""ஹலோ தலைவரே... பிரதமராகும் கனவில் இருக்கும் ஜெ., அதற்கு அணைபோடுற மாதிரி இருக்கிற இந்த சொத்துக் குவிப்பு வழக்கு எப்படியாவது சீக்கிரமா முடியணும்னும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரணும்னும் எதிர்பார்ப்போடு இருப்பதைப் பற்றி நம்ம நக்கீரனில் டீடெய்லா எழுதியிருந்ததைப் படிச்சிருப்பீங்க..''
""படிச்சேம்ப்பா.. படபடப்பு கலந்த எதிர்பார்ப்போடு இருப்பதை விலாவாரியா நக்கீரன் எழுதியிருந்தாங்களே!''
""இந்த வழக்கில் அரசு வக்கீலை மாற்றியதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு 4-ந் தேதியன்னைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தப்ப சென்னையில் ஜெ. ரொம்ப டென்ஷனா இருந்திருக்கார். யாருக்கும் அப்பாயிண்ட்மெண்ட் கொடுக் கலை. கொடுத்த அப்பாயிண்ட்மெண்ட் டையும் கேன்சல் பண்ணிட்டாரு. உணவுத்துறை மந்திரி காமராஜ் தன்னோட பிறந்தநாளுக்காக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 4-ந் தேதி ஜெ.வை குடும்பத்தோடு சந்தித்து ஆசி வாங்குவது வழக்கம். இந்த முறையும் முன்கூட்டியே அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டாரு. முன்னாடியே போய் கார்டனில் காத் திருந்தும், ஜெ.வை சந்திக்க முடியல. நொந்துபோய் திரும்பிட்டாரு. மறுநாள் மதியம்தான் அவருக்கு அப்பாயிண்ட் மெண்ட் கிடைச்சிருக்குது.''
""ஜெ. அந்த வழக்கை ரொம்பவும் எதிர்பார்த்துக்கிட்டிருந்த செப்டம்பர் 4-ந் தேதியன்னைக்குத்தான், அரசு வக்கீல் மாற்றம் தொடர்பான ஆவணங்களை கர்நாடக அரசு சமர்ப்பிக்கணும்னு உத்தரவிட்ட சுப்ரீம்கோர்ட், வழக்கை 6-ந் தேதிக்கு ஒத்திவச்சதே!
""அதிலேயும் ஜெ.வுக்கு டென்ஷன் தான். இந்த மனு மீது ஜெ. தரப்பு வாதம், பேராசிரியர் அன்பழகன் தரப்பு வாதம், நீக்கப்பட்ட அரசு வக்கீல் பவானிசிங்கின் வாதம், அப்புறம் கர்நாடக அரசுத்தரப்பின் வாதம்னு பலருடைய வாதமும் அடங்கும். ஒத்தி வைக்கப்பட்டால் என்னென்ன நடக்கும், கர்நாடக அரசு என்ன பதில் கொடுக்கும்னு புதன்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை ஜெ. டென்ஷனாவே இருந்தார். நான் கர்நாடக சைடில் விசாரிச்சேங்க தலைவரே.. பேராசிரியர் மனுவில் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாலகிருஷ்ணா செப்டம்பர் 30-ந் தேதி, தான் ரிடையர்டாவதற்கு முன்னாடி தீர்ப்பு கொடுத்திடணும்ங்கிற நோக்கத்தில் நடைமுறைகளைக் கவனிக்காமல் செயல் படுறாருன்னு சொல்லப்பட்டிருந்தது.''
