""ஹலோ தலைவரே... பரபரப்பான ராஜ்யசபா தேர்தல் முடிந்த வேகத்தில் கொடநாட்டுக்கு போயிட்டாரு ஜெ!''
""அங்கே எத்தனை நாள் ஓய்வாம்?''
""ஓய்வா? அப்படி சொன்னீங்கன்னா உங்க மேலே அவதூறு வழக்குப் பாயலாம். எத்தனை நாட்களில் திரும்பி வருவார்னு கிளம்புறப்ப திட்டமிடலைன்னாலும், அங்கே யிருந்தே அரசுப் பணிகளை ஜெ. கவனிப்பார்ங்கிறதுதான் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. அதற்கேற்றமாதிரி, அமைச்சர் களோடும் துறைச் செயலாளர்களோடும் ஜெ. உடனடியா பேசுறதுக்கு எளிதா கோட்டைக் கும் கொடநாட்டுக்கும் ஹாட்லைன் வசதிகள் செய்யப்பட்டிருக்குது. கொடநாட்டுக்குப் போனதும் ஜெ. ஹாட்லைனைப் பயன் படுத்தியதே, ஒரு மந்திரிக்கும் துறைச் செய லாளருக்கும் ஹாட்டா டோஸ் விடுறதுக்குத் தானாம்.''
""ஹாட்டா வறுத்தெடுக்கப்பட்ட அந்த அமைச்சரும் துறைச் செயலாளரும் யாருப்பா?''
""சொல்றேங்க தலைவரே.. .. சென்னையிலிருந்து தனி விமானத்தில் பறந்து கோவைக்குப் போய் அங்கிருந்து ஹெலிகாப்டரில் நீலகிரியில் உள்ள கோத்தகிரிக்கு ஜெ. பறந்தார். இரண்டு மலைகள், விசாலமான ஏரின்னு மிகப் பெரிய அளவில் பரந்து விரிந்திருக்கும் கொட நாடு எஸ்டேட்டில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்குவதுதான் வழக்கம். எஸ்டேட்டில் மாளிகைபோல இருக்கும் பங்களாவில் ஜெ. தங்குவார். இந்த முறை, வானிலை சரியில்லாததால ஜெ.வின் ஹெலிகாப்டர் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்பட, அவர் மறுபடியும் கோவைக்கு ரிட்டனாகி, அங்கிருந்து நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட காரில் கொடநாட்டுக்குக் கிளம்பினார். இந்தப் பயணத்தில் ஜெ.கூட சசிகலா இல்லை. ஆனா, பேச்சுத் துணைக்காக இன்னொரு பெண் இருந்தார்.''
""அப்படியா? யாராம்?''
""கொடநாட்டில் ஜெ. தங்கியிருக்கும்போது ஹாட்லைனில் அரசுப் பணிகள் நடக்குதுன்னா, அரசியல் ரீதியா காய்கள் நகர்த்துவதா ஹாட்நியூஸ்களும் வருமே.''…
""எம்.பி. தேர்தல் சம் பந்தமான கணக்குகள் காய்நகர்த்தல்கள் இல் லாமல் இருக்குமா? தன் னைத்தான் பிரதமர் வேட்பாளரா முன்னி றுத்தி இந்த முறை தேர் தல் பிரச்சாரத்தை செய்ய ணும்ங்கிறது ஜெ.வோட கணக்கு. ஆனா, ஜெ.தான் பிரதமர் வேட்பாளர்ங்கிற பிரச்சாரம், அ.தி.மு.க.வின் கீழ்மட்டத்துக்கே சரியாப் போய்ச் சேரலை. அதனால, 70ஆயிரம் பூத் கமிட்டிகளை அமைச்சி, ஒவ்வொரு பூத்கமிட்டி யிலும் அ.தி.மு.க.வின் பல்வேறு அணியினரையும் உறுப்பினராக்கி, போதுமான அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, தான்தான் பிரதமர் வேட்பாளர்ங்கிறதை பிரதானப்படுத்தி பிரச்சாரம் செய்யணும்னு ஜெ. திட்டமிட்டிருக்கிறார். கொடநாட்டில் இதற்கான ப்ளான்களும் பக்காவா ரெடியாகுதாம்.''
""கொடநாட்டுக்கு ஜெ. புறப்படுறதுக்கு முன்னாடி தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியும், பா.ம.க. முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்னுசாமியும் அவரை சந்தித்து, அ.தி.மு.க.வில் இணைந்து தலைமை செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டி ருக்காங்களே..?''
