சட்டமன்றத்தில் இருவரும் சந்தித்துக் கொள்வதில்லை. நேருக்கு நேர் வாதங்களில் ஈடுபடுவதில்லை. ஆனால், சட்டமன்ற விவாதங்களைவிட படுசூடாக அடிக்கடி அறிக்கைகள் மூலமாக மோதிக்கொள்கிறார்கள் ஜெ.வும் கலைஞரும். மக்கள்பிரச்சினைகள்,
nakkeranநலத்திட்டங்கள் இவற்றில் தொடங்கி, தனிப்பட்ட தாக்குதல்கள் வரை நீள்கின்றன இந்த அறிக்கைகள். காவிரிப் பிரச்சினை, கச்சத்தீவு, ஈழவிவகாரம் என எதுவாக இருந்தாலும் நீயா-நானா என சளைக்காமல் சாடிக்கொள்வது இருவருக்குமே கைவந்த கலையாக இருக்கிறது.
லேட்டஸ்ட்டாக, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மசோதா மற்றும் கொடநாடு தங்கல் தொடர்பாக ஜெ.வும் கலைஞரும் தொடுத்த அறிக்கைக் கணைகளில் உச்சகட்ட உஷ்ணம். உணவு பாதுகாப்பு மசோதாவை தி.மு.க ஆதரிப்பதாகக் குற்றம்சாட்டி ஆகஸ்ட் 5-ந் தேதி கொடநாட்டிலிருந்து ஜெ. ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில், "" "இரட்டை நாக்கு', "இரட்டை வேடம்', "கபட நாடகம்', "முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது', "அந்தர்பல்டி அடிப்பது', "குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது' என தன்னலத்திற்காக பல வழிமுறைகளை கருணாநிதி பின்பற்றி வருகிறார் என ஆரம்பித்த ஜெ., "தமிழக மக்களுக்கு அனைத்து விதங்களிலும் எதிராக உள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தி.மு.க. ஆதரிக்கும்' என்று டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக சொல்ல வைத்திருக்கிறார் கருணாநிதி. தன் மகளுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்ததும், தமிழ்நாட்டில் உள்ள ஏழை-எளிய மக்களை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்! தன்னலத்திற்காக தமிழக மக்களை அடகு வைக்கும் செயல் நியாயமா என்பதை கருணாநிதி சிந்தித்துப் பார்க்க வேண்டும். கருணாநிதியின் இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைப் பார்க்கும் போது "எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?' என்ற எம்.ஜி.ஆரின் பாடல்தான் என் நினைவிற்கு வருகிறது'' என்று சரமாரியாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
ஆகஸ்ட் 7-ந் தேதி, "துரோகங்களைப் பட்டியலிட முற்பட்டால் என்னவாகும்' என ஜெ.வுக்கு பதிலளித்து கலைஞரின் அறிக்கை வெளியானது. அதில், ""இரட்டைநாக்கு, இரட்டை வேடம், கபடநாடகம் என்றெல்லாம் அறிக்கை விடுவதா ஒரு முதலமைச்சரின் லட்சணம்? தான் ஒரு முதலமைச்சர் என்பதையே மறந்துவிட்டு, அரைவேக்காடுகளைப் போல அரைகுறை அறிக்கை விட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் எடுத்துக்காட்டியுள்ள "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்' என்ற பாடல் இடம்பெற்ற "மலைக்கள்ளன்' திரைப்படமே நான் உரையாடல் எழுதி, புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். நடித்து வெற்றிகரமாக ஓடிய படம்தான். இதற்குப் பிறகும் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து துரோகம், துரோகம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொள்வாரானால் யார், யார் எதற்காக என்னென்ன துரோகங்களைச் செய்தார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட முற்பட்டால் என்ன ஆகும்'' என்று பதிலடி கொடுத்திருந்தார். அதன்பின், ஆகஸ்ட் 10-ந் தேதி "உணவு மசோதா நமது நிலை' என்ற தலைப்பில் முரசொலியில் உடன்பிறப்பு கடிதம் எழுதியிருந்தார் கலைஞர். அதிலும், "ஜெ., இந்த மசோதாவை எதிர்க்கவில்லை. திருத்தங்கள் தான் கோருகிறார். ஆனால் நான்தான் ஏதோ மத்திய உணவு மசோதாவை ஆதரித்து தமிழகத்திற்கே துரோகம் செய்துவிட்டதாகத் தனது அறிக்கையில் ஜெயலலிதா தாண்டிக் குதித்திருக்கிறார்' என எழுதியிருந்தார்.