""நானும் படிச்சேம்ப்பா.''…
""நீதிபதி பாலகிருஷ்ணா அயர்லாந்துக்குப் போனது பற்றியும் அங்கே அவர் மேற்கொண்ட சந்திப்புகள் பற்றியும் மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் எடுத்து மேலிடத்துக்கு அனுப்பியிருக்காம். அதுபோல, நிலுவையில் இருந்த முன்னாள் அரசு வக்கீல் ஆச்சார்யாவின் ராஜினாமா கடிதத்தை ஏத்துக்கிட்டு, பவானிசிங்கை நியமிச்சவர் கர்நாடக ஹைகோர்ட்டின் பொறுப்பு நீதிபதி ஸ்ரீதர் ராவ்னும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆச்சார்யாவுக்குப் பதிலா கர்நாடக அரசு சார்பில் 4 வக்கீல்களின் பெயர் கொண்ட லிஸ்ட் அனுப்பப்பட்டும் அதில் இல்லாத பவானி சிங்கை நீதிபதி ஸ்ரீதர்ராவ் நியமிச்சிருக்காரு. அதோடு, தன்னோட மகனுக்கு எதிரா நடக்கும் ஒரு வழக்கில் ஆஜரான வக்கீல்களைக் கூப்பிட்டு நீதிபதி ஸ்ரீதர்ராவ் மிரட்டினார்னு வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினாங்க. அதனால போன வியாழக் கிழமையன்னைக்கு அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள ஹைகோர்ட்டுக்கு ஸ்ரீதர்ராவ் மாற்றப்பட்டுட்டாரு. ஹைகோர்ட் தலைமை நீதிபதியா போகணும்ங்கிறதுதான் அவரோட கனவு. ஆனா, வழக்கமான நீதிபதியாகத்தான் மாற்றப்பட்டிருக்காரு. ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டிருக்குது. அந்த கமிட்டி, சொத்துக் குவிப்பு வழக்கு நீதிபதி பால கிருஷ்ணாவை வியாழக்கிழமையன்னைக்குக் கூப்பிட்டு விளக்கம் கேட்டிருக்குது.''
""இதெல்லாம்தானே சுப்ரீம்கோர்ட்டில் ஜெ. தாக்கல் செய்த மனு மீதான விசா ரணைக்கான பதில்.''…
""ஆமாம்.. அதனாலதான் வியாழக்கிழமையன்னைக்கே போயஸ் கார்டன் டென்ஷனா இருந்தது. தி.மு.க தரப்பிலும் படபடப்புதான். நீதிபதி மற்றும் அரசு வக்கீல் மாற்றம் தொடர்பா கர்நாடக ஹை கோர்ட்டில் பேராசிரியர் பெட்டிஷன் தாக்கல் செய் திருப்பதால, அங்கேயே விசாரணை தொடரட்டும்னு சுப்ரீம் கோர்ட் சொல்லுமா, அல்லது வேறுவிதமான உத்தரவுகள் வருமான்னு வியாழக்கிழமையிலிருந்தே எதிர் பார்ப்பு கூடிடிச்சிங்க தலை வரே.. ..''
""இந்த பரபரப்புக்கு நடுவிலும் வைகைச் செல்வனை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிட்டு அவர்கிட்டே இருந்த இலாகாக்களை உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன்கிட்டே கூடுதலா கொடுத்திருக்காரே ஜெ.. அ.தி.மு.கவில் ஒழுங்கு நட வடிக்கைக்காக அமைக்கப்பட்ட நான்கு மந்திரிகள் அணியின் கூட்டம் ஜெ. தலைமையில் நடந்தப்ப அதில் உயர் கல்வித்துறை மந்திரி பழனி யப்பனும் இருந்திருக்காரே.. அவரும் இனி இந்த டீமில் இருப்பாருன்னு எதிர்பார்க்கப் படுதே!''
""பி.காம் மாதிரியே பி.பி.ஏவும் தட்சணைக்கு வசதியான கோர்ஸாச்சே?''
""துணைவேந்தர் தாண்டவனும் உடனடியா லயோலாவுக்கு விசிட் அடித்து இரண்டு கோர்ஸிலும் புதுசா ஒரு செக்ஷன் தொடங்க அனுமதி கொடுக்க, உடனடியா தொடங்கப்பட்டுடிச்சி. ஒரு செக்ஷனில் 60 பேர் வரைக்கும் சேர்க்கலாம். இந்த புது செக்ஷனில் முழுக்க முழுக்க மந்திரி சிபாரிசு ஆட்கள்தானாம். உயர்கல்வித்துறையின் இந்த புது டெக்னிக் பார்த்து மற்ற துறை மந்திரிகள் மூக்கின் மேலே விரலை வைக்கிறாங்க.''
