இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது நிய+ஸிலாந்து
இந்தியாவுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் பிரின்டன் மெக்கலமின் சதத்தினால் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொண்டது.
நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது.
எனினும் 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த மெக்கலம் மற்றும் பி.ஜே. வொட்லின் ஆகியோர் மூன்றாவது நாள் முழுவதும் களத்தில் இருந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 158 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் மெக்கலம் டெஸ்ட் அரங்கில் தனது 9 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 237 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் ஆட்டமிழக்காது 114 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது அவர் டெஸ்ட் அரங்கில் நான்காவது நியூஸிலாந்து வீரராக 5000 ஓட்டங்களை எட்டினார். மறுபுறத்தில் வொட்லின் 52 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். இதன்படி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் நியூஸிலாந்து அணி 99 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது.
இதன் மூலம் நியூஸிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 6 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருந்தது. போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் தோல்வியைத் தவிர்க்க நியூஸிலாந்து தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
முன்னதாக நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 192 ஓட்டங்களுக்கு சுருண்டதோடு இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களை குவித்தது. இன்று போட்டியின் நான்காவது நாளாகும்.