சென்னை அடையாரில் அமைந்துள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் அண்மையில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் வெளியிட்ட கருத்தைக் கூட்டமைப்பின் அரசியலில் ஒரு திருப்பு முனையாக கருதலாம். இந்தியாவின் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத் தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கின்றோம் என்று அச்சொற்பொழிவில் அவர் கூறினார்.
இனப் பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய தீர்வை நாடி நிற்கின்றது என்பது இதுவரை தெளிவு இல்லாமலேயே இருக்கின்றது. தனது தீர்வு எது என்பதைக் கூட்டமைப்பு தீர்வுத் திட்டமொன்றின் மூலமோ கோரிக்கை மூலமோ வெளிப்படுத்தவில்லை. சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று கூறி வருகின்ற போதிலும் அது எத்தகைய தீர்வு என்று சொல்லவில்லை.
இப்போது சம்பந்தன் முன்வைத்துள்ள கருத்து இனப் பிரச்சினை தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் ஒரு திருப்பம். இத்தீர்வு நியாயமானது மாத்திரமன்றிச் சரியான அணுகுமுறையைப் பின்பற்றினால் காலப்போக்கில் நடைமுறைச்சாத்தியமானதாக அமையக் கூடியதுமாகும். பின்பற்ற வேண்டிய அணுகுமுறை பற்றிப் பார்ப்பதற்கு முன் இத்தீர்வைக் கூட்டமைப்பின் கொள்கையாக முன்வைப்பதிலுள்ள சங்கடங்களை நோக்குவோம்.
முதலாவதாக இந்தியாவின் மாநிலங்களுக்குச் சமமான தீர்வை ஏற்கனவே நிராகரித்த நிலையில் இப்போது அதைக் கூட்டமைப்பு வட்டாரத்தினால் ஏற்க வைக்க வேண்டிய சிரமமான பணி சம்பந்தனுக்கும் அவரது கருத்தை ஆதரிப்பவர்களுக்கும் முன்னால் இருக்கின்றது. இந்திய மாநிலங்களையொத்த தீர்வு என்பதைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் ஆனந்த சங்கரி நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் ஆனந்த
சங்கரியினால் முன்வைக்கப்பட்ட இக் கருத்தைக் கூட்டமைப்புத் தலைவர்கள் நிராகரித்தார்கள்.
சந்திரிக்காவின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தையும் கூட்டமைப்பு நிராகரித்தது.
சந்திரிக்காவின் தீர்வுத் திட்டம் பெருமளவில் இந்திய மாநிலங்களை ஒத்ததாகவும் சில விடயங்களில் அதனிலும் பார்க்க மேலான அதிகாரங்களைக் கொண்டதாகவும் இருந்தது. உதாரணத்துக்குச் சிலவற்றைக் கூறலாம். இந்திய அரசியலமைப்பின் 3 ஆவது சரத்தின் படி மாநில அரசாங்கத்துடன் ஆலோசனை கலந்து (Consultation) மாநிலத்தின் எல்லைகளில் பாராளுமன்றம் மாற்றம் செய்யலாம். இதற்கு மாநில அரசாங்கத்தின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. மாநில அரசாங்கத்துக்கு அறிவித்து விட்டு மாற்றம் செய்யலாம் என்பதே இதன் அர்த்தம்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைப் பிரித்துத் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஆந்திரப் பிரதேச சட்ட சபை எதிர்ப்பு தெரிவித்த போதிலும் மத்திய அரசாங்கம் அந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முயற்சியை முன்னெடுப்பது இதையே குறிக்கின்றது. சந்திரிக்கா முன்வைத்த தீர்வுத் திட்டத்தின் படி பிராந்திய சபையின் எல்லைகளையோ அதிகாரங்களையோ விடயங்களையோ பிராந்திய சபையின் சம்மதம் இல்லாமல் மாற்ற முடியாது.
மாநிலங்களவையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறும் தீர்மானமொன்றின் அடிப்படையில் மாநிலத்துக்குரிய விடயங்கள் தொடர்பாகவும் மத்திய அரசாங்கம் சட்டம் இயற்றி நடைமுறைப் படுத்துவதற்கு இந்திய அரசியலமைப்பின் 249 ஆவது சரத்து இடமளிக்கின்றது. சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தில் பிராந்திய சபைகளுக்குரிய விடயங்கள் தொடர்பாக மத்தி சட்டம் இயற்ற முடியாது. இவை போன்ற பல விடயங்கள் உள்ளன.