பதிலுக்குப் பதில் என சுடச்சுட ஓர் அறிக்கையை அதே நாளில் ஜெ. வெளியிட, அது ஜெயா டி.வி.யிலும் மறுநாள் நமது எம்.ஜி. ஆரிலும் மற்ற பத்திரிகைகளிலும் முன்னிலை பெற்றது. "உணவு பாதுகாப்பு மசோதாவை தி.மு.க. ஆதரிக்கும் என தலைமையின் ஒப்புதல் இல்லாமலேயே டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி கொடுத்தாரா' என ஆரம்பித்து பலவிதமாகப் போட்டுத்தாக்கியிருந்த ஜெ., இறுதியாக 7 கேள்விகளை எழுப்பி, இதற்கு கருணாநிதி பதிலளிக்க வேண்டும் என கொக்கிப் போட்டார். தமிழகத்திற்கு எதிராக உள்ள இந்த மசோதா மீது இதே வடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றால் தி.மு.க. அதற்கு எதிராக வாக்களிக்குமா? என்றும் ஜெ., கேட்டிருந்தார்.
அப்பாடா ஒரு வழியாக உணவுப் பாதுகாப்பு மசோதா சண்டை முடிந்து, தமிழக மக்கள் பாதுகாப்பாகிவிட்டார்கள் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த விவகாரமாக கொடநாட்டில் ஜெ. தங்கியிருந்தது பற்றிய அறிக்கை சண்டை கிளம்பியது. ஆகஸ்ட் 1-ந் தேதியே முரசொலியில் இதைக் கிளறினார் கலைஞர்.
"இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தலைமைச் செயலகத்தில் மின்சாரமே இல்லையாமே?' என்று அவரே கேள்வி கேட்டு, "தலைமைச் செயலகத்தில் ஒரு மாத காலமாக முத லமைச்சரே இல்லை, இந்த இலட்சணத்தில் மின்சாரம் இருந் தால் என்ன, இல்லாவிட்டால் என்ன' என்று செம நக்கலாக பதில் சொல்லியிருந்தார். அத்துடன், "எந்த ஒரு மாநிலத்திலாவது எந்த ஒரு முதலமைச்சராவது இப்படி நடந்தது உண்டா? வேறொரு ஆட்சி நடைபெற்று முதலமைச்சர் தலைநகரிலே இத்தனை வாரங்கள் தொடர்ந்து இல்லை என்றால் தமிழ்நாட்டில் உள்ள ஏடுகள் எல்லாம் எவ்வளவு எழுதியிருக்கும்?' என்றும் கலைஞர் கேட்டிருந்தார். ஆகஸ்ட் 10-ந் தேதி நீலகிரி கண்டோன்மென்ட் தேர்தலில் அ.தி.மு.க. வினர் வன்முறை செய்ததைக் குறிப்பிட்டு, "கொடநாட்டில் ஜெ. இருந்தும் சட்டம்-ஒழுங்கு நிலைமை இப்படித்தான் இருக்கிறது' எனக் கலைஞர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிக்கை கலைஞருக்கு அல்வா சாப்பிடுவதுபோல அமைந்துவிட்டது. தனது ஆட்சியின்போது 2007-ம் ஆண்டில் 3 நாட்கள் பெங்களூரு சென்றதற்கே, "முதலமைச்சர் பதவிக்குரிய கடமையை கருணாநிதி செய்யத் தவறிவிட்டார்' என விமர்சித்து ஜெ. அப்போது வெளியிட்ட அறிக்கையைக் குறிப்பிட்டு, "நான் மூன்று நாட்கள் சென்றதற்கே இத்தனை கண்டனங்கள் என்றால், 30 நாட்களுக்கு மேலாக கொடநாடு எஸ்டேட் பங்களாவில் தங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி நான் என்ன சொல்வது? ஊரே பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் யாரோ? தமிழ்நாட்டு மக்களே நீங்களே கூறுங்கள்' என்று கேட்டிருந்தார் கலைஞர்.