""டாக்டர் ராமதாஸால் தேர்வு செய்யப்பட்டு மத்திய இணையமைச்சராக்கப்பட்டவர் பொன்னு சாமி. அவருக்குப் பெட்ரோலியத்துறை கிடைத் தது. சமீபகாலமா ராமதாஸிடமிருந்து விலகி யிருந்த பொன்னுசாமி, அ.தி.மு.க.வில் சேர்ந்துட் டாரு. ஆனா, பாரம்பரியமான தி.மு.க. குடும்பத் தைச் சேர்ந்த பரிதி இளம்வழுதி, அ.தி.மு.கவில் சேர்ந்தது தி.மு.கவின் நிர்வாகிகள் முதல் அடிமட்டத் தொண்டர்கள்வரை எல்லோருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கிடிச்சி. நம்ம நக்கீரன்தான், அ.தி.மு.க. பக்கம் பரிதியோட கவனம் இருப்பதையும், அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரைத் தொடர்ந்து சந்தித்து வந்ததையும் முன்கூட்டியே சொல்லியிருந்தது.''
""அவர் ஏற்கனவே தோட்டத்துக்கு லெட்டர் அனுப்பிட்டு, அப்பாயிண்ட்மெண்ட்டுக்காகக் காத்துக்கிட்டே இருந்தாரு. அங்கேயிருந்து சரியான சிக்னல் வரலை. பத்திரிகையாளர்கள் இரண்டு பேர் மூலம் மூவ் பண்ணிப் பார்த்தாரு பரிதி. ரொம்ப லேட்டா அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தது. அவ சரமா கிளம்பிப்போனார் பரிதி. அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை அவருக்குக் கொடுத்த ஜெ., நல்லா ஃபீல்டு ஒர்க் பண்ணுங்கன்னு சொன்னாராம். கார்டனிலிருந்து திரும்பியதும் தன்னோட ஆட்கள் கிட்டே இதைத்தான் பரிதி பரவசத்தோடு சொல்லிக் கிட்டே இருந்திருக்கிறார். அதோடு, கலைஞரையும் அவர் குடும்பத்தையும் சகட்டு மேனிக்குத் திட்டி பேட்டிகளையும் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு.''
""அ.தி.மு.க.வில் பரிதி சேர்ந்த தகவல் கிடைத்ததும் அறிவாலயத்தில் ரியாக்ஷன் எப்படி இருந்ததாம்?''
""பரிதியோட அப்பா இளம்பரிதி, அண்ணா காலத்து அரசியல்வாதி. கலைஞருக்கு ரொம்ப வேண்டியவரு. அவர் தேர்தல் சீட் கேட்க, உன் மகனை அரசியலுக்கு கொண்டு வர்றேன்னு பரிதிக்கு சீட் தந்தார் கலைஞர். என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் அ.தி.மு.க.வுக்கெல்லாம் பரிதி போக மாட்டாருன்னுதான் கலைஞர் நினைச்சிக்கிட்டிருந் திருக்காரு. துணை பொதுச் செயலாளர் பதவியை நாம பறிக்கலை, அவரேதான் ராஜினாமா செய்தாரு. எம்.பி. தேர்தல் நேரத்தில் எல்லாம் சரியாயிடும். புதுசா பொறுப்பு கொடுக்கலாம்னு நினைச்சிருந்தேன். அங்கே போயாச்சான்னு சங்கடத்தோடுதான் கட்சி நிர்வாகிகள்கிட்டே பேசினாராம் கலைஞர். அ.தி. மு.க.வுக்கு பரிதி போவாருன்னு அவர் எதிர்பார்க் கலை. அப்படியிருந்தும்கூட முரசொலியில் கவிதைப் பித்தன் "சோற்றில் கை வைக்கையில் யார்போட்ட உணவென்று சொல்லட்டும் இதயம் இருந்தால்.. … சூரியன் வழங்கிய நாற்காலி நினைவுகள் தோன்றட் டும் கனவு கலைந்தால்..'னு எழுதிய கவிதையிலகூட பரிதி பேர் இருந்ததைப் பார்த்து, அதை எடுக்கச் சொல்லிட்டாராம் கலைஞர்.''
""தி.மு.க.வில் 6 முறை எம்.எல்.ஏ., ஐந்து வருடம் சட்டமன்ற துணை சபாநாயகர், 5 வருடம் மந்திரி, கட்சியில் துணைப் பொதுச்செயலாளர்னு பல வாய்ப்புகளைத் தலைமை கொடுத்திருந்தும், சமீபகாலமா பரிதிக்கு கட்சிக்குள்ளேயே கசப்பான அனுபவங்கள்னு சொல்லப்படுது. அது தானே அரசியல்?''
