"ஆணவத்தில் அழியும் மாநகர தந்தை' என்ற தலைப்பில் கோவை மாநகராட்சியின் மேயர் செ.ம.வேலுச்சாமியின் ஆணவங்களை நாம் 2012 மார்ச் 26 நக்கீரன் இதழில் வெளிப்படுத்தியிருந்தோம்.
இதோ... அதை நிரூபணம் செய்யும்படி கோவையின் 21 கவுன்சிலர்கள் செ.ம.வேலுச்சாமி மீது புகார் செய்ய 45-வது வார்டு கவுன்சிலர் குணாளன் தலைமையில் ஜெ.வை சந்திக்க சென்னையில் காத்திருக்கின்றனர்.
குணாளன் தலைமையிலான கவுன்சிலர்களிடம் பேசினோம்.
""மேயர் வேலுச்சாமி மேல மட்டும் புகார் கொடுக்க அம்மாவை சந்திக்க நாங்க வரலை. அவுரோட அடிவருடி களாக இருக்கற அம்மன் அர்ஜுனன், சாரமேடு பெருமாள், கே.ஆர். ஜெய ராமன், ஆதி நாராயணன், தளபதி செந்தில், பிரபாகரன், வெண்தாமரை பாலு... இவுங்க மேலயும் சேர்த்துதான் புகார் கொடுக்க வந்திருக்கோம். இந்த ஏழு பேரும் ஆட்டமோ ஆட்டமுங்க.
ஒரு தெருவுல ஏதாவது கட்டிடம் கட்டறாங்கன்னு வச்சுக்கோங்க. உடனே அந்த பில்டிங்க கட்டறவங்ககிட்ட "விதிமுறை மீறி நீங்க பில்டிங் கட்டி யிருக்கீங்க... நாங்க மேயர்கிட்ட சொல்லி வீடே கட்டவுடாம பண்ணட்டுமா?'ன்னு மிரட்டி பணம் கறக்குறதுதான் இவங்க வேலை. அதுல மேயருக்கு பெரும் பங்கு போய்ச் சேர்ந்துரும்.
ஆனா அம்மன் அர்ஜுனனோட பையன் பேர்ல லைசென்ஸ் வாங்கிக் கொடுத்தாரு வேலுச்சாமி. அதுக்கப்புறம் இப்ப தளபதி செந்திலுக்கு வாங்கிக் கொடுத்து பல இலட்சங்களை பார்த்துட்டி ருக்காரு மேயரு.
இப்ப ஆர்.எஸ்.புரம் பரியல் கிரவுண்டுல கட்டிட்டிருக்கற அத்தனை கடைகளுக்கும் ஆதி நாராயணன்தான் பொறுப்பு. டாஸ்மாக் பார் எடுக்கணும்னா அம்மன் அர்ஜுனன், வெண்தாமரை பாலுவையும் கவனிக்காம எடுக்கவே முடியாது. இவுங்கள பகைச்சுக்கிட்டா வாழவே முடியாது. இதையெல்லாம் புகாரா அம்மாவுக்கு 40 கவுன்சிலர்கள் சேர்ந்து நாங்க அனுப்பி வச்சோம். ஆனா அம்மாவுக்கு நாங்க அனுப்புன அந்த புகார்க் கடிதம் மேயருக்கே எப்படியோ திரும்பி வந்துருந்துச்சு.
உடனே... "நீங்க எம்மேல புகார் சொல்லி அனுப்பின கடிதம் இதோ எங்கிட்டயிருக்கு. என் செல்வாக்கைப் புரிஞ்சுக்கோங்க...
இனி உங்க வார்டுகள்ல எந்த வேலை நடக்குதுன்னு நான் பார்த்துக்கறேன்'னு மிரட்டினவரு... அதுபோலவே எங்க வார்டுகளுக்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாத்தையுமே கெடப்புல போட்டுட்டாரு.
பொதுமக்கள் "இன்னுமா தோண்டிப் போட்ட ரோடைக்கூட போடமாட்டீங்க'ன்னு எங்ககிட்ட சண்டைக்கே வர ஆரம்பிச்சுட்டாங்க. அதுனாலதான் அம்மாவை நேரா சந்திச்சு மேயர் மேலயும், அவுரோட அடி வருடிகள் மேலயும் புகார் கொடுக்க வந்திருக்கோம்'' என கொதிக்கிறார்கள்.
இவர்களின் கொதிப்பையறிந்த மேயர் செ.ம. வேலுச்சாமி பத்திரிகைகளிடம், ""கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்படற அந்த கவுன்சிலர்களை என் மேல பழி சொல்லி தூண்டி விட்டதே எங்க கட்சி எம்.எல்.ஏ.க்களான மலரவனும், வி.சி.ஆறுக்குட்டியும்தான்'' என்றார்.
"நீங்கதான் மேயருக்கு எதிராக கவுன்சிலர்களை தூண்டி விடறீங்களாமே?' என கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான மலரவனிடம் கேட்டோம்.
""கோவை மாநக ராட்சிய சிறந்த மாநகராட்சியா தேர்ந் தெடுத்தாங்க. என்ன வளர்ச்சிப் பணிகள் நடந்துருக்குன்னு பாருங்க? என் தொகுதி மேம்பாட்டு நிதியைக் கூட மேயர் பயன்படுத்திக் கலை.
இதையெல்லாம் அம்மா கிட்ட சொல்றதுக்காக இங்க பாதிக்கப்பட்ட கவுன்சிலர்கள் போயிருக்காங்க. அதுக்கு நான்தான் கார ணம்னு சொல்றது எப்படி நியாயமாகும்?'' என கொதிக்கிறார் படபடத்தபடி.
கவுண்டம்பாளைய தொகுதி எம்.எல்.ஏ.வான ஆறுக்குட்டியோ ""கோவை மாநகர்ல இந்த ரெண்டு வருஷங்களா எந்த வேலையும் நடக்கறதில்லை. அது சம்பந்தமா மாமன்றத்துல பேசறதுக்கு கவுன்சிலர்கள் எந்திரிச்சா கடுமையான வார்த்தைகளை அந்த கவுன்சிலர்கள் மேல வீசி அடக்கி வச்சர்றாரு மேயர்.
கவுன்சிலர்களை வச்சு அரசியல் பண்ண வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நானே ஏற்காடு இடைத் தேர்தலுக்கப்புறம் நடந்த சின்ன ஆக்ஸிடெண்ட்ல கால்ல ஆபரேஷன் பண்ணி படுத்திருக் கேன். இந்த டைம்ல என் மேல புகாரா?
மேயர் வேலுச்சாமி சில பேரை அடிவருடிகளா வச்சுக் கிட்டு ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காரு. அந்த ஆட்டம் அம்மா கவனத்துக்கு போற வரைக்கும்தான். அதுக்கப்புறம் யாரு ஆட்டம் காணப் போறாங்கன்னு நீங்களே பாருங்க?'' என உண்மை யாய் வெடிக்கிறார்.
கவுன்சிலர்கள் மேயர் மீது சொல்லும் புகார்கள், எம்.எல். ஏ.க்கள் மேயர் மீது சொல்லும் புகார்கள், மேயர் எம்.எல்.ஏ.க்கள் மீது சொல்லும் புகார்கள்... என கோவை அ.தி.மு.க. மீது புகார் அம்புகள் எய்தப்படுகின்றன. பார்ப் போம். புகார் அம்புகள் யாரை வீழ்த்தும் என்று.