அத்துடன், "புதிய தலைமைச் செயலகத்தைத் தவிர்த்துவிட்டு பழைய தலைமைச் செயலகத்திலேயே பணிகள் மேற்கொண்ட ஜெ., இரண்டிற்கும் இடையே ஒரு கி.மீ. தூரம் இருக்கும். அந்தக் கட்டிடத்திலிருந்து இந்தக் கட்டிடத்திற்கு கோப்புகளை கொண்டு வருவது என்றாலோ, அதிகாரிகள் வந்து பார்க்க வேண்டு மென்றாலோ இயலாது. எனவே புதிய தலைமைச் செய லகத்திற்கு செல்ல இயலாது' என்று தெரிவித்திருந்ததை நினைவுபடுத்தி, "அப்படி பதிலளித்த ஜெயலலிதாதான் சென்னையிலிருந்து 500 கி.மீக்கு அப்பால் உள்ள கொடநாட்டிலிருந்துகொண்டே அரசு நிர்வாகத்தைக் கவனிக்க முடியும் என்கிறார். கடந்த ஒரு மாதகாலத்தில் எத்தனை அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொண்டார். எத்தனை முறை அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். வாரம் ஒருமுறை பத்திரிகை யாளர்களை சந்திப்பேன் என்ற ஜெயலலிதா எத்தனை முறை சந்தித்தார் என்ற விவரத்தைப் பார்த்தாலே யார் ஆட்சிக் காலத்தில் அரசு நிர்வாகம் முடங்கிக்கிடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாமே' எனக் கேட்டிருந்தார் கலைஞர்.
இருவருக்குமான அறிக்கை யுத்தம் இது போல தொடர்ந்து கொண்டேதான் இருக் கிறது. கேள்விகள், சவால்கள், விமர்சனங் கள், வசவுகள் என எந்த எல்லைக்கும் இவை செல்கின்றன.
எனினும், "இரு வரது அறிக்கைகளும் தான் தமிழக அரசியலை லைவ்’வாக வைத்திருக் கின்றன' என்கிறார்கள் அரசியல் நோக்கர்களும் ஊடகத்துறையினரும்.
தமிழகத்தில் உள்ள மற்ற கட்சி நிர்வாகிகளிடம் இதுகுறித்த சந்தேகப் பார்வை உள்ளது. ""சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் அறிக்கை விட்டால் ஜெ. பதில் தரமாட்டார். வைகோவுக்குக் கூட அமைச்சர் தாமோதரனைத்தான் பதிலளிக்க வைத்தார். ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்களின் நிலையும் இதுதான். கலைஞரை மட்டும் குறிவைத்தே ஜெ. அறிக்கை விடுவார். அதுபோல கலைஞரின் அறிக்கைக்கு மட்டும்தான் பதில் கொடுப்பார்.
தமிழக அரசியல் எனும் பந்து தங்கள் இருவரில் யாரேனும் ஒருவரின் காலடியில்தான் இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் போலும். மற்ற கட்சிகளுக்கு சின்ன வாய்ப்புகூட கிடைத்துவிடக் கூடாது என்பதுபோல செயல்படுகிறார்கள். ஒருவேளை, இந்த விஷயத்தில் இரண்டுபேரும் ரகசிய கூட்டணி அமைத்திருக்கிறார்களோங்கிற சந்தேகம்கூட உருவாகுது'' என்கிறார்கள் விரக்தியுடன்.