""ம்..''
""எந்தப் பொதுக்கூட்டத்துக்கும் பரிதி யை அழைக்கலையாம். தேர்ந்தெடுக்கப் பட்ட செயற்குழு உறுப்பினரா அவர் இருந்தும்கூட செயற்குழு கூட்டங்களுக்கு அழைப்பு வரலையாம். தொகுதியை சேர்ந்த கட்சிக்காரங்க பரிதிகிட்டே பேசினாக்கூட, அவங்க மேல சந்தேகப் பார்வை விழுந்ததாம். இப்படிப்பட்ட நிலையில் இனியும் தி.மு.கவில் இருந்தால் எதிர்காலமே இல்லைன்னுதான் அ.தி.மு.கவுக்கு பரிதி போனாருன்னு அவர் தரப்பு சொல்லுது.''
""குற்றச்சாட்டுகளெல்லாம் மு.க.ஸ்டாலின் மேலேதானே வைக்கப்படுது. அவர் தரப்பு இது சம்பந்தமா என்ன சொல்லுது?''
""1984-ல்தான் ஸ்டாலினும் பரிதியும் முதன்முதலில் தேர்தல் களத்தில் போட்டியிட்டாங்க. அதில் ஸ்டாலினுக் குத் தோல்வி. பரிதி போட்டியிட்ட தொகுதியில் ஒரு வேட் பளார் மரணமடைந்ததால, தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு, பிறகு நடந்தது. அப்ப ஸ்டாலின்தான் தன்னோட தோல்வி யைப் பற்றிக்கூட கவலைப்படாம பரிதியோட வெற்றிக்குத் துணையா நின்னாரு. பரிதிக்கு சீட்டுக்காக கட்சியில் பணம் கட்டியதும் ஸ்டாலின்தான். தேர்தல் செலவுகளையும் அவர் தான் கவனிச்சிக்கிட்டாரு. இளைஞரணியிலும் இரண்டு பேரும் ஒன்றா செயல்பட்டாங்க. அப்ப பொதுக்கூட்டங் களில் பரிதி பேசினாருன்னா, வழிச் செலவுக்குப் பணம் கொடுப்பதோடு தங்கள் குடும் பத்து உறுப்பினர் மாதிரி அவரை நினைச்சி கட்சிக் காரங்க எல்லா உதவி களும் செய்வாங்க. ஸ்டா லின் ஆதரவாலதான் இதெல்லாம் நடந்தது. வளர்ந்து வசதியானதும் இதையெல்லாம் பரிதி மறந் துட்டு, இன்னைக்கு அ.தி. மு.க.விலே சேர்ந்து, கலைஞரை யும் ஸ்டாலினையும் திட்டுறாரு. இத்தனைக்குப் பிறகும்கூட பரிதி மகன் இளம்சுருதிக்கு இளைஞரணியில் பொறுப்பு கொடுத்திருக்காரு ஸ்டாலின். அதைக்கூட பரிதி நினைச்சுப் பார்க்கலைன்னு சொல்றாங்க.''
""இரண்டு பக்கத்தையும் தெரிஞ்சவங்க இருப் பாங்களே, அவங்க என்ன சொல்றாங்க?''
""பரிதிக்கு 3 மனைவிகள். அதில் இரண்டாவது மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டாரு. அந்த மனைவி யோட மகனுக்குத்தான் இளைஞரணியில் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு. குடும்பச் சிக்கல்களும் பரிதி யோட அரசியல் மாற்றத்துக்கு காரணம்னு சொல் றாங்க. பரிதியின் மூன்றாவது மனைவியோ, என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதாலதான் உங்களுக்கு இத்தனை பிரச்சினைகளும்னு சொல்றாராம். குடும்பக் குழப்பங்கள் அரசியல் வாழ்க்கையைப் பதம் பார்த்து விடுகிறது.''
""அடுத்த விஷயத்துக்குப் போவோம்ப்பா.. .. தமிழக காங்கிரசின் மேலிடப் பார்வையாளரா நியமிக்கப்பட்டிருக்கும் முகுல் வாஸ்னிக் முதல்முறையா சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தாரே.. வரவேற்பு எப்படி? ஆலோசனைகள் எப்படி?''
