என் மகன் விடுதலை ஆவான்!
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உறுதி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு 2000ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கருணை மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் 2011ம் ஆண்டுதான் குடியரசுத் தலைவர் அதனை நிராகரித்தார்.
இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வருகிறது.
தற்போது உச்சநீதிமன்றத்தில் 15 பேருக்கு கிடைத்திருக்கும் தீர்ப்பு ராஜீவ்காந்தி கொலை வழக்குக்கும் பொருந்துவதால் பேரறிவாளன் விடுதலை ஆகிவிடுவார் என தான் நம்புவதாக அவரது தாயார் அற்புதம்மாள் கூறினார்.
சென்னை புத்தகக் கண்காட்சியில் மரண தண்டனைக்கு எதிரான புத்தகங்களையும், படங்களையும் கொண்ட கடையை வைத்துள்ள அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது, தூக்கு தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், அது நீதிபதிகளின் மனநிலையையும், காவல்துறையினர் வழக்கை பதிவு செய்யும் பிரிவுகளையும் பொருத்தே கொடுக்கப்படுகிறது.
பேரறிவாளனுடன் கைது செய்யப்பட்ட 19 பேர் விடுதலை செய்யப்பட்ட பிறகும் 4 பேரை மட்டும் சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. எனவே எனது மகன் வரும் 29ஆம் தேதி விடுதலை அடைவான் என்று நம்புகிறேன் என்றார். மேலும்,ஆயுள் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.