வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களினதும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் செயலாளரும் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா, முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் யாழ். மாவட்டத்திற்கான வேட்புமனுவை யாழ். செயலகத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் அந்த மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான குழுவினரும் தாக்கல் செய்யவுள்ளனர்.