""ரயிலில்தான் தீபாவளி-பொங்கல் நேரத்தில் கூட்டம் அதிகமானால் எக்ஸ்ட்ரா கோச் சேர்ப்பாங்க. இப்ப காலேஜ் அட்மிஷனுக்கேவா.. பலே.. பலே..''
""காங்கிரஸ் கட்சிக்குள் புகைச்சலா இருக்கிற ஒரு விஷயத்தை சொல்றேன்.. .. கடலூர் எம்.பி கே.எஸ்.அழகிரி இலங்கைக்குப் போய் அங்குள்ள தமிழ் அமைச்சர் ஆறுமுக தொண்டைமானோட தாத்தா சிலை திறப்பு விழாவில் கலந்துக்கிட்டாரு. அவரோடு புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் போனாரு. சிலை திறப்பு விழாவில் கலந்துக்கிட்ட வரைக்கும் சரி. அதற்கப்புறம் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் அவரோட தம்பி பசில் ராஜபக்சேவையும் அழகிரி சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றியும் கச்சத்தீவு விவகாரம் பற்றியும் பேசியிருப்பதுதான் காங்கிரஸ் தலைவர்களையே கோபப்படுத்தி யிருக்குது.''
""என்ன சொல்றாங்க?''
""சிலை திறப்பு விழாவுக்கு தமிழக காங்கிரசிலிருந்து யாரையாவது கூப்பிடுங்கன்னு ராஜபக்சே கொடுத்த ஆலோசனைப்படிதான் அழகிரி அழைக்கப்பட்டாராம். கே.எஸ்.அழகிரியோ ப.சிதம்பரத்தோட ஆதரவாளர். இதை ராகுல்காந்திகிட்டே ஜி.கே.வாசன் தரப்பு புகார் செய்திருக்குது. ஜெயந்தி நடராஜனும் நேரில் ராகுலை சந்திச்சி விவரங்களை சொல்லியிருக்காரு. ஏற்கனவே ஈழப் பிரச்சினையில் காங்கிரஸ் துரோகம் பண்ணிட்டதா தமிழ்நாட்டு மக்கள் கோபமா இருக்காங்க. இதிலே இவர் போய் ராஜபக்சேவை சந்திச்சி மீனவர் பிரச்சினை பற்றி பேசவேண்டிய அவசியமென்ன?
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்கிட்டே சொல்லிட்டுப்போனாரா? ப.சியோட அட்வைஸ்படி செயல்படுறாரான்னு கேட்டிருக்காங்க. ப.சி.கிட்டே இது பற்றி விசாரிக்கிறேன்னு ராகுல் சொல்லியிருக்காராம்.''
""ஜெ.வை பிரகாஷ்காரத் சந்திச்ச பிறகு தமிழக சி.பி.எம்மின் மாநிலக் குழுக் கூட்டம் நடந்திருக்குதே..''
