர் செய்கிறார்? 2009-ல் அ.தி.மு.க. கூட்டணியிலும், 2011-ல் தி.மு.க.கூட்டணியிலும் இருந்தது பா.ம.க. இந்த கூட்டணி இரண்டிலும் ராமதாஸுக்கு படு தோல்வி. அடுத்து, அடிக்கடி அணி மாறுகிறார் என்கிற இமேஜால் சொந்த கட்சியினரிடத்திலே அதிருப்தியை ஏற்படுத்தியது. தே.மு.தி.க.வின் வளர்ச்சி, பா.ம.க.வின் பேர வலிமையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தேர்தல் அரசியலில் ராமதாஸ் கவனம் பெற்றாக வேண்டும். எல்லா கூட்டணிகளுக்கும் போய் வந்தாச்சு. விஜயகாந்த்தோடு ராமதாஸ் முரண்பட்டிருப்பதால் அவரோடு கூட்டணி வைக்க முடியாது. அதனால் அவர் உருவாக்க முனைந்ததுதான் சாதி சங்கங்களின் கூட்டணி. அக்கூட்டணியின் செயல் திட்டம்தான் சோஷியல் இன்ஜினியரிங் ஃபார்முலா.
* தலித் சமூகத்தினர் எங்களுக்கு எதிரி இல்லை. ஆனால், சிறுத்தைகள்தான் தவறானவர்கள் என்கிறார் ராமதாசு. உங்கள் மீது ஏன் இவ்வளவு காட்டம்?
தர்மபுரி வன்முறைக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. அப்போது என்னை தொடர்புகொண்ட மருத்துவர், "நம் இரண்டு சாதியும் அரசியலில் இணைந்தால் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருக்க முடியும்' என்றார். அதற்கு நான், "ஏற்கனவே நம் இரண்டு கட்சியின் மீதும் சாதி முத்திரை இருக்கிறது. இந்தச் சூழலில், நாம் இணைந்தால் பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்' என்று சொல்லி மறுத்துவிட்டேன். அதனால் என்மீது அவருக்கு தீராத கோபம். அவர் நினைத்தபடி நாங்கள் இணைந்திருந்தால் தலித்துகளுக்கு எதிரான யுக்தியை அவர் கையிலெடுத்திருக்கமாட்டார். அவர் விரும்பியபடி நான் ஒத்துழைக்காததால் என் மீதும் சிறுத்தைகள் மீதும் கோபம் கொண்டிருக்கிறார் என்று தான் கருதுகிறேன். இதனையடுத்துதான் தலித் அல்லாத மற்ற சாதி அமைப்புகளை இணைக்க அவர் திட்டமிட்டது. அதன்படி, அவர்களை எப்படி ஒன்றிணைப்பது? அதற்கு அவர் கையிலெடுத்ததுதான் வன்கொடுமை தடுப்புச் சட்டம், நாடக காதல் விவகாரம். தேர்தல் அரசியலுக்காக உழைக்கும் மக்களுக்கு எதிரான யுக்தியை எடுத்திருக்கிறார். இது, எவ்வளவு ஆபத்தானது என்பதை காலம் அவருக்கு உணர்த்தும்.
சந்திப்பு : இரா.இளையசெல்வன்
படங்கள் : எஸ்.பி.சுந்தர்