""வாசன், ஞானதேசிகன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஜெயந்திநடராஜன் இவங்களெல்லாம் வரவேற்க வந்திருந்தாங்க. ப.சிதம்பரமும் இளங்கோவனும் ஆப்சென்ட். முகுல்வாஸ்னிக் பவனுக்கு வந்ததுபோலவே, புது பொறுப்புகளைப் பெற்றுள்ள திருநாவுக்கரசர், ஜெயக்குமார், செல்லகுமார் ஆகியோரும் வந்தாங்க. மத்திய இணையமைச்சராகியிருக்கும் சுதர்சன நாச்சி யப்பனும் வந்திருந்தார். கட்சியின் முன்னாள்-இந்நாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஏ.ஐ.சி.சி. மெம்பர்களோடு ஆலோசனை நடத்தினார் முகுல் வாஸ்னிக். தமிழக காங்கிரஸ் நிலைமையை ஞானதேசிகன்தான் ஓப்பன் பண்ணினாரு.''
""என்ன சொன்னாராம்?''
""எந்த கட்சியிடமும் நமக்கு மரியாதையில்லை. எந்தக் கூட்டணியும் நமக்கு சரியா இல்லை. காங்கிரஸ் கட்சிக்கான நிர்வாகிகளை நியமிச்சால்தான் கட்சியை வளர்க்க முடியும். கமிட்டிகளை அமைக்கணும்னு சொல்லியிருக்காரு. பலரும் இதே கருத்தை சொல்ல, எம்.எல்.ஏ விஜயதாரணி பேசுறப்ப, காங்கிரஸ் கட்சியை தலைவர்களால் காப்பாற்ற முடியாது. இறைவனால் மட்டும்தான் காப்பாத்த முடியும். அதனால இறைவனை வேண்டிக்கிறேன்னு சொல்ல ஒரே சிரிப்பலை.''
""வாஸ்னிக் இதற் கெல்லாம் என்ன ரிப் ளை கொடுத்தாராம்?''
""அதை நான் சொல்றேன்.. கமிட்டி, புது நிர்வாகிகள் இதெல்லாம் தேவை தான். ஆனா, இதெல் லாம் சரியா இருக்கிற மாநிலங்களில்கூட காங்கிரஸ் வளரலை. அதனால மாவட்ட அளவில் ஆலோ சனை கூட்டங்களை ஜூலை கடைசிக்குள் நடத்தி முடியுங்க. அப்புறம் கமிட்டிகள் பற்றி ஆலோசிப்போம்னு சொல்லி யிருக்காரு. கூட்டணி உள்பட வேறு விஷயங்கள் எதுவும் பேசப்படலை. காந்தி சிலைக்கும் காமராஜர் சிலைக்கும் முகுல் வாஸ்னிக் மாலை போடப் போனப்ப அவர்கூட வெறும் 20 பேர்தான் இருந்திருக்காங்க. தமிழக காங்கிரசோட நிலை என்னன்னு அவருக்குப் புரிஞ்சிருக்கும்.''
விஜயகாந்த் மீது அடிதடி வழக்கு! கைதா?
|
லாஸ்ட் புல்லட்!
என்.எல்.சி. பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என அனைத்துக் கட்சி தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக களமிறங்கிவிட்டன. போலீஸ் ஐ.ஜி கண்ணப்பன் தலைமையில் நடந்த காவல்துறை மீட்டிங்கில் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் போராட்டம் நீடித்தால் என்ன ஆகும் என்று நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டால், தற்போது இருப்பு உள்ள கரியை வைத்து மூன்று நாட்களுக்குத் தான் மின்சார உற்பத்தி செய்ய முடியும். சுரங்கத்திலிருந்து கரியை வெட்டி எடுப்போர், கிரஷர் மில்லில் வேலை செய்வோர், பாய்லரில் பணியாற்றுவோர், டர்பன் ஆபரேட்டர்கள் என ஒட்டுமொத்த ஊழியர்களும் போராட்டத்தில் இறங்குவதால் பெரும்பாதிப்புதான் என்கிறார்கள். தொ.மு.ச. திருமாவளவனும் அண்ணா தொழிற்சங்க அபுவும் ஒன்றுபட்டு போராட்டத்தை வழிநடத்த, மத்திய அரசின் பிடிவாதம் தளர்ந்தால் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 5% பங்குகளை மாநில அரசுக்கு விற்பது பற்றி பரிசீலிப்போம் எனத் தெரிவித்திருக்கிறார் ப.சிதம்பரம்.
|