""தலைவரே அந்த சந்திப்பு சம்பந்தமா சி.பி.எம் தோழர்கள்கிட்டே பேசினேன். தேர்தல் தொடர் பாகத்தான் ஜெ.வும் பிரகாஷ்காரத்தும் விவாதிச்சிருக்காங்க. மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவு பாது காப்பு திட்டம் இந்தியாவில் 289 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுது. அதாவது, கிட்டதட்ட பாதி இந்தியாவை இத்திட்டம் கவர் பண்ணுமாம். அதை அப்படியே ஓட்டு அரசியலாக்கி 2014 ஜனவரி அல்லது பிப்ரவரியில் எம்.பி. தேர்தலை நடத்திடணும்ங்கிறதுதான் காங்கிரசோட திட்டம்னு ஜெ.வும் பிரகாஷ்காரத்தும் பேசியிருக்காங்க. அப்ப காரத், வரும் தேர்தலில் காங்கிரசோ பா.ஜ.கவோ ஆட்சி அமைக்க முடியாது. மூன்றாவது அணிக்குத்தான் பிரகாசமான வாய்ப்பு இருக்குன்னு சொல்ல, உடனே ஜெ., அப்படின்னா மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் நான்தான்னு அறிவிச்சிடுங்க. அப்புறமா கூட்டணி தொடர்பான மற்ற விஷயங்களைப் பேசலாம்னு சொல்லியிருக்காரு. அதைக் கேட்டதும் பிரகாஷ் காரத் அதிர்ச்சியடைஞ்சிட்டாராம். இப்படி ஒரு நிபந்தனையை எடுத்த எடுப்பிலேயே ஜெ. விதிப்பார்னு அவர் எதிர்பார்க்கலை. என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம, மற்ற நிர்வாகிகள்கிட்டேயும் பேசிட்டு சொல்றேன்னு சொல்லியிருக்காரு.''
""தேசிய கட்சியான பா.ஜ.க.வின் கவனமெல்லாம் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் திருச்சி மாநாட்டில் இருக்குதே?''
""மந்திரி பி.வி.ரமணா தன்னோட வேலையைக் கச்சிதமா செஞ்சிக்கிட்டிருக்காருன்னு கார் கம்பெனிக்காரங்க புலம்புறாங்க. அதைப் பற்றி நான் சொல்றேன். பிரபல கார் கம்பெனிகளில் கார் உற்பத்தி செய்யும்போது துண்டாக விழும் ஸ்க்ராப்புகளை தன்னோட ஆளான ஆனந்த்துக்குத்தான் தரணும்னு மந்திரி நெருக்கடி கொடுக்கிறாராம். கம்பெனிகளோ நல்ல விலை தருபவர்களுக்குத்தான் அதைக் கொடுக்கும். மந்திரி நெருக்கடி கொடுப்பதால இது சம்பந்தமா யார்கிட்டே புகார் சொல்வதுன்னு தெரியாம கார் கம்பெனி முதலாளிகள் முழிக்கிறாங்க.''
லாஸ்ட் புல்லட்!
போயஸ் கார்டன் பகுதியில் ஆதரவற்ற குழந் தைகளுக்கான காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு லாரியில் குடிதண்ணீர் சப்ளை செய்யப்படுவது வழக்கம். 25 நாட்களுக்கு முன்பு குடி தண்ணீர் லாரி ஓட்டி வந்த டிரைவர், ஜெ. வீட்டின் காம் பவுண்டு முன்பாக லாரியை நிறுத்திவிட்டு, கற்களை எடுத்து ஜெ. வீட்டின் மீது எறிய, பதறிப்போன பாது காப்பு அதிகாரிகள் அந்த டிரைவரைப் பிடித்து செமத்தியாக கவனித்துள்ள னர். எனக்கு இந்தம்மா ஆட்சியில்தான் அரசு டிரை வர் வேலையைப் பறிச்சாங்க. அந்தக் கோபத்தில் கல்வீசிட் டேன் என டிரைவர் சொல்ல, அவரை ரிமாண்டு செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.
மன்னார்குடியை சேர்ந்த துணை பி.டி.ஓ. ராஜாவுக்கும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் நடராஜ னுக்கும் திட்டப்பணிகள் குறித்து உரசல் ஏற்பட்டு, ராஜா சஸ்பெண்ட் செய்யப் பட்டது பற்றி ஏற்கனவே நக்கீரன் வெளியிட்டிருந்தது. ராஜா ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய, திட்டப்பணிகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க கோர்ட் உத்தர விட்டது. அவசர அவசரமாக ஒவ்வொரு தாலுகாவிலும் அதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறார் கலெக் டர். டெண்டர் விடாத பணிகளுக்கும் ஆவணங்களை உருவாக்கும் வேலைகள் வேகமாக நடைபெறுகின்றன. |