கிளிநொச்சியில் இரு இளைஞர்களை தேடுகிறது இராணுவம்: தகவல் வழங்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசு

கிளிநொச்சி நகர் பகுதிகள் எங்கும் இரண்டு இளைஞர்களைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா பணம் வழங்கப்படும் என அறிவித்து இரு இளைஞர்களின் புகைப்படத்துடன் கூடிய துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அத்துண்டுப் பிரசுரங்களில் தேவைப்படுவோர் எனத் தலைப்பிடப்பட்டு கோபி- கசியன் , நவநீதன்- அப்பன் என இரண்டு இளைஞர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களின் புகைப்படத்துடன், இவர்கள் அதிகளவான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் என்றும் இவர்கள் பற்றிய தவவல்களை 0113135680 , 0766911617 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இவர்கள் பற்றிய தகவல்களைத் தருபவர்கள் பற்றிய இரகசியம் பேணப்படும் எனவும் அத்துண்டுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இத்துண்டுப் பிரசுரங்களை யார் எங்கிருந்து வெளியிட்டு ஒட்டினார்கள் என்பது பற்றிய விவரங்கள் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
இதேவேளை கிளிநொச்சியின் நகர் உட்பட பலபகுதிகளில் இராணுவத்தினரது சோதனைகள், சுற்றிவளைப்புக்கள் இன்றும் இடம்பெற்றுவருகின்றன. இதனால் மக்கள் அச்சத்துடனேயே காணப்படுகின்றார்கள்.