ஆனந்த சங்கரியின் ஆலோசனையையும் சந்திரிக்காவின் தீர்வுத் திட்டத்தையும் தனிநாடு என்ற நிலையில் நின்று நிராகரித்ததன் விளைவாகத் தனிநாடு பற்றிய சிந்தனை கூட்டமைப்புக்குள் ஆழமாகவே வேரூன்றியது. இன்று அரசியல் தீர்வு பற்றிப் பேசுபவர்கள் மாத்திரமன்றி தனிநாட்டு நிலைப்பாட்டைக் கொண்டவர்களும் கூட்டமைப்பின் தலைமை மட்டத்தில் இருக்கின்றனர். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே தனி நாட்டுக்கு ஆதரவான கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சம்பந்தன் இப்போது முன்வைத்திருக்கும் கருத்துக்கும் கடினமான உட்கட்சிப் போராட்டத்துக்கூடாகவே ஆதரவைப் பெற முடியும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வில் ஒன்றுபட்ட கருத்து நிலவாமை தான் கூட்டமைப்பின் மிகப் பெரிய பலவீனம் எனக் கூறலாம். இனப் பிரச்சினைக்கான தீர்வுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதைக் கூட்டமைப்புத் தலைமை தவிர்த்து வருவதற்கு இதுவே பிரதான காரணம். இதே மாதிரியான அரசியல் தொடர்வது தமிழ் மக்கள் நிரந்தரமாகப் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழும் நிலையையே ஏற்படுத்தும். இனப் பிரச்சினை தீராதிருக்கும் வரை ஒன்றன் பின் ஒன்றாக அன்றாடம் பிரச்சினைகள் தலைதூக்கவே செய்யும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தீர்வு பற்றிய நிலையான இலக்கு இருக்க வேண்டியது பிரதானமான தேவை. இந்த இலக்கை அடைவதற்கு யதார்த்தத்துக்கு அமைவான அணுகுமுறை மற்றைய விடயம்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சியை தமிழ்த் தலைமை ஒரே இலக்குடன் முன்னெடுக்கவில்லை. சமஷ்டி, தனி நாடு, அதிகாரப் பகிர்வு என்பவற்றை ஒரு காலத்தில் ஏற்பதும் பின்னர் கைவிடுவதும் மீண்டும் ஏற்பதுமாக நிலையற்ற நிலைப்பாட்டையே தமிழரசுக் கட்சி முதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை பின்பற்றின. தீர்வு முயற்சியில் இதுவரை எவ்வித முன்னேற்றமும் அடைய முடியாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சம்பந்தன் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கூட்டமைப்புத் தலைவர்கள் முழுமையான தீர்வுக்கு இட்டுச் செல்லும் தீர்வாக ஏற்றுச் செயற்படுவார்களேயானால் முழுமையான தீர்வை நோக்கிய வலுவான அடியெடுப்பாக அமையும்.
இந்திய மாநிலங்களிலும் பார்க்கக் கூடுதலான சுயாட்சி அதிகாரம் தான் முழுமையான அரசியல் தீர்வாக முடியும். சமகால யதார்த்தம் அவ்வாறான தீர்வுக்குச் சாதகமானதாக இல்லாதிருப்பதால் படிப்படியான வளர்ச்சிக் கூடாகவே அந்தத் தீர்வை அடைய முடியும். இந்த நடைமுறையில் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு அடுத்த வளர்ச்சிக் கட்டம் ஆகலாம். அரசியல் தீர்வு முயற்சியில் படிப்படியான வளர்ச்சியே இன்றைய யதார்த்தம் என்ற நிலையில் குறுகிய கால வேலைத்திட்டத்துக்கு அமைவான தீர்வாக இந்திய மாநில மாதிரியை ஏற்றுச் செயற்படுவது அரசியல் தீர்வை அடைவதற்கான சிறந்த வழியாகும்.
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு எது என்பதிலும் எவ்வாறான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பதிலும் கூட்டமைப்புத் தலைமை இணக்கங் கண்டு செயற்படாமல் சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத் தரும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருப்பது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எவ்விதத்திலும் உதவப் போவதில்லை. எனவே நடைமுறைச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளைக் கைவிட்டுச் சாத்தியமான வழிமுறைக்கும் கூட்டமைப்பு திரும்ப வேண்டும். இது தொடர்பான கருத்துப் பரிமாறலுக்கான ஆரம்பமாகச் சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து அமைகின்றது.
தீர்வுக்கான முயற்சியை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறையில் சர்வசன வாக்கெடுப்பு பிரதான இடம் வகிக்கின்றது. இப் பத்தி முன்னரும் பல தடவைகள் சுட்டிக்காட்டியதைப் போல பதின்மூன்றாவது திருத்தத்திலும் மேலான வலியுறுத்திய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்துக்குள் சங்கமமாகி நிற்கின்றன. ஏனைய இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகளும் ஆர்வலர்களும் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் நியாயமான தீர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதை சாதக அம்சமாகக் கொண்டு அவற்றுடன் நேச உறவை வளர்ப்பதற்குத் தமிழ்த் தலைமை முன்வர வேண்டும்.
அதே நேரம் பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளை முற்றாகப் புறக்கணிக்க முடியாது. இக் கட்சிகள் இன்று பிழையான போக்கைப் பின்பற்றுகின்ற போதிலும் இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக முன்னர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டை கொள்கையளவில் கைவிடவில்லை. இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி சென்ற வருடம் அதன் தேசிய மாநாட்டு அறிக்கையில் இனப் பிரச்சினையின் தீர்வாகப் பிரதேச சுயாட்சி கோட்பாட்டை உள்ளடக்கியதை உதாரணமாகக் கூறலாம்.
மேலும் இக் கட்சிகள் சந்திரிக்காவின் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டத்துக்கு முழுமையான ஆதரவை அளித்தன. என்பதையும் மறக்கக்கூடாது. அரசியல் தீர்வுக்குச் சாதகமான பிரசாரம் தென்னிலங்கையில் இடம்பெறும் போது இக்கட்சிகள் அதில் இணைந்து கொள்வதற்கான சாத்தியக்கூறு உண்டு.
அரசியல் தீர்வு நடைமுறையில் தென்னிலங்கையில் சாதகமான பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை விளங்கிக் கொண்டே எமது அணுகுமுறையைத் தீர்மானிக்க வேண்டும்.
tinakural